Advertisement

அதிகாரியின் நாட்டாமை... வசூல் வேட்டையாடும் கொடுமை

Share

ஊரடங்கு தளர்வால், ரோட்டில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. சித்ரா, மித்ராவும், நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
''என்னக்கா... இன்னைக்கு திடீர்னு, வாக்கிங் வர சொல்லீட்டிங்க,''
''சும்மாதான்டி. லாக்டவுனில், வீட்டில் அடைஞ்சு கிடந்ததால், ஒரு ரிலாக்ஸ்க்கு, இங்க வரலாமுன்னு வந்தேன்,''
''சரிக்கா... போகும்போது, மளிகை பொருள் வாங்கிட்டு போயிடலாம்,''
''ஏன்டி, அதுதான் ரேஷன் கடையிலேயே விக்கறாங்களே,''
''இல்லக்கா... அதனாலதான் கடையில வாங்கறேன். அதில்லாம, மளிகை பொருள் விக்க சொல்லி ரொம்ப 'டார்ச்சர்' பண்றாங்கன்னு, ஊழியர் சங்கம் மூலமா, துணை பதிவாளர்கிட்ட புகார் பண்ணியிருக்காங்க,''
''இதனால டென்ஷனான 'கோழிப்பண்ணையூர்' சரக அதிகாரி, 'மேல் கம்ப்ளைன்ட் பண்றீங்களா? சரக்கு அளவு கணக்கு பார்த்தா மாட்டிக்குவீங்க...'' சொல்லி, அவர் 'பார்ட்னரா' இருக்கற, கம்பனியோட பொருளை விற்கச்சொல்லி 'செம' நெருக்கடி தர்றாராம்,'' என்றாள் மித்ரா.
அருகில் நடந்து போன ஒருவரை பார்த்த சித்ரா, ''சுரேஷ் அங்கிள் நல்லாருக்கீங்களா,'' என்றதும், ''ஓ... யெஸ், அப்பா சவுக்யமா,'' என, அவர் கேட்டதற்கு பதில் கூறி நகர்ந்தாள்.
''ஊரடங்கு முடிஞ்சதும், பரிசு கிடைச்சிருச்சு, மாவட்ட கவுன்சிலருங்களுக்கு சந்தோஷம்'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''துாண்டிலில் மண் புழுவ வைக்கறாங்கன்னா, பெரிசா எதுவோ கிடைக்கும்தானே...''
''ஆமாக்கா, அதேதான். மாவட்ட ஊராட்சிக்கு, 5.30 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க. வேலைகளை 'டெண்டர்' எடுக்கற கம்பெனிதான், காஸ்ட்லியான பேக் எல்லாத்துக்கும் கொடுத்திருக்காங்க...''
''ஆமான்டி, கொடுத்து வாங்கறதுதானே அவங்க பாலிஸி,'' என்ற சித்ரா, ''வட மாநில தொழிலாளர்கிட்டயும், அதிகாரிக 'விளையாடி'ட்டாங்களாம்,''
''அவங்களையும் விட்டு வைக்கலையா,''
''முன்பதிவு செஞ்ச தொழிலாளர் யாராச்சும் வரலீன்னா, மூட்டை, முடிச்சோட வர்றவங்கிட்ட, பேரம் பேசி, ஐயாயிரம் ரூபா வரை, வாங்கிட்டு, 'பேட்ஜ்' குத்தி, ஸ்டேஷனுக்குள்ள அனுப்பிடறாங்க''
''யப்பா.. எப்டியெல்லாம் பண்றாங்க பாருங்க்கா,'' சொன்ன மித்ரா, ''ஸ்மார்ட் சிட்டி ஒர்க்' நடக்கறதில்லையாம்,'' அடுத்த விஷயத்தை சொன்னாள்.
''யெஸ், மித்து. கார்ப்ரேஷன் லிமிட்டில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலை செஞ்ச வட மாநில தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊருக்கு 'பேக்கப்' ஆயிட்டாங்க,''
''இதனால், வேலை முடங்கிடுச்சு. கான்ட்ராக்டர்களிடம், 'எப்படியாவது ஆட்களை புடிச்சிட்டு வாங்க'ன்னு, மன்றாடி வருகின்றனராம்,''
''இதுதான், கொடுமைங்கிறது. ஊரடங்கு ரிலீஸ் பண்ணியும், இப்படியாயிடுச்சே,'' சொன்ன மித்ரா, ''அக்கா, கார்ப்ரேஷன் அதிகாரிக்கு மாசாமாசம், ஒரு மளிகை கடையிலிருந்து படியளக்கறாங்க, தெரியுங்களா,''
''அடடே... யாருடி அப்படி செய்றது,''
''பல்லடம் ரோட்டிலுள்ள ஒரு பெரிய மளிகை கடைக்கு, மாசாமாசம், கார்ப்ரேஷன் ஜீப் வந்தவுடன், ரெண்டு, மூனு பெட்டிய ஏத்தி விடுவாங்களாம். அந்த ஜீப் நேரா, அதிகாரி வீட்டுக்கு போய் நிக்குமாம்,''
''ம்... அப்புறம்''
''இப்படி, 16 ஆயிரம் ரூபா வரைக்கும் பில் ஆகுதாம். அதற்கான, தொகையை, ஒரு சில ஆபீசர்களும், கான்ட்ராக்டர்களும் கட்டிடறாங்களாம்,''
''செஞ்சோற்று கடன் தீர்ப்பது என்பது இப்படித்தான் போல,'' சிரித்தாள் சித்ரா.
''சொந்த பிசினஸ் பார்த்து வந்த தனிப்பிரிவு போலீசை ஸ்டேஷனுக்கு போக சொல்லிட்டாங்க தெரியுமா,'' என்றாள் சித்ரா.
''தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், 'கம்யூனல் விங்க்' போலீஸ்காரர், சொந்த பிசினஸ் பார்த்துட்டு இருக்காருன்னு, பேசினோமில்ல. அதனால, அவரை பழையபடி ஸ்டேஷன் டியூட்டி பாக்க சொல்லிட்டாங்க,''
''ஆனாலும், ஸ்டேஷனுக்கு போக மனசில்லாம, பழைய இடத்தை தக்க வைக்க, உயரதிகாரிகிட்ட, தவம் இருக்காராம்,'' என்றாள் சித்ரா.
''அக்கா, இதே மாதிரி, கணியூரில் எஸ்.பி., போலீஸ் ஒருத்தரும், ஸ்டேஷன் பக்கம் எட்டி பார்க்கறதில்லையாம்.
குவாரிக்கு வெடி மருந்து வைப்பது, பொக்லைன் வாடகைக்கு விடறது, தோட்டத்தை பார்த்துக்குறது என, சொந்த வேலையை பார்த்துட்டு 'ஹாயாக' இருக்கிறாராம்,''
அப்போது அவ்வழியே பைக்கில் வந்தவரை பார்த்த மித்ரா, ''ஹாய்... மகேஷ் எப்டியிருக்கே,'' என்றதும், பதிலுக்கு அவரும் பேசி விட்டு சென்றார்.
அதே ரோட்டில் சென்ற காங்கயம் போலீஸ் ஜீப்பை பார்த்த சித்ரா, ''சமீபத்தில் வந்த ஒரு 'குட்டி' அதிகாரி, தனக்குன்னு ஒரு 'செட்அப்' டீமை ரெடி பண்ணிட்டு, வசூலில் 'கில்லி'யா இருக்கிறாராம்,''
''அடேங்கப்பா...''
''ஆமாங்க்கா, சமீபத்தில், மில் ஒன்னு, தீ பிடிச்சு எரிஞ்சுது. இதில், இன்சூரன்ஸ்-க்கு ரிப்போர்ட் கொடுக்க 'வசதி'யாக, ஐந்து இலக்கத்தை கறந்துட்டாராம். இவரோட வேட்டையை பார்த்து, ஸ்டேஷேனே அரண்டு போயிடுச்சாம்,''
''மித்து, 'நாட்டாமை' படத்தில வர்றமாதிரி, 'சம்முவம்' அடிச்சு ஓட்டு...'' என சரத்குமார் மாதிரி சிரித்து கொண்டே சொன்னாள் சித்ரா. இருவரும், நடந்து கொண்டே இருக்கும் போது, ரோட்டோரம் ஆற்று மணல் குவியலாக கொட்டப்பட்டிருந்தது.
அதைப்பார்த்த மித்ரா, ''லாக்டவுன் நேரத்தில, மணல் திருட்டு அதிகமாகியிருச்சு,'' என்றாள்.
''எப்படி சொல்றே''
''ஆமாங்க்கா... ஊரடங்கு நேரத்துல, ஊதியூருக்கு பக்கத்துல ரெவின்யூ, போலீசார் யாரும் கண்டுக்காததில, லாரிகளில் மணல் திருட்டு அமோகம். அதுக்கு சம்பளமாக, 'கிஸ்தி'யை கரெக்டா வசூலிச்சிட்டாங்க,''
''நம்ம மாவட்ட அதிகாரி சாட்டய எடுத்து சுத்துனா பரவாயில்ல தான்,'' கோபமாக சொன்ன சித்ரா, ''மித்து... டைம் ஆயிடுச்சு, போலாம் வா,'' என பார்க்கிங் நோக்கி நடந்தாள். மித்ராவும் பின் தொடர்ந்தாள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement