Advertisement

'செத்த மீன் காத்துல பறக்குது...'

Share

தென்மேற்கு பருவமழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலை வேளை. 'சஷ்டியை நோக்க... சரவணபவனார்' என, மித்ராவின் மொபைல் போன் ஒலிக்க, எடுத்து பேசவும்,''ஹாய், மித்து, என்ன பண்றே,'' என வீடியோ காலில் கேட்டாள் சித்ரா.

''சும்மா, நாவல் படிச்சிட்டு இருக்கேன்,''

''நாங்கூட, மங்கலத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் வெளியிட்ட நோட்டீசை படிக்கறீன்னு நெனச்சேன்...''

''அது என்னக்கா, பிரச்னை''

''மங்கலம் ஊராட்சியில, கணக்கில வராம, ஏகப்பட்ட பைப் கனெக் ஷன் குடுத்திருக்காங்க. அத முறைப்படுத்த, 'டிபாசிட்' செலுத்த நோட்டீஸ் போட்டிருக்காங்க. இதைப்பார்த்து, டென்ஷனான ஆளுங்கட்சி தரப்பு பதிலுக்கு நோட்டீஸ் வினியோகிச்சிருக்காங்க...''


''ம்... அப்புறங்க்கா''

''உள்ளாட்சி தேர்தல் நடக்கறதுக்கு முந்தி இருந்த அதிகாரிங்க, 'வாங்கிட்டு' இஷ்டத்துக்கு, லைன் குடுத்ததால, இப்ப நோட்டீஸ் சண்டையா மாறிடுச்சு. அந்த அதிகாரி வேற பக்கம் போயிட்டாராம். ஆனா, மங்கலத்தில, இந்த சண்டைக்கு இன்னும் யாரும் 'மங்கலம்' பாட மாட்டேங்கறாங்க,''

''அதான் பிரச்னையா'' என்ற மித்து,


''அக்கா... குடிமராமத்து திட்டத்தில, சில ஊராட்சி தலைவருங்க, 'பினாமி' பேர்ல வேலை கொடுத்த மாதிரி கொடுத்துட்டு, இரண்டு நாள் 'பொக்லைன்' ஓட்டி, ஒரு லட்சம் ரூபாய எடுத்துக்கிட்டாங்களாம்'னு, அதிகாரிகிட்ட மக்கள் புகார் சொன்னாங்களாம்,''


''அப்புறம், என்னாச்சுடி''

''எல்லாம் முறைப்படிதான், நடக்குதுன்னு, அவரு 'சர்டிபிகேட்' கொடுத்துட்டாராம்,''


''அவங்களுக்கு பங்கு போவதால், அப்படித்தான், சொல்வாங்க,'' என்ற சித்ரா,

''மித்து, செத்த மீன் பறக்கறது தெரியுமா''

''வாட் யூ மீன்? என்னக்கா சொல்றே''

''சாமளாபுரம் குளத்துல, ரசாயன கழிவு கலந்ததால, மீன்கள் செத்து மிதந்திருக்கு. கலெக்டருக்கு புகார் போயி, விசாரிச்சப்ப, 'மீன் புடிக்க ஏலம் எடுத்தவங்க, வலையில சிக்கற மீன்களை கரையில வீசுவாங்க; அதுதான், காற்றுல பறந்துவந்து, மறுபடியும் தண்ணியில விழுந்துடுது,' என பொது பணித்துறையினர் பதில் சொன்னாங்களாம்,''

''அந்த பதிலையும், அதிகாரிங்க ஓ.கே., பண்ணிட்டு விட்டுட்டாங்களாம். இந்த பதில கேட்ட, விவசாயிகள், 'செத்த மீன் பறந்தாலும் பறக்கும்' என்று 'டென்ஷனா'யிட்டாங்களாம்,''

''பின்னே, ஆகாம இருப்பாங்களா... இப்படி பேசறத பாத்தா, 'பொறுப்பற்ற பணித்துறை'னு சொல்லணும் போல''


''மித்து, உடுமலையில ஒரு டாக்டர், தினமும் ஆஸ்பத்திரிக்கு போகாமலேயே, ரிஜிஸ்டரில் கையெழுத்து மட்டுமே கரெக்டா போட்டுடறார். உயரதிகாரிகளும் கண்டுக்கறதில்லையாம். எல்லாம் அந்த முருகனுக்கே வெளிச்சம்,''


''கிராமப்புறத்திலுள்ள ஆஸ்பத்திரில கூட, இப்படித்தான் நடக்குதுன்னு ரொம்ப நாளா பேச்சிருக்கு,'' சொன்ன மித்ரா,


''மார்க்கெட்டில், செம சேல்ஸ் நடக்குதாம்,'' புதிர் போட்டாள்.


''காய்கறிதானே...''


''தென்னம்பாளையம் மார்க்கெட்டில், சரக்கு விற்பனை களைகட்டுகிறது. 'சிறுசா.. பெருசா...' என கேட்டு கேட்டு, பாட்டில், 200 முதல், 400 ரூபாய்க்கு ஜோரா விக்கறாங்களாம். போலீசும் இருந்தும் கண்டுக்கறதில்லையாம்,''


''கப்பம் கட்டிட்டா, அப்றம் என்ன பிரச்னை வரப்போகுது''


''கப்பம்னு நீங்க சொன்னதும், லிங்கேஸ்வரர் ஊர் மேட்டர் ஒன்னு ஞாபகத்துக்கு வந்திடுச்சு''


''என்ன விஷயம்டி''

''கிராமப்புறங்களிலிருந்து வீடு கட்ட 'சைட்' அப்ரூவல் வழங்க, விண்ணப்பித்தால், வீட்டோட பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி 'வரி' வசூலிக்கிறார் அந்த அதிகாரி. பணம் கொடுத்தாதான், பைல் நகருதாம்,'' மித்ரா சொன்னதும், அவளின் போன், ஹரிஹரன் என எழுத்துக்களை காட்டியது.''அங்கிள் நல்லாயிருக்கீங்களா, இருங்க அம்மாகிட்ட குடுக்கறேன்,'' என்றவாறு, ''மம்மி...'' என்றதும், அவர் வந்து மொபைலை வாங்கி பேச ஆரம்பித்தார்.


''வரவர சிட்டி போலீசில், 'வி.ஐ.பி.,' சிபாரிசோடு அதிகாரிகள் படையெடுத்து வர ஆரம்பிச்சுட்டாங்க,'' என, போலீஸ் மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


''டிராபிக் அதிகாரியை திடீர்ருனு, கோவை ஏ.ஆர்.,க்கு மாத்திட்டாங்க. அங்கிருந்தவர், இங்க வந்துட்டார். லோக்கல் வி.ஐ.பி., கெடைக்கலையாம். உடனே, பூட்டுக்கு பேர் போன ஊரிலுள்ளவரை புடுச்சு இங்க வந்துட்டாராம்,''


''டாலர் சிட்டிக்கு வர்றதுன்னா, எல்லாதுக்கு அவ்ளோ ஆசையா?'' சிரித்தாள் மித்ரா.


''... புரம் சப்-டிவிஷனில் பல இடங்களில், சேவல் கட்டு, மணல் திருட்டு, 24 மணி நேரக்கு சரக்கு விற்பனை என, சமூக விரோத செயல்கள், ஓேஹான்னு நடக்குதாம். இதுக்கு கார்ணகர்த்தாவான அந்த அதிகாரி, பல 'மெமோ' வாங்கியும், 'ரெமோ' மாதிரி சுத்திட்டிருக்காராம்,''


''இத்தனைக்கும், பொள்ளாச்சி சம்பவத்தில், 'மெமோ' வாங்கிட்டு வந்தும்கூட, இன்னும் 'கரப்ஷன்' பண்ணிட்டு இருக்கார். பெரிய இடத்து செல்வாக்கு இருக்கறதால, வசூலை கொண்டு போய், அங்க கொட்டுறார். அதனாலதான், 'என்னை, யாராலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு,' கொக்கரிக்கிறார்,''


''எல்லாத்துக்கு ஒரு நேரம் வரும். அப்போ தெரியுங்க்கா... '' என ஆவேசமாக பேசிய மித்ரா, ''மண் லாரியை பிடிச்சு 'வரி' போடறதை மேடம் இன்னும் கைவிடலையாம் தெரியுங்களா?'' என்றாள்.


''இல்லையே...''


''போன வாரம், அவிநாசிகிட்ட, ஒரு மண் லாரியை சின்ன மேடம் புடுச்சு செக் பண்ணியதில், எல்லா ரெக்கார்ட்ஸ் இருந்ததால, விட்டுட்டாங்க. அதே லாரியை, பூண்டி கிட்ட புடிச்ச பெரிய மேடம், 'அதில்லை... இதில்லை'னு சொல்லி, அல்லாட விட்டுட்டாங்க...''


''லாரி டிரைவரும், விடாப்பிடியா, எல்லாம் இருக்குங்க மேடம்னு சொல்லியும், கேட்கலையாம். கடைசியா, '50 டி' கேட்டதற்கு, 25 தர்றேன்னு சொன்னதும், 'வருவாய்', போதாதுன்னு போலீசை கூப்பிட்டு, கேஸ் போடுங்கன்னு, 'விர்ர்னு' போயிட்டாங்களாம்,''


''அவங்க பல இடங்களில் இப்படித்தான், கறார் வசூல் பண்றதா, அவங்க ஆட்களே சொல்றாங்க. உயரதிகாரிதான் கேட்கணும்,''''அக்கா... கொரோனாவை காரணம் காட்டி, திருப்பூரை விட்டுட்டு போறதுக்கு, அதிகாரிக்கே மனசே வரமாட்டேங்குதாம்,''


''ஏன்டி மித்து, அவ்வளவு பாசமா?''''பசைதான் காரணம். டிரான்ஸ்பரில் வர வேண்டியவருக்கு கொரோனாவாம். அதனால, அவரு வராததால, இவர் காட்டில, இன்னும் மழையாம். சளி புடிச்சிட போகுது''


''சுகாதாரமா இருந்தால், ஒன்னும் ஆகாதுடி,'' என்று சொன்ன சித்ரா, ''ஓ.கே., செகன்ட் லைனில், பூபதி சித்தப்பா கூப்பிட்டுட்டு இருக்கார். நாளைக்கு கூப்பிடறேன் மித்து,'' என இணைப்பை துண்டித்தாள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement