Advertisement

வெற்றித் தேரிலேறி வீறு நடைபோடுவோம்

Share

மனிதர்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் நிரந்தர துணையாக நிற்பதும், எண்ணங்களும், செயல்களும் தடம் மாறிப் போகாது பாதுகாப்பதும், நமக்கு வலுவினைச் சேர்ப்பதும் ஆன்மிகமே. உடல் தளரும் காலம் மட்டுமே ஊன்றுகோல் உதவும். ஆனால் உள்ளத் தளர்விற்கும் நிரந்தர ஊன்று கோலாய் நிற்பது ஆன்மிகம். அதில் ஊன்றி நிற்போர் உறுதியோடிருப்பர்.எதிலும் உறுதியோடு ஊன்றி நிற்க வேண்டுமானால் ஆன்மிக கருத்துக்கள் நம் அறிவை ஊடுருவிச் செல்ல அனுமதிக்க வேண்டும். ஆன்மிகம் குறித்த சரியான புரிதல், பயிற்சி இல்லாத காரணத்தினால்தான் தோல்விகளும், ஏமாற்றங்களும் விபரீத முடிவுகளில் நம்மை விரைந்து தள்ளி விடுகிறது.

நல்லவை நாடல்நல்லவை பயில நாட்டம்வேண்டும். நாட்டமே நம் வாழ்வின் உயிரோட்டம். 'நாட்டமென்றே இரு' என்பார் பட்டினத்தடிகள். நாட்டமென்பது இயல்பாக இல்லாவிடினும் நல்லோர் தொடர்பினை நாட, நாட்டம் தானே வரும். பயனில்லாத விஷயங்களில் ஏற்படும் நாட்டமே நம் அல்லல்களுக்குக் காரணம். உயரிய விஷயங்களில் நாட்டமின்றி இருப்பதே அறியாமை என்னும் நீண்ட உறக்கம். அந்த உறக்கத்தில் இருந்து விழிப்பதே தவம். ஆகவேதான் 'துாங்குவோர் விழித்தெழட்டும். துாக்கத்தைக் காட்டிலும் விழித்தல் நன்று. விழித்தவனுக்குப் பயமில்லை” என்பார் புத்தர். விழித்தோர் இன்னல்களையும், ஏமாற்றங்களையும் அச்சமின்றித் துணிவோடு எதிர் கொள்கின்றனர்.உறங்குவோரை விழித்தெழச் செய்வதே மாமனிதர்களும், மறைநுால்களும் மனித குலத்திற்குச் செய்யும் மகத்தான பணி. விழித்தெழ ஆர்வமில்லாதோரை விட்டு விலகி நில்லுங்கள் என்பார் விவேகானந்தர். அறியாமையில் உறங்குவதென்பது மரணத்திற்குச் சமம்.

வாழ்க்கையும், வாய்ப்பும்வாய்ப்பு என்னும் பல கதவுகளுடன் கூடியதுதான் வாழ்க்கை. சில நேரங்களில் வாழ்க்கை நமக்களித்த சில வாய்ப்புகளை நாம் தவற விட்டிருக்கலாம். அல்லது நாம் முயற்சித்த வாய்ப்புகளை நாம் அடையாது போயிருக்கலாம். அதனாலென்ன? வானமா கவிழ்ந்து விட்டது. கவலைப்படுவதால் கதவுகள் திறக்குமா? உயிரை மாய்த்துக் கொள்வது உண்மைத் தீர்வாகுமா?கற்ற அனுபவங்கள் ஒருபோதும் கைவிடாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு கதவு மூடிப்போனால் என்ன? வாழ்க்கை இருண்டா போய்விடும்? துணிவனைத்தையும் ஒன்று திரட்டி வேறொரு கதவைத் தட்டுவோம். அக்கதவு நாம் எண்ணியதைக் காட்டிலும் அதிக வாய்ப்புகளோடு திறக்கலாம். நாம் ஒவ்வொருவருக்கென்று ஒரு கதவை இறைவன் வைத்திருக்கின்றான். தளர்ச்சி வேண்டாம். மற்றவருடைய கதவுகளில் முட்டி மோதி நம் தலையை நாமே ஏன் உடைத்துக் கொள்ள வேண்டும். முழு முனைப்போடு முன்னோக்கி செல்வதற்கு, நம்முள் இருக்கும் ஆற்றல்களை நமக்குணர்த்தும் நல்வித்தையே ஆன்மிகம்.

வெற்றித் தேர்துளசி ராமாயணம் ஓர் காட்சியை நம் கண்முன் நிறுத்துகின்றது. ராம, ராவண யுத்தத்தின் போது, ஒருபுறம் ராவணன் வலிமை வாய்ந்த குதிரைகள் பூட்டிய தேரிலேறி, ஆயுதங்களுடன் கம்பீரமாக நின்று கொண்டிருப்பான். மறுபுறம் ராமர் தேரின்றி, கவசமின்றி காலணிகள் கூட இல்லாமல் ராவணன் எதிரில் நிற்பார். இக் காட்சியைக் கண்ட விபீஷணன் ராமரிடம் சென்று, ராட்சத தேரில், சகல ஆயுதங்களுடன் நிற்கும் ராவணனை தாங்கள் எவ்வாறு வெல்வீர்கள் என கேட்பார். அதற்கு ராமர், வாழ்வில் வெற்றி பெறுவதற்கான தேர் என்பது முற்றிலும் வேறானது. இரும்பினாலும், மரத்தினாலும் செய்யப்பட்டு, வலிமையான குதிரைகளைப் பூட்டுவதால் மட்டுமே வெற்றித் தேராகிவிடாது. அது வெற்றுத் தேர்தான். புறப்பொருளைக் கொண்டு செய்யப்பட்ட தேரைக் காட்டிலும், உள்ளப் பண்புகளால் செய்யப்பட்ட வலிமையான, எவராலும் வெல்ல இயலாத, என்னுள் வீற்றிருக்கும் வெற்றித் தேரை அறிந்து கொள் என்பார்.

சக்கரங்கள்துணிவும், வலிமையும் வெற்றித் தேரினை முன்னெடுத்துச் செல்லும் இரு சக்கரங்கள். இவை ஒன்றுபோல் இருக்க வேண்டும். புறச்சவால்களை எதிர்கொள்ளத் துணிவு வேண்டும். தளராத மனமும், அறத்திலிருந்து விலகாத அஞ்சாமையுமே துணிவாகும். எண்ணித் துணிக என்பதும் அச்சமுடையார்க்கு அரணில்லை என்பதும் வள்ளுவர் வாக்கு. உள்ளத்திலிருக்கும் பலவீனங்களை எதிர் கொள்வதே வலிமை. பேராசையும், பெருங்கோபமும் மட்டுமல்ல சோம்பலும் கூட பலவீனங்களே.
தேரில் பெரியதும், சிறியதுமாக இரு கொடிகளுண்டு. அவை வெற்றியையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும். வாய்மையும், நன்னடத்தையும் வெற்றித் தேரில் பட்டொளி வீசிப் பறக்கும் இரு கொடிகள். உண்மை பேசுவது என்பது வெறும் தகவல்களை திரட்டிக் கூறுவதல்ல.
பிறருக்கு நன்மை பயக்கும் விஷயங்களை, ஊக்கமும், உற்சாகமும் தரும் சொற்களை அன்புடன் எடுத்துரைப்பதே வாய்மை. சொல் அம்பைக் காட்டிலும், சொல் அன்பு மேலானது. அறிந்ததைக் கூறுவதைக் காட்டிலும் ஆராய்ந்து கூறுவதே வாய்மை.

ஒத்திகைகள்செயலில், உறவுகளில் உண்மைத் தன்மையுடன் நடந்து கொள்வது நன்னடத்தை. உண்மையை அச்சமின்றி, ஒத்திகையின்றி, அரிதாரமேதும் பூசாது வாழ்க்கையெனும் மேடையில் அரங்கேற்றம் செய்வது சுலபம். பொய் அப்படியல்ல. பல ஒத்திகைகள் செய்து பார்க்க வேண்டும். அழகான அரிதாரங்கள் பல பூசி உண்மை தோற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதே ஆன்றோர் வாக்கு.ஆற்றல், நன்மை, தீமைகளை பகுத்தறியும் விவேகம், புலனடக்கம், பிறர் நலன் கருதிப் பணி செய்தல் ஆகிய பண்புகள் வெற்றித் தேரை விரைவாக இழுத்துச் செல்லும் குதிரைகள். நான்கும் சம வேகத்தில் இயங்க வேண்டும். பழுதில்லாத ஆசையே பலம். வஞ்சனை செய்யாத புலன்களே பொக்கிஷம், தொண்டு செய்வதே தவம். இவை நான்கும் நன்றியுடன் நம்மைக் காக்கும் நற்குதிரைகள்.

ஆணவம்பொறுமை, கருணை, மனதை சமநிலையில் வைத்திருத்தல் முக்கியம். பொறுமை வீரனுக்கு ஆபரணம். கருணை' ஞானிக்கு இலக்கணம், கற்ற கல்விக்கு அழகு மனதைச் சம நிலையில் வைத்தல். இறைவன்பால் நாம் கொண்டிருக்கும் மாறாத அன்பே வெற்றித் தேரின் சாரதி. அனைத்தையும் இயக்கும் சக்தி ஒன்று உள்ளது. நாமனைவரும் அதற்கு வசப்பட்டே நிற்கின்றோம் என்கிற எண்ணமிருந்தால் பணிவுண்டாகும். ஆணவம் அறவே அழிந்து போகும். இல்லையெனில் அகந்தையால் அழிவோம்.

ஆசையும், பொறாமையும் வெல்ல வேண்டிய பகைவர்கள். வைராக்கியமே தாக்குதலைத் தடுக்க உதவும் கேடயம். நிறைவான மனமே பகையை வெட்டி வீழ்த்தும் வீரவாள். வறியவர்க்கு ஈதலே வெற்றிக்கான கோடாரி. அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிதலே எதிரிகளைத் தாக்கும் ஏவுகணை. மெய்ஞானமே பனை போல் உயர்ந்து நிற்கும் வில். உள்ளும், புறமும் ஒத்திருக்கும் பல்வேறு உயர் பண்புகளே அம்புகளாகும். இறுதியாய் குருவிடத்திலும், சான்றோர்களிடத்திலும் நாம் செலுத்தும் மரியாதையே நம் உயிர் காக்கும் கவசமாகும்.அறம் பிறழாத இந்த அதிசயத் தேரை தன்னகத்தே கொண்டோர் ஒருநாளும் தோல்வியடைய மாட்டார்கள். இது அரசனால் செய்யப்பட்ட ஆடம்பரத் தேரல்ல. நம் தேசத்தையும், நம்மையும் காக்க ஆண்டவனே நமக்களித்த அற்புதத் தேர். வெற்றித் தேரிலேறி வீறு நடைபோடுவோம்! வாருங்கள்!
-சுவாமி சிவயோகானந்தாசின்மயா மிஷன்மதுரை. 94431 94012

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    வாழ்க்கையில் மிக பெரிய சாதனைகள் புரிந்தவர்களெல்லாம் ஆன்மீகத்தையே அடிப்படையாக கொண்டவர்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement