Advertisement

இது என்ன பைத்தியக்காரத்தனம்!

Share

இது என்ன பைத்தியக்காரத்தனம்!


எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக சிறைகளில், 'கொரோனா' பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ராஜிவ் கொலையாளிகளுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை, பிணையில் வெளியே விட வேண்டும்' என, 'நாம் தமிழர்' என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் அங்கலாய்த்து இருக்கிறார்.அவரது அறிக்கையைப் படித்ததும், அழுவதா அல்லது சிரிப்பதா என, ஒரு புண்ணாக்கும் புரியவில்லை.முன்னாள் பிரதமர், ராஜிவ் கொலையாளிகளின் மீதுள்ள அக்கறையால், அப்படி கூறியுள்ளாரா அல்லது அக்கறையின்மையால் கூறியுள்ளாரா என, ஒரே குழப்பமாக உள்ளது.கொரோனா பாதிப்பு உள்ளவர், தனிமைப்பட்டிருக்க வேண்டும் என்பது தான், மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ உலகமும் கூறும் விதி.ராஜிவ் கொலையாளிகள் ஒவ்வொருவரும், தமிழகச் சிறைகளில், தனித்தனியாகத் தான் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். அப்புறம் எதற்காக, அவர்களை வெளியே விட வேண்டும்? வெளியில் தானே, கொரோனா தொற்று, வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை, பிணையில் அவர்கள் வெளியே வந்து, கொரோனா தொற்று ஏற்பட்டு, மரணம் ஏற்படுமானால், அதற்கு யார் பொறுப்பு... அரசா, நீதிமன்றமா அல்லது சீமானா?தமிழகச் சிறைச்சாலைகளில், ராஜிவ் கொலையாளிகள் மட்டும் இல்லை. இன்னும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற கைதிகள், ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர்.சிறையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறதென்றால், சிறையில் இருக்கும் அனைவரையும் அல்லவா, பிணையிலோ அல்லது விடுதலையோ செய்து விடச் சொல்லி, ஆலோசனை வழங்க வேண்டும். ராஜிவ் கொலையாளிகளை மட்டும் தான், கொரோனா நோய் தொற்றிக் கொள்ளுமா?இது என்ன பைத்தியக்காரத்தனம்!'ராஜிவ் கொலைக்கும், அவர்களுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் கிடையாது. சிறையில் இருப்போர், நிரபராதிகள்' என, 'தமிழினப் போர்வையாளர்கள்' பலரும் கதைத்துக் கொண்டிருக்க, சீமான் துணிச்சலாக, அவர்களை, 'ராஜிவ் கொலையாளிகள்' என, பறைசாற்றியிருக்கிறார். அதற்காக மட்டும், அவரைப் பாராட்டலாம்.சமூக இடைவெளிஇல்லையே!

கே.சிவசங்கரன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நானும், என் மனைவியும், கடந்த, 27ம் தேதி, பெங்களூரில் இருந்து, 'இண்டிகோ' விமானத்தில், கோவைக்குச் சென்றோம்.விமானத்தில், ஒரு வரிசையில், ஆறு இருக்கைகள், மிக நெருக்கமாக இருந்தன. மொத்தம், 31 வரிசைகளில் இருந்த, 186 இருக்கைகளும், நிரம்பி விட்டன. பயணியர், மிக நெருக்கமாக அமர்ந்திருந்தனர். அங்கு, சமூக இடைவெளியே இல்லை. இதனால், 'கொரோனா' தொற்று பரவ, வாய்ப்பு இருக்கிறதே.விமானப் பயணியருக்கு, நிலையத்தில் ஏகப்பட்ட கெடுபிடிகள். அனைவருக்கும் பரிசோதனை செய்து, 24 மணி நேரம் கழித்தே, முடிவுகளை அறிவிப்பர். அதுவரை அவர்கள், 2,500 - 5,000 ரூபாய் வாடகையில், உள்ளேயே தங்கி இருக்க வேண்டும். இதுவும் விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் ஏற்பாடு செய்யும், விடுதிகள் தான்.சமூக இடைவெளியை, விமானத்திற்குள் கடைப்பிடிக்காமல், நிலையத்தில் மட்டும் அமல்படுத்துவதால், என்ன பயன்?
இன்றைய சூழலில், விமானத்தில் பயணிப்போர் அனைவரும் வசதியானவர்கள் அல்ல. ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, தரைவழி போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி, விமானத்தில் சொந்த ஊருக்கு பயணிக்கின்றனர்.விமானத்திற்குள்ளும், சமூக இடைவெளி அவசியம். மத்திய அரசு, நடவடிக்கை எடுக்குமா?அதிகாரத்தைபரவலாக்குங்கள்!

எஸ்.ரவி சங்கர், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கெட்ட பின், ஞானி' என்பர். ஞானம் வந்த பின், நாம் செய்ய வேண்டிய செயலுக்கான நேரம், தற்போது வந்துவிட்டதாகத் தான் தோன்றுகிறது. ஆம்... நம் மாநிலத்தின் தலைநகரான சென்னையை, 'டிகன்ஜஸ்ட்' என்ற, அடர்வு நீக்கம் செய்து தான் ஆக வேண்டும்.கிராமம் மற்றும் சிறுநகரங்களில் இருந்து, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள், மீண்டும்
சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும். அரசு, அமைச்சக அதிகாரங்கள் அனைத்தும், சென்னையிலேயே குவிக்கப்பட்டுள்ளது. அதிகார மையங்களுக்கு அருகிலேயே இருந்து, காரியம் சாதிக்க வேண்டிய தனியார் நிறுவனங்களும், சென்னையில் முகாமிடுவதால், மக்கள் தொகை நெருக்கம், மிக அதிகமாக உள்ளது.இந்த போக்கை, உடனடியாக மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில், நாம் இருக்கின்றோம்.'குறுந்தோள், நீள்விரல்கள்' என்பது, மேலாண்மை கோட்பாடு. அதாவது, ஒரே இடத்திலிருந்து, பல்வேறு இடத்திலுள்ள செயல்பாடுகள் நிர்வகிக்கப்படுவது. இதில், அதிகாரக் குவிப்பு, களநிலவரம் அறியாமை, மாறுபட்ட சூழ்நிலையைப் பற்றி கவனம் கொள்ளாமை போன்ற, பல குறைபாடுகள் உள்ளன.எனவே, 'நெடுந்தோள், சிறுவிரல்கள்' என்ற கோட்பாட்டிற்கு, நிர்வாக முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதன்படி, ஒவ்வொரு துறையின் நிர்வாகமும், அந்தந்த களப்பணி நடக்கும் இடத்தில் அல்லது அருகாமையில் இருக்கும்.தற்போது, தமிழக அரசின் அனைத்து துறை அமைச்சகமும், வாரிய நிர்வாகமும், சென்னையில் மையம் கொண்டு
இருக்கின்றன. இதை, 'நெடுந்தோள், சிறுவிரல்' கோட்பாட்டின்படி மாற்றி அமைத்தால், சென்னையில் குடி கொண்டுள்ள பல அமைச்சகங்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயரும்.உதாரணமாக தஞ்சாவூரில், வேளாண் துறை; திருச்சியில், கல்வித் துறை; கோவையில், தொழில் துறை; சேலத்தில், நெசவு துறை; மதுரையில், வருவாய் துறை; சென்னையில், முதல்வரின் துறை மற்றும் காவல் துறை செயல்படலாம்.இவ்வாறு, அரசு அதிகாரம், தமிழகம் முழுதும் பரவலாக்கபட்டபின், அந்தந்த துறை சம்பந்தமான தனியார் நிறுவனங்களும், சென்னையிலிருந்து வெளியேறிவிடும்.இதனால், சென்னையில் மக்கள் நெரிசல் கணிசமாக குறையும்; அரசு நிர்வாகத்தின் சுமை வெகுவாக குறைந்து விடும். தமிழகத்தின் பல்வேறு நகரங்கள், அந்தந்த
துறையின் சார்பாக, முக்கியத்துவம் பெறும்.சென்னைக்கு புலம் பெயர்ந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், அரசு மற்றும் தனிமனித செலவினங்கள் கட்டுப்படுத்தபட்டு, அடிப்படை பொருளாதாரம் சீரமைய ஏதுவாகும்.அரசு அதிகாரத்தை பரவலாக்க வேண்டிய காலம், இது தான். தவறவிடக் கூடாது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • karutthu - nainital,இந்தியா

    ரவிசங்கர் :...இதை தான் எம் ஜி ஆர் ஆட்சியின் போது திருச்சியை இரண்டாம் தலைநகரமாக ஆக்கவேண்டும் என்றார், அப்போதைய அரசியல்வாதிகள் இதை கடுமையாக எதிர்த்ததால் வேறு வழியின்றி கைவிட்டு விட்டார் அப்படி செய்திருந்தால் சென்னையை, 'டிகன்ஜஸ்ட்' என்ற, அடர்வு வந்திருக்காது ....நல்லவிஷயம் எதுவும் நமக்கு தான் பிடிக்காதே

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தேவைப்படும் இடங்களில் இடைவெளி கட்டுப்பாடு எதுவும் இருக்காது ஆனால் மக்கள் ஒத்துழைப்பதில்லை என்று பழியேற்ற மட்டும் முன் வருவார்கள். விமானப் பயணம் ஒரு அத்தியாவசியமான நிலைக்கு வர காரணமே தரைப் போக்குவரத்து இல்லாமைதான். இதை சாக்கிட்டு தங்குமிடம் என்று வேறு கொள்ளையடிக்க திட்டமிடுபவர்கள், சவுகரியமாகத் தங்கள் தரப்பை மட்டும் தவிர்த்துவிடுகிறார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement