Advertisement

ஜாதி பார்த்து பதவிகளை நிரப்பும் திராவிட கட்சிகள்!

Share

''தேர்தல்ல போட்டியிட, 'சீட்' வேணுமா, தலைவர் பதவி வேணுமான்னு, கேள்வி கேட்டிருக்காங்க பா...'' என, பெஞ்ச் விவாதத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.

''எந்தக் கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் ஹசீனா சையது, சுதா உட்பட சிலரிடம், 'வீடியோ கான்பரன்ஸ்'ல, டில்லி மேலிடம் நேர்காணல் நடத்தியிருக்குது... அப்ப, 'கட்சியில பதவி வேணுமா அல்லது சட்டசபை தேர்தல்ல சீட் வேணுமா'ன்னு கேட்டிருக்காங்க பா...

''அதுக்கு, 'கட்சி பதவியே போதும்'னு சொன்னதால தான், சுதாவை மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்வு பண்ணியிருக்காங்க...'' என்றார், அன்வர்பாய்.

''அது சரி... தி.மு.க., விடம் அடிச்சு புடிச்சு வாங்குற சொற்ப சீட்டுகளை, பழம் தின்னு கொட்டை போட்டவங்க தட்டிட்டு போயிட்டா, நமக்கு எதுவும் தேறாதுன்னு நினைச்சிருப்பாங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''அம்மா கிச்சன் உணவு சப்ளை, ஒரு மாசத்தை தாண்டியும் தொடருதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''ஆமா... இதை, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தானே நடத்திண்டு இருக்கார்...'' என, சந்தேகம் கேட்டார் குப்பண்ணா.

''ஆமாம்... மதுரையில இருக்கிற, 'கோவிட் கேர் சென்டர்'கள்ல சிகிச்சையில இருக்கிறவங்களுக்கு, மாவட்ட நிர்வாகத்தோட சேர்ந்து, அமைச்சரின், 'அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட்' மூலமா, தினமும் மூணு வேளையும் உணவு வழங்கிட்டு இருக்காருங்க...

''இதுக்காகவே, 'அம்மா கிச்சன்'னு தனியா உருவாக்கியிருக்காருங்க... போன மாச ஆரம்பத்துல துவங்குன இந்த திட்டத்தை, கொரோனா பாதிப்பு குறையாததால, இந்த மாசமும் நீட்டிச்சிருக்காருங்க...''அதோட, கோவிட் கேர் சென்டர்ல, கடைசி கொரோனா நோயாளி இருக்கும் வரை, இலவச உணவு சப்ளையை தொடரவும், அமைச்சர் தரப்பு முடிவு பண்ணியிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ஜாதி, பேதம் பார்க்கறது இல்லைன்னு திராவிடக் கட்சிகள் பேசுறது எல்லாம், வெறும் பம்மாத்து தான் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''சில மாதங்களுக்கு முன்னாடி, திருச்சி மாவட்ட, தி.மு.க.,வை மூணா பிரிச்சு, செயலர்களை ஸ்டாலின் நியமிச்சார்... இதுல, மாவட்டத்துல பெரும்பான்மையா இருக்கற முத்தரையர், வெள்ளாளர், முக்குலத்தோர்னு, மூணு சமுதாயத்துக்கும் வாய்ப்பு குடுத்திருந்தார் ஓய்...

''இப்ப, அ.தி.மு.க., தரப்புலயும், அதே மாதிரி, முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, தற்போதைய அமைச்சர் நடராஜன், முன்னாள் எம்.பி., குமார்னு மூணு பேரை, மாவட்டச் செயலர்களா நியமிச்சிருக்கா... இவாளும் மேற்கண்ட மூணு சமுதாயத்தை சேர்ந்தவா தான்...''இப்படி ஜாதிக்கு ஒரு பிரதிநிதித்துவம் குடுத்தா தான், சட்டசபை தேர்தல்ல ஓட்டுகளை வளைக்க முடியும்னு, ரெண்டு கட்சிகளுமே கணக்கு போட்டு செயல்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''இதைத் தான், படிக்கிறது ராமாயணம்... இடிக்கிறது பெருமாள் கோவில்னு, எங்க ஊருல சொல்லுவாவ வே...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Raghavan - chennai,இந்தியா

    இந்தியாவில் ஜாதி அரசியலை ஒழிக்கமுடியாது. அதுவும் தமிழகத்தில் எந்த ஒரு கொம்பனாலும் ஜாதி அரசியலை ஒழிக்கவேமுடியாது. இது நிதர்சனமான உண்மை..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஜாதி வோட்டுகளைத் தான் நம்பி உள்ளனர் என்பது உலகறிந்த ரகசியமாயிற்றே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement