Advertisement

பத்து விரல்களால் எழுதுங்கள்

Share

அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து பரவாமல் இருக்க, ஊரடங்கு அறிவிப்புகள், அதன் பின்னர் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நோய்த் தொற்று பரவலைதடுக்க சமூக விலகல் அவசியம்.இத்தகைய விலகலை முன் வைத்தே தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு வந்தன. தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் மாணவ சமுதாயம் தங்களது அடுத்த கல்விக்கான பங்களிப்பை எந்த வகையில் ஆற்றலாம் என்பதை சிந்திக்க வேண்டிய தருணமாக இதைப் பார்க்க வேண்டும்.

என்ன படிக்கலாம்இணைய வழிக் கல்வியில் என்ன படிக்கலாம்? என்பதை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு சூழலில் மாணவர் சமுதாயம் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக விடுமுறைகளுக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் இயல்பு உண்டு. குறிப்பாக, மாணவர்களுக்கு, விடுமுறை என்ற உடனேயே கற்றல் தரும் இறுக்கம் தளர்ந்து, ஒரு வித உவகையும், உற்சாகமும் இயல்பாகவே ஏற்பட்டு, றெக்கை கட்டி பறக்கக் கூடிய மனநிலையிலேயே இருப்பார்கள். ஆனால் கொரோனா நோய்த்தொற்று தரும் அச்சத்தால், நாம் கல்வி கற்காத மனநிலையை விடுமுறைக்கான கொண்டாட்டமாக கருதி, அதை எளிதில் கடந்து போய் விட முடியாது. விடுமுறையை எப்படி நாம் பயனுள்ள விதத்தில் கழிக்க வேண்டும் என்பதில் விழிப்போடு இருக்க வேண்டும்.

கைதேர்ந்த ஆசிரியர்ஒரு கைதேர்ந்த ஆசிரியரால் மட்டுமே மிகக் கடினமான பாடத்தைக் கூட எளிதான பாடமாகவும்,விரும்பத்தக்கவிதமான பாடமாகவும் மாற்றிக் காட்டி விட முடியும். ஆனால் எல்லாப் பாடத்திற்கும் அப்படிப்பட்ட ஆசிரியர்களே கிடைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து போவோம்.ஆனால் இணைய வழிக் கல்வியின் வாயிலாக என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பதுடன், எந்த ஆசிரியரிடம் படிக்கலாம் என்பதையும் நம்மால் தீர்மானிக்க முடியும். முக்கியமாக, ஆசிரியர்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.இணையவழிக் கல்விகளில் தேர்வுகள் உண்டு. ஆனால் அந்தத் தேர்வுகள் நம்மை நாமே சுயமதிப்பீடு செய்வதற்கானது. எனவே புற அழுத்தம் ஏதுமின்றி ஒரு விளையாட்டைப் போல, நேசமுள்ள ஒன்றைக் கடந்து போவதைப் போல, ஒரு சைக்கிள் ஓட்டுவதைப் போல, எளிதாகவும், விளையாட்டாகவும் இவற்றைக் கடந்து விடலாம். ஒவ்வொரு தலைப்புக்கும் ஒன்றரை நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு நிமிடமே பிடிக்கும் சிறு தேர்வு இருக்கும். ஒரு வேளை ஏதேனும் கேள்விக்கு தவறாக விடையளிக்க நேர்ந்தால், அந்தக் கேள்விக்கு விடையிருக்கும் வீடியோவின் பகுதிக்கு உங்களை அழைத்துச் சென்று விளக்கமளித்து மீண்டும் தேர்வுக்கு அழைத்து வரும்படி அதன் வடிவமைப்பு இருக்கும். எப்படி ஒவ்வொரு தலைப்புக்கும் தேர்வு இருக்கிறதோ, அதைப்போல ஒவ்வொரு பகுதியின் மொத்தப் பாடத்திற்கும தனித்தேர்வு இருக்கும்.

தரமான கல்விகல்வி என்பது குழந்தைகளிடம் அறிவு, நல்லொழுக்கம், நற்செயலை வளர்க்கும். ஒரு சமூக அமைப்பாக மட்டுமல்லாமல், ஒரு தேசத்தின் வளர்ச்சியை அதிகரிக்கின்ற ஒன்றாகவும இருக்கிறது. கல்வியினால் ஒரு நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுவதோடு மாத்திரமல்லாமல், மனிதகுல நாகரிகத்திற்கே ஒரு புதிய பாதையை கண்டறிந்து தருகிறது. அனைவருக்கும் தரமான கல்வியைக் கொடுப்பதன் மூலமாக, பொருளாதார வளர்ச்சியை உருவாக்கவும் துணைபுரிகிறது. இதில் ஏழை நாடுகள் கல்வியின் மீது கவனம் செலுத்தினால் பெரிய பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும் என்பதையெல்லாம் தெரிந்திருந்தும் கூட இந்தக் தொற்று நம்மை ஒரு விதத்தில் பாடாய்படுத்துகிறது.கோவிட்-19 காரணமாக உலகம் முழுவதும் கல்விநிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், 191 நாடுகளில உள்ள 1,575,270,054 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனெஸ்கோ ஆய்வில் தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும், பொதுமுடக்கத்தில் இருந்து கல்விநிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க முடியாமல், தளர்வு அளிக்க முடியாமல் நாடுகள் திணறுகின்றன.

என்ன தேவைதொழிற்சாலைகளைப் போல, உற்பத்தி நிலையங்களைப் போல தயாரிப்பு மையங்களைப் போல, கட்டுமானத் தொழில்களைப் போல, கல்வி நிறுவனங்களையும் ஒன்றாகக் கருதி திறந்து விட முடியாது. ஆகவேதான் நமது அடுத்த நிலை கற்பித்தல், கற்றல் முறைகளுக்கான இணையவழிக் கல்வியை நோக்கி நகர்கிறது.டிஜிட்டல் உபகரணம், இணையம், பாடத்திட்டம், ஆசிரியர்கள், மாணவர்கள் இணையவழிக் கற்றலுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு மாணவன் மடிக்கணினியுடன் கலந்துரையாடலில் பங்குபெறுவதும், அலைபேசி வழி பங்கெடுப்பதும் ஒரே விதமான வசதிகளை வழங்காது. கிராமம், நகரம் என்ற இருவேறுபாடு கொண்ட சமூகத்தில், கிராமப்புற மாணவனுக்கும், நகர்ப்புற மாணவனுக்கும் இணையவழிக கற்றலில் சமமான வாய்ப்பு என்பது கேள்விக்குறி.இந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதற்கு கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்துவதற்கு, உலக வங்கியின் கல்வித்துறையின் நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்கலாம்

.தமிழ்வழி கற்றல்ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த டேட்டா பிளானிங் இல்லையென்றால தரவுப் பரிமாற்றம் சரியாக இருக்காது. அந்த டேட்டா பிளானுக்காக குறைந்தபட்சம் 500 ரூபாயாவது செலவழிக்கவேண்டிய திருக்கும். நம்முடைய பாடத்திட்டத்தை பொறுத்தவரை இருமொழிக் கொள்கையே அரசு பின்பற்றி வருகிறது. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி செயல்பாடுகளின் மூலமாகவே நாம் கற்றலை அறிந்து வருகிறோம். இணையத்தில் ஆங்கில வழிக் கற்றலுக்கு தேவையான காணொலிகளும், இணையதளங்களும் அதிகளவு இருக்கின்றன.


தமிழ்வழிக் கற்றலுக்குத் தேவையான காணொலிகள் இணையதளங்களில் குறைந்த அளவே இருக்கின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்புகொள்ள இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்திருந்த போதிலும் கூட, அவை மாநில மொழிகளில் இல்லை என்பது குறைபாடாக இருக்கிறது.கற்றல், கற்பித்தல் முறைகளில் மதிப்பீடு செய்வது முக்கியமானது. ஒருபள்ளியின் தரத்தை, தேர்ச்சியின் விகிதத்தைக் கொண்டே அளவிடுகிறோம். தேர்ச்சியின் தரத்தை, ஆசிரியரின் கற்பிக்கும் திறனே முடிவு செய்கிறது.ஆனால், இணையவழிக் கற்றலைப் பொறுத்தவரை பல்வேறு சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ள மாணவர்கள் மத்தியில் ஒரே மாதிரியான மதிப்பீடுகள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

எல்லாம் சாத்தியம்இணையத்தால் முடியாதது என்று எதுவுமே கிடையவே கிடையாது. மக்களுடன் இணைவது, தகவல்களை அணுகுவது என்று தொடங்கி, இணையத்தில் எல்லாமே சாத்தியம்தான். ஆகவேதான் மாணவ சமுதாயம் இணையத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற அறைகூவலை உணர்ந்து, பத்து விரல்களால் எழுதுகிற பழக்கத்தை விரைந்து கற்றுக் கொள்ள வேண்டும். இணையம் என்பது மாணவர்களுக்கான தகவல் உலகத்தைத் திறந்து வைத்துள்ளது. இவற்றை கற்றல் புரட்சி என்றே உணர வேண்டும். இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதில் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கும் பெரும் பங்கு உண்டு. வளர்ச்சியற்ற இடங்களில் கூட 4ஜி நெட்வொர்க்கை வழங்குகின்றன. சிறிய நகரங்களில் உள்ள மாணவர்கள் கூட வேகமான இணையசேவையை பயன்படுத்தி 'ஸ்ட்ரீமிங்' செய்கிறார்கள். அதாவது பள்ளி நுாலகத்தில் தேடுவதை விட, அதிக நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறார்கள், கற்கிறார்கள்.இந்த ஓய்வுக் காலங்களில் இளைய தலைமுறை அறிவுலக தேடலை இணையம் வழியாக கற்று அடுத்த வளர்ச்சியை ஏற்படுத்திட வேண்டும்.- முனைவர். வைகைச்செல்வன்முன்னாள் அமைச்சர் mlamailid@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா

    தமிழ்வழிக்கற்றலை வலியுறுத்தும் வைகைச் செல்வனுக்குப் பாராட்டு. அரசு தமிழ் வழிக்கல்வியை மட்டுமே நடைமுறைப்படுத்த அவர் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம் மொழியைக் காப்போம் இனத்தைக் காப்போம் தமிழே விழி தமிழா விழி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement