Advertisement

நம் பாரம்பரியம் காப்போம்

Share

காலை எழுந்தவுடன் இன்ஸ்டன்ட் காபி அல்லது தேநீர், ஆன்லைனில் புதுப்புது வகையான உணவு வகைகள், இரண்டு கிலோ மீட்டர் பயணத்திற்கு கூட வீட்டு வாசலில் கால்டாக்ஸி, சிறு உடல் உபாதைகளுக்கும் சிறப்பு மருத்துவர், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைத் தெரியாது; ஆனால் முகநுாலில் எங்கோ இருப்பவர்களுடன் நட்பு பாராட்டும் வழக்கம், நினைத்தவுடன் டோர் டெலிவரி செய்யப்படும் சிற்றுண்டிகள், மேலை நாட்டு உணவுகள் கூடவே புதுப்புது நோய்களுடனும், மன உளைச்சல்களுடனும் வசிக்கும் நவீன இயந்திர உலகில் நாமும் மிகச்சிறப்பாக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.நாம் இன்றைக்கு சந்திக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பல பிரச்னைகளுக்கும் பெரும்பாலும் வாழ்க்கை முறையும், உணவுப்பழக்கங்களுமே காரணம். இவற்றை பல ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய தமிழர்கள் நெறிப்படுத்தி வாழ்ந்து வந்தனர்.

தமிழின் சிறப்புமனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறையுள். இவற்றை தட்ப வெப்ப நிலைக்கேற்ப அழகாகக் கையாண்டு பாரம்பரிய முறைகளின் வாயிலாக அடுத்தடுத்த சந்ததிகளுக்குப் பயணப்படுத்திய சிறப்பு வாய்ந்த பாரம்பரியம் நமக்கு உரியது. "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி" எனும் புறப்பொருள் வெண்பா மாலையிலிருந்து தமிழர்களின் தொன்மையின் சிறப்பை உணரலாம். பழமை வாய்ந்த இனம் தமிழினம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தேவநேயப் பாவணர் எழுதிய "முதற்தாய் மொழி" எனும் நுாலும் "சிலப்பதிகார உரைகளும்" இத்தகவல்களை உள்ளடக்கியதன் மூலமாக, பாரம்பரியத்தின் சிறப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது.247 எழுத்துகளில் உலகையே ஆட்கொண்ட மொழி தமிழ்மொழி."யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என பாரதியும் தமிழ் மொழியின் தனித்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

தலை நிமிர்ந்து நில்உலகின் அதிசயம் என கூறப்படும் பைசா கோபுரம் கூட சாயத்தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரத்துடன் நிற்பது பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கட்டட கலையில் சிறந்து விளங்கியதற்கு சான்று அன்றோ!"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" எனும் மகாகவியின் வரிகள் நமக்கு எவ்வளவு பொருந்தும். பல சிறப்புகளையும் உள்ளடக்கியதே தமிழர்களின் வரலாறு. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என ஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவர்கள் பண்டைய
தமிழர்கள்.

உணவு பழக்க வழக்கம்தமிழர்களின் உணவுப்பழக்க வழக்கங்கள் உலகளவில் சிறப்பிற்குரியது. நம் அடுக்களையிலுள்ள அஞ்சறைப்பெட்டி ஒரு மருத்துவரின் முதலுதவிக்குச் சமமானது. எந்த வகை நோயானாலும் அதற்குள்ளே மருந்து இருக்கும். இது நம் முன்னோர்களின் வாயிலாக நமக்கு கிடைத்த அரிய பொக்கிஷம். மண்பானை சமையல், ஆவியில் வேகவைத்த தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை போன்றவைகள் உலக பிரசித்தம். "உணவும் மருந்தும் ஒன்றே" என்ற நிலைப்பாட்டிற்கேற்ப நம் பாரம்பரிய உணவுப் பழக்கங்களை உற்று நோக்கினால் அதன் பயன்கள் நம்மை வியப்படையச் செய்யும்.வெந்தயக்களி, உளுந்தங்களி போன்றவற்றுடன் வெல்லம் சேர்த்து உண்ணுதல் எவ்வளவு சுவைமிகுந்தது, ஆரோக்யமானது என்பது அதை ருசித்தவர்களுக்கே புலப்படும். அந்தந்த பருவநிலைக்கேற்ப நம் ஊரிலேயே விளையும் காய்கறிகளும், பழங்களும் மற்றும் சிறுதானியங்கள், முளை கட்டிய பயிர் வகைகள், வெல்லம், கருப்பட்டி போன்றவைகளும் உடலிற்கு செய்யும் நன்மைகள் அதிகம்.

விருந்தோம்பல்"அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்" இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள் என்பது திருவள்ளுவரின் வாக்கு. அதற்கேற்ப முன்னோர்கள் சமைக்கும்போது முதலில் சோறுதான் வடிப்பார்களாம்; பிறகு காய்கறி கூட்டு செய்யத் துவங்குவார்கள். ஏனெனில் சமைத்து முடிக்கும் முன்னரே விருந்தினர் வந்துவிட்டால் பசியோடு காத்திருக்கக் கூடாது என்பதற்காக. வந்தவர்களை கைகூப்பி வரவேற்று இருப்பதை தந்து இன்முகத்துடன் பசியாற்றுவது அன்றைய வழக்கம். விருந்தினர்கள் என்பவர்கள் உறவினர்களாக மட்டுமல்லாமல் நெடுந்துாரம் பயணப்படுபவர்களாகவும் இருப்பார்கள். நம் விருந்தோம்பல் பண்புக்கு சான்றாக விளங்குவது அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளில் காணப்படும் திண்ணை. வழிப்போக்கர்கள் ஓய்வுபெறும் இடமாகவும் பல்லாங்குழி, பரமபதம், ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடவும் அமைந்தது திண்ணை.

சுற்றுப்புறத் துாய்மை
"சுத்தமான காற்று மருந்துக்கு சமமாகும்" என்பதில் தமிழர்கள் கவனமாக இருந்தனர். வீட்டின் முன்புறம் வேப்ப மரத்தையும் முற்றத்திலே துளசியையும் வளர்த்தனர். விழாக் காலங்களின் போது வீட்டையும் சுற்றுப் புறத்தையும் வெள்ளையடித்து துாய்மைப்படுத்துவர். "சூரியன் ஒளி படாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்" எனும் முதுமொழிக்கேற்ப வெயில் படுமாறு வீட்டின் நடுவே முற்றம் அமைந்திருக்கும். வெளியே எங்கு சென்று திரும்பினாலும் முற்றத்தில் கை, கால்களை கழுவிய பிறகே வீட்டிற்குள் அனுமதிப்பார்கள். தினமும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தப்படுத்தி அதிகாலையிலும், மாலையிலும் அரிசி மாவால் கோலமிட்டு எறும்பு போன்ற சிறு உயிர்களுக்கும் உணவளித்தனர். இப்படி யெல்லாம் வீட்டை பராமரிப்பதன் மூலம் தீய சக்திகளும், நோய்களும் வீட்டைத் தாக்காது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

அறச்செயல்பண்டைத் தமிழ் மக்கள் அறம் செய்வதை பண்பாட்டின் கூறாகக் கருதிச் செயல்பட்டனர்."வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பயிர்களிடம் கூட தன் நேயத்தை வெளிப்படுத்திய வள்ளலார் 1867ல் தொடங்கிய தருமசாலை எனும் அணையா அடுப்பு வடலுாரில் இன்றும் எரிந்து பல மக்களின் பசியைத் தீர்த்துக்கொண்டிருக்கிறது."நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" என்பது புறநானுாறு. இதன் மூலம் நாம் பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது; நம்மால் ஆன சிறு உதவியையும் செய்து கொண்டிருத்தல் வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது."மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற" என்று வள்ளுவரும், மனதளவில் குற்றம் குறை இல்லாமல் இருப்பதே அறம், மற்ற செயல்கள் எல்லாம் வெறும் சடங்குகளே என்கிறார்.

பண்பு நலன்கள்முருகன் அமர்ந்திருக்க ஈசன் தலைகுனிந்து கைகளை பவ்யமாக வைத்துக்கொண்டு "ஓம்" எனும் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை பாடம் கற்றதாக கூறுவர். இதன் மூலம் கற்பிப்பவர் மகனே ஆயினும் உரிய மரியாதை தரவேண்டும் என்பதை அறிகிறோம். ஆசிரியர்களையும், நம்மை வழிநடத்தும் பெரியவர்களையும் எவ்வளவு மதிப்புடன் நடத்த வேண்டும் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.


கால்களில் சக்கரம் கட்டி ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் அனைத்திலும் புதுமை, மாற்றங்கள் என்பது நவீன காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகிப்போனாலும் பாரம்பரியத்தின் அடிப்படை சிறப்புகளாகக் கருதப்படும் உணவுப்பழக்கம், விருந்தோம்பல், அறநெறி, சுற்றுப்புறத் துாய்மை, பெரியோர்களை மதித்தல் போன்றவற்றை காப்பது மட்டுமின்றி, கடைப்பிடிக்கவும் செய்வோம். இதனால் மன உளைச்சல்களுக்கும், நோய்களுக்கும் ஆளாகாமல் ஆரோக்கிய, அறநெறி வாழ்விற்குள் நம்மைப் பின்பற்றி நம் அடுத்த தலைமுறையினரும் அடியெடுத்து வைப்பார்கள். -சுபா செல்வகுமார் எழுத்தாளர், மதுரைsubhaselva2010@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • P.Somasundaram - Kuwait,குவைத்

    நல்ல கட்டுரை .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement