Advertisement

புதிய கல்வி கொள்கை சாதகமா, பாதகமா?

Share

கடந்த, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, புதிய கல்வி கொள்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது.


34 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டுள்ள, இந்த கல்வி கொள்கையில், ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி அல்லது பிராந்திய மொழி பயிற்று மொழியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது, குழந்தைகள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். அரசு பள்ளிகளுக்கு பிள்ளைகளை, பெற்றோர் அனுப்ப முன்வருவர். தேய்ந்து கொண்டிருக்கும் அரசு ஆரம்ப பள்ளிகள், மீண்டும் புத்துயிர் பெறலாம். இருந்தாலும், ஆங்கில மொழிக்கான முக்கியத்துவம் குறைக்கப்படாமல் இருப்பதும் அவசியம்.


ஏனெனில், உலகளாவிய வாய்ப்புகளை மாணவர்கள் பெற, ஆங்கிலம் கட்டாயமாகும். அதேநேரத்தில், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு, கல்வி உரிமை சட்டத்திற்கு எதிராக உள்ளது; பள்ளி படிப்பை மாணவர்கள் பாதியில் கைவிடலாம், இடைநிற்றல் அதிகரிக்கும் என்ற, விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, இந்த விஷயத்தில், மாற்றம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்கலாம்.


மேலும், மாணவர்களை பள்ளி பருவத்திலேயே தொழிற்கல்வி கற்க அனுமதிப்பது, அவர்கள் சொந்தக்காலில் நிற்க உதவும்; பிரதமர் மோடி தெரிவித்தபடி, வேலை தேடுவோரை உருவாக்காமல், வேலை வழங்குவோரை உருவாக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. மாணவர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்ள, மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்பது வரவேற்கத்தக்கது.இருப்பினும், சமஸ்கிருதம் உட்பட, எந்த மொழியையும், எந்த மாநிலத்தவர்கள் மீதும் திணிப்பது சரியாக இருக்காது. இந்த விவகாரத்தை, மாணவர்கள், பெற்றோர் விருப்பத்திற்கு விட்டு விடுவதே நல்லது. அதனால், மொழி திணிப்பு சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்கலாம். எம்.பில்., டிகிரி ரத்து, பட்டப்படிப்பு நான்காண்டு காலத்திற்கு மாற்றம், பட்டப்படிப்பிலிருந்து இடையில் வெளியேறினாலும், மீண்டும் சேர்ந்து படிக்கலாம் என்பதும் நல்ல அம்சங்களே.

இதனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையிலும், வேலைவாய்ப்பு காரணமாகவும், மாணவர்கள் பாதியில் வெளியேறினாலும், அவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில், மீண்டும் கல்லுாரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடிக்க முடியும். ஆனாலும், இவற்றை அமல்படுத்துவதில், பல்வேறு சிரமங்கள், பிரச்னைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு நடத்துவதால், தகுதி யான மாணவர்கள், தரமான கல்லுாரிகளில் சேர வாய்ப்பு உருவாகும் என்றாலும், சில பாதகங்களையும் ஏற்படுத்தலாம். கல்லுாரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என்ற, விமர்சனத்தையும் மறுப்பதற்கில்லை.


பொது நுழைவு தேர்வானது, தற்போது, மருத்துவ கல்வியில் சேருவதற்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வு போன்று, சர்ச்சைக்குரியதாக அமைந்து விடக்கூடாது. தேர்வுக்கான பயிற்சி மையங்கள், புற்றீசல்கள் போல பெருகி, ஆதாயம் பார்க்கும் சூழ்நிலை உருவாகி விடாமல், மத்திய அரசு கவனமாக செயல்பட வேண்டும்.கல்லுாரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் முறைக்கு, 15 ஆண்டுகளில் படிப்படி யாக முடிவு கட்டப்படும்; அவற்றுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படும் என்பது, அவற்றின் தரம் உயர வழிவகுக்கலாம்.கல்வி நிறுவனங்கள் இடையே ஆரோக்கியமான போட்டி உருவாகி, தரமான கல்வி கிடைக்கலாம். இருந்தாலும், மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம் உட்பட, பல விவகாரங்களில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நிகழவும் வாய்ப்பு உண்டு.இதனால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகலாம். தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் போது, அது நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டியது அவசியம். கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.


கல்விக்காக, மத்திய - மாநில அரசுகள் செலவிடும் தொகையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தி யில், 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்பதும் நல்ல அறிவிப்பே. இதன் வாயிலாக, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். குறைந்த சம்பளத்தில், உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை, பள்ளி, கல்லுாரிகளில் நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.


இதுதவிர, வேறு பல சாதகமான மற்றும் சர்ச்சைக்குரிய அம்சங்களும், புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றுள்ளன. இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவது என்பது, மாநில அரசுகளின் முழுமையான ஒத்துழைப்பை பொறுத்தே அமையும். மேலும், கல்வி கட்டண விவகாரத்திலும், மத்திய அரசு தீர்க்கமான முடிவு காண முன்வர வேண்டும். பார்லி.,யிலும், இது தொடர்பாக விரிவாக விவாதம் நடத்தி, தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்வதும் நல்லதே.தலையங்கம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement