Advertisement

அமைச்சருக்கு 3; உதவியாளருக்கு 1; அதிகாரிக்கு 1!

Share

''வசூல்ல அவசரம் காட்டுறாங்க பா...'' என, அந்தோணிசாமி வீட்டு திண்ணையில், அரட்டையை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''யாருங்க...'' எனக் கேட்டார்,
அந்தோணிசாமி.
''கூட்டுறவு துறை கட்டுப்பாட்டுல, சென்னை உட்பட பல மாவட்டங்கள்ல இருக்கிற ரேஷன் கடைகளுக்கு, விற்பனையாளர், எடையாளர் பணிக்கு, ஆட்களை தேர்வு செய்யப் போறாங்க... வெறும் நேர்காணல் மட்டும் நடத்தி, தேர்வு நடக்கப் போகுது பா...
''இந்த வேலைக்கு, 5 லட்சம் ரூபாய் பேரம் பேசுறாங்க... 'தொகை அதிகமா இருக்கே'ன்னு, ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினர் சிலர் கேட்டப்ப, 'அமைச்சருக்கு, 3, அவரது உதவியாளருக்கு, 1, மாவட்ட அதிகாரிக்கு, 1 தரணும்'னு பட்டியல் வாசிக்கிறாங்க...
''ஊரடங்கு நேரம்கிறதால, அவசர அவசரமா, ஆட்களை நியமிச்சிடணும்னு, வசூல் வேட்டையில தீவிரமா இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''அமைச்சர், 'அசால்டா' இருக்காரேன்னு புலம்பறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.
''எந்த அமைச்சர், எதுல மெத்தனமா இருக்காரு வே...'' எனக் கேட்டார்,
அண்ணாச்சி.
''பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ஊரடங்கால, மாசத்துல முக்கால்வாசி நாள், சொந்த ஊரான, ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில தான் இருக்கார்... தினமும் பொதுமக்களையும், கட்சியினரையும் சந்திக்கறார் ஓய்...
''அரசு, கட்சி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கறார்... அரசு அதிகாரிகளும் இவர் பின்னாடியே போயிண்டு இருக்கா... ஏற்கனவே, கொரோனாவால முக்கிய பிரமுகர்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்காளோல்லியோ...
''அமைச்சருக்கு, சால்வை போடறது, கால்ல விழுந்து சேவிக்கறதுன்னு நிறைய பேர், சமூக இடைவெளியே இல்லாம நடந்துக்கறா...''இவாளால, கொரோனா பரவிடுமோன்னு அதிகாரிகள் பயப்படறா... இதை அமைச்சரிடம் எப்படி எடுத்துச் சொல்றதுன்னு தெரியாம, தயங்கிண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''ஈரோடு சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''ஈரோடு மாவட்டத்துல இருக்கிற, மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில், பாம்பலங்கார சுவாமி கோவில், சடையப்ப சுவாமி கோவில்கள்ல நிறைய முறைகேடு நடந்திருக்கு...
''வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான, வெங்கப்பூர் திருமண மண்டபத்துல இருந்த, தேக்கு மரங்களை, வெட்டி வித்துட்டாவ வே...
''கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களை பழுது பார்த்ததா, போலி, 'பில்' தயாரிச்சு பணத்தை அடிச்சிருக்காவ... இப்படி, 2 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கு... இதுக்கு, கோவில் அதிகாரி ஒருத்தரும், உடந்தையா இருந்திருக்காரு வே...
''இது சம்பந்தமான தணிக்கை அறிக்கை புகார்களை விசாரிச்ச இணை கமிஷனர், ஓய்வுல போறப்ப, 'எல்லா புகாருக்கும் தீர்வு கண்டாச்சு'ன்னு எழுதிட்டு போயிட்டாரு...
''ஆனா, கமிஷனர் இதை ஏத்துக்காம, மறுவிசாரணைக்கு உத்தரவு போட்டிருக்காரு... இதனால, கோவில் சொத்துல கைவச்சவங்க, குலைநடுக்கத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
பேச்சு முடிந்து பெரியவர்கள் கிளம்பினர். எதிரில் வந்தவரை நிறுத்திய அன்வர்பாய், ''முத்துசாமி, உங்க பையனுக்கு, 'இ - பாஸ்' கிடைச்சு வந்துட்டானா பா...'' எனக் கேட்டு
பேச, மற்றவர்கள் நகர்ந்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  தமிழக கோவில்களில், கடந்த பல ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமனம் தொடர்ந்து செய்யப் படாததால், கோவில் நிர்வாகத்தில் கேள்வி கேட்க எவருமே இல்லாத சூழ்நிலையில், பெரும்பாலான கோவில்களில் பணம் முறைகேடாக கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. அறநிலையத் துறையில், அதிகாரிகள் வைத்ததே சட்டம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. கோவில்களில் பழுது பார்த்தல் பணிகள் என்ற பெயரிலும், பணி நியமனங்கள் என்ற பெயரிலும் நடைபெறும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கா விட்டால், தமிழர்களின் கலாச்சார அடையாளமாக திகழும் கோவில்கள் அழிந்து போகும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

 • Muraleedharan.M - Chennai,இந்தியா

  அந்த மந்திரி, உதவியாளர், அதிகாரிக்கு கொரானா பரிசு நிச்சயம் உண்டு

 • ravi - chennai,இந்தியா

  லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு குறைந்தது நாலு ..இருப்பார்கள்..

 • POORMAN - ERODE,இந்தியா

  வெங்கப்பூர் இல்லை. வெங்கம்பூர். கோவிலில் நடைபெறும் அனைத்து கட்டுமான பணிகளும் பக்தர்கள் பங்களிப்பை தவிர அரசு பணம் செலவிடப்படுவதில்லை. தேக்கு மரங்கள் சூழ இருந்த கோவிலை நாசமாக்கிய பெருமை இந்து அறநிலையத்துறையையே சாரும். தவறு செய்தவர்களை அந்த அங்காளம்மன் சும்மா விடமாட்டார்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  அமைச்சர் தான் கண்டிப்பாக சால்வை மாலை வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறி வருபவர்களைத் தடுக்க வேண்டும். அதிகாரிகள் தடுத்தால், மாற்றல் உத்தரவுக்குத் தயாராக வேண்டுமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement