Advertisement

கொரோனா ஒன்றும் கொடிய நோய் அல்ல

Share

கொசுவைக் கொல்ல கோடாரி எதற்கு.இது நான் சொன்னது அல்ல. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு தமிழக முதல்வரைச் சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் சொன்ன வாசகம். மாபெரும் மருத்துவ உண்மையை பகிரங்கமாகப் போட்டு உடைத்ததற்கு அவர்களுக்கு பாராட்டு.இரண்டு விஷயங்கள் இதில் வெளிவந்தன. ஒன்று, கொரோனா நீங்கள் பயப்படுவது போல் அவ்வளவு ஒன்றும் பயங்கரமான நோய் இல்லை; அது வெறும் கொசுதான்!இரண்டாவது இதைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் இதுவரை உபயோகித்து வரும் ஒரே ஆயுதம் ஊரடங்கு. இது தேவையில்லை என்பது.

பாதிப்பு எவ்வளவு135 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 6லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 18 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். ஆனால் 34 கோடி மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவில், 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 1.75 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாடு அளவே உள்ள பிரேசிலில் சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 60 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பிரான்சிலும் இதே கதைதான். இறப்பு விகிதமும் இதேபோல்தான். மேலை நாடுகள் அனைத்திலும் இறப்பு விகிதம் 6 சதவீதம் வரை இருக்கும்போது, நம் நாட்டில் அது 2. 8 சதவீதம் என்பது ஆறுதல். ஆனால் நமக்கும் கீழே சீனா, தைவான், தென்கொரியா, ஹாங்காங், வியட்நாம், சிங்கப்பூர், இலங்கையில் மிகக் குறைந்த இறப்பு விகிதமே.

என்ன தெரிகிறதுஇதிலிருந்து ஓர் உண்மை தெரிகிறது. மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் இடையே இந்த நோயின் தாக்கமும் கடுமையும் முற்றிலும் மாறுபடுகின்றன என்பதே அது. சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் சில பகுதிகளை மட்டுமே தாக்கி, அண்டை நாடுகளை எல்லாம் விட்டு விட்டு, மேற்கத்திய நாடுகள் அனைத்தையும் ஒரு கை பார்த்து விட்டது.வைரஸ் சீனாவில் இருந்து மேற்கே பயணிக்கும் போது திசு மாற்றம் (mutation)ஆகி, குணம் மாறி, கொடூரத்தன்மை அடைந்து விட்டதாக கருத்து உண்டு. ஆனால் அடிப்படையாகவே மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் முகக்கவசம் அணிவது பண்டைய வாடிக்கை. யாருடனும் கைக்குலுக்குவதும் கட்டித் தழுவுதலும் கிடையாது. குனிந்து (சமூக இடைவெளியுடன்) வணக்கம் சொல்வதே வழக்கம்.

நம் நிலை என்னகொரோனா நம்மை அதிகம் பாதிக்காது. நம்முடைய காலநிலை, நம் ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்திகள், காசநோய்க்காக நம் குழந்தைகள் எல்லாருக்கும் போடப்படும் பி.சி.ஜி. ஊசி கொடுக்கும் பாதுகாப்பு, நம்மை முன்பு ஆட்டுவித்த மலேரியா நோய் நமக்கு விட்டுச்சென்ற நோய் எதிர்ப்புச் சக்தி, மாசுபட்ட சுற்றுச்சூழல் உண்டாக்கிய மந்தை எதிர்ப்பு சக்தி (Herd Immunity) இவை எல்லாம் நம்முடைய முக்கிய கவசங்கள். இதற்கு மேலே ஒரு முக்கிய காரணம் நம்முடைய உணவுப் பழக்கம். நோய் எதிர்ப்புச் சக்திக்காக, விட்டமின் சி, டி, ஜிங்க் போன்றவற்றை மாத்திரையாக எடுக்கச் சொல்லி வருகிறோம். இவை அனைத்தும் நம் உணவில் தாராளமாக கிடைக்கின்றன. காய்கறிகள், பழங்கள் தவிர பாரம்பரிய மசால் பொருட்கள் வெங்காயம், பூண்டு, மிளகு, மஞ்சள், சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகாய், ஏலக்காய், பெருங்காயம் அனைத்திலும் விட்டமின்களும், ஆன்டி - ஆக்ஸிடென்ட்களும் நிறைய உண்டு. இவற்றை அன்றாடம் உட்கொள்ளுபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அபரிமிதமாக உண்டு. கொரோனா நோயாளிகளில் சுமார் 75 சதவீதம் பேர் பெரிய நகரங்களில் இருக்கிறார்கள். இதற்கு மக்கள் நெருக்கம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், நகரங்களின் வாழ்க்கை முறையும், கலாச்சாரமும், உணவுப் பழக்கங்களும் மேலை நாடுகளின் சாயலைக் காப்பியடிப் பதால் தானோ?

தீர்வுகள் என்னதடுப்பு ஊசிகள் இன்னும் வெளிவராத நிலையில், ஊரடங்கு ஒன்றே தீர்வாகக் கருதப்பட்டது. குவாரன்டைன் என்றால் 40 நாட்கள்தான். நாம் 100 நாட்களைத் தாண்டிவிட்டோம். பலன்? ஊர்தான் அடங்கியது- கொரோனா அடங்கவில்லை!ஊரடங்கால் ஏற்படப்போகும் பக்க விளைவுகளை இனிமேல் தான் பார்க்கப் போகிறோம். பெருத்த பொருளாதார நஷ்டங்கள், வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல பிரச்னைகள். ஊரடங்கு நமக்குப் புதிது. சீனாதான் இதை முதலில் ஆரம்பித்தது. ஆனால் புத்திசாலித்தனமாக ஒரு மாகாணத்தோடு நிறுத்திக்கொண்டு, அதையும் சீக்கிரம் விலக்கிக்கொண்டு, இப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பிறகு மேலை நாடுகள் அனைத்தும் அவசர அவசரமாக ஊரடங்கை பிறப்பித்தன. நாமும் அவர்களைப் பின்பற்றி அதே பாணியில் ஊரடங்கு பிறப்பித்தோம்.சீனா, தைவான், தென்கொரியா, வியட்நாம், ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவர்கள் ஊரடங்கை பிறப்பிக்கவில்லை அல்லது பேருக்கு ஊரடங்கு பிறப்பித்து அடக்கி வாசித்தார்கள். மற்றவர்கள் எல்லாம் ஊரடங்கின்போது செய்த 3 முக்கிய வேலைகள், மூன்று T. நிறைய டெஸ்ட்டுகள் (Test), தொடர்பைக் கண்டுபிடித்தல் (Tracing), உரிய மருத்துவம் (Treating).நாம் மருத்துவம் மட்டும் தீவிரமாகச் செய்தோம்; நல்ல வெற்றியும் பெற்றோம். மற்றவற்றில் கோட்டை விட்டோம். நிறைய டெஸ்ட்டுகள் எடுத்ததாகச் சொல்லிக் கொண்டாலும் நம்மைவிட அவர்கள் எல்லோரும் 100 பங்கு அதிகமாகச் செய்தார்கள்.திடீர் திடீரென்று விடுத்த ஊரடங்கு அறிவிப்பால் சந்தைகளில் நிறைய கூட்டம் கூடவிட்டோம். புலம்பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நீண்ட நடை பயணங்களில் கூட்டம் கூடியது. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆகவே ஊரடங்கால் விளைந்திருக்க வேண்டிய பல நல்ல பலன்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இப்போதுதான் நிபுணர்கள் உரக்கச் சொல்கிறார்கள் - கொசுவைக் கொல்ல கோடாரி வேண்டாம் என்று!

இனி என்ன செய்ய வேண்டும்
தொற்று நோய்த் துறையின் மூத்த நிபுணர்கள் எல்லாரும் சொல்கிறார்கள். நாட்டில் 50 சதவீதம் பேருக்காவது இந்தத் தொற்று வந்தால்தான் இதற்கு தீர்வு என்று! இது கசப்பாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை. எண்ணிக்கை அன்றாடம் உயர்ந்துகொண்டே போகிறது என்று பயப்பட வேண்டாம். அதுவும் நல்லதுக்குத்தான். நம் நாட்டு மக்கள் 130 கோடிப் பேருக்கும் டெஸ்ட் எடுக்க முடியாது. அப்படிச் செய்தால் 1 லட்சம் அல்ல, 20 கோடி பேருக்காவது இப்போது வைரஸ் பாசிட்டிவ் ஆக இருக்கும். இதுவே 60 கோடி பேர் பாசிட்டிவ் என்ற நிலை வரும்போதுதான் நோய் முடிவுக்கு வரும்.அப்படியானால், ஊரடங்கை சீக்கிரம் விலக்கிக்கொள்ள வேண்டும்.வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களை வெளியே வராமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை டாக்டர் அறிவுரைப்படி வாரம் ஒரு முறை HCQ மாத்திரை எடுத்துக் கொள்ளச் சொல்லி, முகக் கவசமும், சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கச் சொல்லி சுதந்திரமாக விடவேண்டும். எல்லாருக்கும் வைரஸ் வரும்; ஆனால் ஒன்றும் செய்யாது. அனைவருக்கும் எதிர்ப்பு சக்தி (Antibodies) உருவாகும். அப்போதுதான் மந்தை எதிர்ப்பு சக்தி (Herd Immunity) உருவாகி கொரோனா அடியோடு ஒழியும். இது ஊரடங்கை விலக்கிய பின் சில மாதங்களில் நிகழும்.
- டாக்டர்.ப.சௌந்தரபாண்டியன்
சிறுநீரக இயல் நிபுணர்
மதுரை.94433 82830

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement