Advertisement

கொரோனா யுத்தம்; சோர்வு வேண்டாம்

Share

கொரோனா தடுப்பில் மூன்று மாத போராட்டங்களுக்குப் பின்னர் உலகளவில் பாதிக்கப்பட்டோர், இறந்து போனோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், நாம் கடந்து வந்த பாதையின் சிரமங்களையும், எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளின் ஆழத்தையும் கணக்கில் கொள்ளும் போது மனதில் பல ஐயங்களும், கேள்விகளும் எழுவது இயல்பே. நமது நாட்டில் நோய் பரவல் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை என்று கேள்விப் படும்போது, எதிர்வரும் காலத்தை எண்ணி பகீர் என்றாகிவிடுகின்றது.

கேள்விகள் பலதொற்றுநோயின் தாக்கம் நகரங்களிலேயே பெரும்பான்மையாக உள்ளது. கிராமப்புறங்கள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை என்பது ஆறுதல். இருந்தாலும் பல கேள்விகள் மனதில் எழுவது தவிர்க்க முடியாதது. கொரோனா என்பது உண்மையிலேயே ஒரு பயங்கர நோய்த் தொற்றுதானா அல்லது ஒரு சிலரின் வெட்டி பயமுறுத்தலா? இன்னும் எத்தனை நாள் இந்தக் கொடுமை நமக்கு நீடிக்கும்? இதுவரையான முழு அடைப்பு (லாக் டவுண்) உண்மையிலேயே நமக்கு பலன் தந்துள்ளதா?
லாக் டவுண் தொடரப்பட்டிருக்கக் கூடாதா, சீக்கிரம் திரும்பப் பெறப்பட்டிருக்க வேண்டுமா?எல்லோரையும் கோரோனா சோதனைக்கு உள்ளாக்குதல், பாதிக்கப்பட்ட அனைவரையும் வீடுகளில் தனிமைப் படுத்துதல், அல்லது மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை செய்தல்- சரியா, தவறா என பல கேள்விகள் எழுகின்றன.

இயற்கையின் சீற்றம்கொரோனா பரவல் என்பது தேவையற்ற வகையில் கிளப்பப்பட்ட பீதியல்ல, நம்மை எதிர் நோக்கியுள்ள இயற்கையின் சீற்றம். நாடு முழுவதும் சாதாரண மக்கள் முதல் வி.ஐ.பி.,க்கள் வரை பலர் பாதிக்கப்பட்டிருப்பது, நமது கண்களைத் திறக்காவிட்டால், நம்மை இறைவனால் கூட காப்பாற்ற இயலாது. சில வைரஸ்களுக்கு எதிராக இருப்பது போல ஒரு வீரியமான மருந்தோ, தடுப்பூசியோ இதற்கு இல்லாததால் உலகம் முழுவதிலும் மருத்துவ வல்லுனர்கள் செய்வதறியாமல் நிற்கின்றனர். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துவது, நோயை எதிர்கொண்டு வெற்றி பெற உடலுக்கு உதவுவது, நோய் மேலும் சிக்கலாகாமல் தடுப்பது மட்டுமே இப்போதைய சிகிச்சை முறை.பல மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களுமே இந்த நோய்க்குப் பலியானதை கண்கூடாகக் கண்டுள்ளோம்.எந்த அளவுக்கு அலோபதி மருத்துவர்கள் உதவியற்ற நிலையில் இருக்கிறார்கள் என்றால், வழக்கமாக அவர்களால் மட்டம் தட்டப்படுகின்ற சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற மருத்துவமுறைகளை நோய்த்தடுப்பில் பின்பற்றுவதைக் கூட அவர்கள் யாரும் பெருமளவில் எதிர்க்கவில்லை. நோயினால்உயிரிழப்போர் எண்ணிக்கை உலக நாடுகளை ஒப்பிடும் போது நமது நாட்டில் குறைவு என்றாலும், பலதரப்பட்ட வயதைச் சேர்ந்தோரும் இறந்து போவதைக் காணும் போது வழக்கத்தை விட அதிக கவனம் அவசியம் என்றே தோன்றுகிறது.

கொரோனாவுக்கு கொண்டாட்டம்போலியோவுக்கு நரம்பின் செல்கள், எய்ட்ஸை ஏற்படுத்தும் வைரசுக்கு வெள்ளையணுக்கள் என ஒவ்வொரு வைரசுக்கும் உடம்பின் ஒவ்வொரு திசுவின் செல்கள் மிகவும் பிடிக்கும். அதற்குத் தகுந்தவாறே நோயினால் பாதிக்கப்படும் உறுப்பும், வைரசின் பரவும் தன்மையும் அமையும். கொரோனா என்பது ஜலதோஷத்தை ஏற்படுத்துகின்ற மற்ற வைரஸ்கள் போன்று மனிதனின்
மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல்களைப் பாதிக்கக் கூடியவை. எனவே அவை பரவுவதுவும், பெரும்பாலும் மூச்சுக்காற்று, இருமல் மற்றும் தும்மலின் போது வெளியாகும் சளியின் காற்று திவாலைகள் வழியாகவே. மனிதர்கள் எங்கெல்லாம் சமூக இடைவெளியின்றி, நெருக்கமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் கொரோனாவுக்கு கொண்டாட்டம் தான். அதனால் தான் நோயின் பரவலைத் தடுப்பதற்காக சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதையும், முகக்கவசம் அணிவதையும், வலியுறுத்துகின்றனர்.

பாடம் கற்க வேண்டும்கொரோனா மாதிரியான ஒரு கொள்ளை நோய் பரவியது 1918ல் ஏற்பட்ட ஸ்பானிஷ் ப்ளூவால் தான். அந்த சமயத்தில் முதல் உலகப் போரின் காரணமாக உண்மை விவரங்கள் பெருமளவு வெளிவராததும், அறிவியல் இந்த அளவு வளராததும், அந்நோய்ப் பரவல் நமக்கு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் படிப்பினை அளிக்க தவறியதற்கு காரணங்களாகிவிட்டன. குறைந்தபட்சம் இப்போதாவது நாம் கொரோனாவுக்கு எதிரான போரட்டத்தின் போது நடப்புகளை சரியான முறையில் பதிவு செய்து, ஆராய்சிகளைக் கையாண்டோமானால் எதிர்காலத்தில் இந்த மாதிரி தொற்று பரவல் ஏற்படும் போது உதவியாக அமையும். லாக் டவுண் கடைபிடிக்கப் பட்டதால் என்ன பயன், அராஜக ஆட்சி, தனிமனித சுதந்திரம் பறிபோனது தான் மிச்சம் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் இயல்பாக எழுந்துள்ளன.

ஆனால் லாக்டவுன் செய்தும், சில காரணங்களால் நோய்ப்பரவல் ஒட்டு மொத்தமாக தடுக்கப் படாவிடினும், குறைந்த பட்சம் நோய் உச்சகட்டத்தை அடைவது பல மாதங்களுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதை மறுக்க இயலாது. இதனால் பலன்கள் சில உண்டு. ஒன்று இந்திய மருத்துவர்களும், சுகாதாரத் துறையும் தங்களை தயார் படுத்திக் கொள்ளவும், தேவைப்படும் சுகாதார கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் நேரம் கிடைத்தது பெரிய விஷயம். இல்லாவிடில் ஆரம்பித்திலேயே திடீரென்று லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், எங்கிருந்து சிறப்பு மருத்துவமனைகளும், நோய் கண்டறியும் பரிசோதனை மையங்களும் வந்திருக்கும். மக்கள் என்ன நடக்கிறது, என்ன நோய் என அறியாமலே மடிய நேர்ந்திருக்கும். இதுதான் இத்தாலி போன்ற நாடுகளில் நடந்தது.

கால அவகாசம்தாமதமாக நோய்ப் பரவலின் உச்சம் நேர்வதன் காரணமாக, சரியான தயாரிப்புகளுடன் நமது நாடு எதிர்கொள்ள தயாராக உள்ளது. இரண்டாவது, தாமதமான நோய்ப்பரவலால் ஒரே நேரத்தில் கருவிகளுக்காகவும், மருந்துகளுக்காகவும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் போட்டி போடவும், பணம் செலவழிக்கவும் நேர்ந்து விடவில்லை. நாம் அவர்களுக்கும், அவர்கள் நமக்கும் உதவும் வகையில் சில மாதங்கள் கழித்தபின்னர் நமக்கு நோயின் உச்சம் நிகழ்வது அனுகூலமான விஷயம். மூன்றாவது நோயின் உச்சகட்ட நிலைக்கு முன்னராகக் கிடைத்த நேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மால் முடிந்துள்ளது பெரிய பலம். இந்த பலம் நோய்க்கு எதிரான போரில் பெரிய ஆயுதமாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை. இப்போதும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிடவில்லை. நகரங்களில் இருந்து பெருவாரியான கிராமங்களை நோய் சென்றடைவதை தடுப்பதில் கிடைத்த கால அவகாசத்தைப் பயன்படுத்தினோமானால், உலக அரங்கில் நமக்கு வெற்றி கிடைக்கும்.நிரந்தர லாக்டவுண் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடுமே ஒழிய எந்த பெரிய பலனை அளிக்கப்போவது இல்லை. தேவைப்பட்டால் இடை இடையே லாக்டவுண் என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சோர்வு வேண்டாம்மனம் சோர்வடையத் தேவையில்லை. நம்மிடையே நம்பிக்கையூட்டவல்ல விஷயங்கள் ஏராளமாக உள்ளன. நோய் பற்றி விழிப்புணர்வு அடைந்துள்ள சமுதாயம், எதற்கும் தயாராக உள்ள சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மருத்துவர்கள், ஒருமுகப்பட்டு அயராது உழைக்கும் அரசு துறைகள், தடுப்பூசி விரைவில் உள்ளூரிலேயே வந்துவிடும் என்ற நம்பிக்கை, பொய்க்காத விவசாய அறுவடையும் தானியக் கொள்முதலும், டாலரில் பெருகும் அரசின் வெளிச்செலாவணி கையிருப்பு, நமது சமுதாயத்திற்கே உரித்தான எதையும் தாங்கும் திறன், ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் மற்றும் சீனா என மும்முனைத் தாக்குதல்களையும் வெற்றிகரமாக சமாளிக்க வல்ல ராணுவம் என பன்முகப் பட்ட சாதகமான அம்சங்கள் காரணமாக நமது நாடு மீண்டு வரும்; செழித்தோங்கி விளங்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. டாக்டர் சுப்பையா சண்முகம்புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய தலைவர், சென்னை https://twitter.com/subbiah_doctor

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement