Advertisement

கல்வித் துறைக்கு காத்திருக்கும் சவால்!-

Share

கல்வித் துறைக்கு காத்திருக்கும் சவால்!-

சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும், 2020 - 2021ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு, ஜூலையில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டுகளை போல், எதிர்வரும் ஆண்டில், வழக்கமான முறையில், பள்ளிகள் இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.காரணம், உலகளாவிய, 'கொரோனா' வைரஸ் தொற்று எப்போது நீங்கும் என, யாராலும் உறுதியாக கூற முடியாத நிலை, தற்போது உள்ளது.இனி, பள்ளிகளில், கீழ்கண்ட மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.l நீண்ட கால விடுமுறையால், மாணவர்களிடம் தோன்றியிருக்கும் அலட்சியத்தை நீக்குவது, ஆசிரியர்களின் முதல் பணியாக இருக்க வேண்டும்l பள்ளியில், மாணவர் நெருக்கடியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; போதுமான கட்டட வசதிகள் ஏற்படுத்த வேண்டும்l மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளை, 'ஷிப்ட்' முறையில் இயக்கலாம்l மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வரும் வாகனங்களில், பாதுகாப்பு மாற்றங்களை, உடனடியாக செய்ய வேண்டும். அது குறித்த அறிக்கையை, அரசு, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப வேண்டும்l கல்விக்காக நீண்ட துார பயணத்தை, மாணவர்கள் மேற்கொள்ளக் கூடாது. இருப்பிடம் அருகே உள்ள பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை, பெற்றோர் சேர்க்க வேண்டும். மாணவருக்கு, உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

சத்துள்ள, பாரம்பரிய உணவுகள் மட்டுமே வழங்க வேண்டும்; அதற்கான, உணவு பட்டியல் தயாரித்து, அனைத்து பெற்றோருக்கும் கொடுக்க வேண்டும்l பள்ளி வேலை நாளுக்கு, முக்கியத்துவம் வேண்டாம். பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்l வகுப்புக்கு, ஒரு கல்வி சேனல் வரப் போகிறது; அதை, மாணவர்கள் முழுமையாக பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்l மாணவர்களின் பொருளாதார நிலையை கணக்கிட்டு, அவர்களுக்கு, மூன்று மாதத்துக்கு ஒருமுறை, அரசு உதவித் தொகை வழங்க வேண்டும்l ஐந்தாம் வகுப்பு வரையிலும், குழுவாக அமர்ந்து பாடம் கற்கும் முறையில், மாற்றங்கள் தேவை. மேலும், வாரத்திற்கு, நான்கு நாட்களுக்கு மட்டும், வகுப்புகள் நடைபெற்றால் போதுமானதுl அனைத்து மாணவர்களையும், வாரம் இரண்டு முறை, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்l சுகாதார பொருட்கள், முகக் கவசம், அலோபதி, சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய தொகுப்பை, மாதந்தோறும், மாணவர்களுக்கு வழங்க வேண்டும்l வளாக துாய்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை போன்ற விஷயங்களில், அதிக அக்கறை தேவை. பாதுகாப்பும், சுகாதாரமான சூழ்நிலையும் நிலவ வேண்டும்.மேற்கண்டவற்றில், பள்ளிக் கல்வித் துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொற்று நோய் ஒரு புறம்; மாணவர்களின் கல்வி மறுபுறம்... பள்ளிக் கல்வித்துறைக்கு, சவால் காத்திருக்கிறது. எனவே, அலட்சியம் காட்ட வேண்டாமே!lll

இறைவன் எங்கும் இருக்கிறார்!எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகம் முழுதும், நாள்தோறும், பல ஆயிரம் மக்கள், மடிந்துக் கொணடிருக்கின்றனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை, 35 லட்சத்தை தாண்டிவிட்டது. இது, உலகப்போரால் ஏற்பட்ட உயிரிழப்பை விட, அதிகம்.உலகம் முழுதும் கடும் பாதிப்பை சந்தித்தபோதும், மத்திய, மாநில அரசுகளின் கடுமையான நடவடிக்கை காரணமாக, நம் நாட்டில், இறப்பு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு உறுதுணையாக, அல்லும் பகலும் பாடுபடும், மருத்துவத் துறையினருக்கு, நாம் நன்றி கூற வேண்டும்.தற்போது, ஊரடங்கு பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளது. அதனால் சிலர், வழிபாட்டுத் தலங்களை திறந்து, மக்களை அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.'டாஸ்மாக்' கடையை திறக்கலாம்; கோவிலை திறக்கக் கூடாதா என, கேள்வி எழுப்புகின்றனர். இரண்டையும் ஒப்பிடுவது தவறு.பொருளாதார மீட்பு நடவடிக்கையில், ஊரடங்கில் இருந்து, ஒவ்வொரு தொழில்களாக, படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது.இறைவன், எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதை, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஹிந்துக்கள், வீட்டின் பூஜை அறையிலும்; கிறிஸ்துவர்கள், ஜெப அறையிலும்; இஸ்லாமியர்கள், தனிமையில் அமர்ந்தும், இறைவனை வழிபட்டு வருகின்றனர். ஆலயத்திற்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம், அனைவருக்கும் உண்டு. இன்னும் சில காலத்திற்கு பொறுமையை கடைப்பிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். கொரோனாவில் இருந்து, இறைவன், நம்மை விரைவில் மீட்பார்.

சொன்னதை செய்யும் தி.மு.க.,ஆர்.பொன்னார், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் வாசகர் ஒருவர், இப்பகுதியில், 'தி.மு.க., ஆட்சி அமைந்தால், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவிக்க மாட்டார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.அவர், 2016 சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை போலும். அதில், 'மதுவிலக்கை அமல்படுத்துவோம்' என, தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. இது குறித்து, மதுப் பிரியர்களிடம் பேட்டி எடுத்த போது, '1 ரூபாய்க்கு, அரிசி வழங்குவோம் என, 2006-ல், தி.மு.க., அறிவித்தது; சொன்னபடியே, அதை நடைமுறைப்படுத்தியது.'அதே போல், இப்போது, ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை நிச்சயம் அமல்படுத்தி விடுவர்; அதனால், தி.மு.க.,விற்கு ஓட்டளிக்கவில்லை' என்றனர்.மேலும், 'படிப்படியாக குறைப்போம்' என, அ.தி.மு.க., கூறியது. அவர்கள் நிச்சயம், அதை நிறைவேற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை, மதுப் பிரியர்களுக்கு இருந்தது; அதனால் தான், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.மேலும், மது ஆலைகள் அனைத்தும், தி.மு.க.,வினர் வசம் இருப்பதாகவும், பலர் கூறி வருகின்றனர்.தமிழகத்தில், அ.தி.மு.க., வினருக்கு சொந்தமான மது ஆலைகள் தான், அதிகம் உள்ளன. தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் தவிர, வேறு யாரிடமும், மது ஆலைகள் இல்லை. சிலர், அ.தி.மு.க., மீதுள்ள பற்றால், தி.மு.க., மீது வேண்டுமென்றே, புழுதி வாரி துாற்றுகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    "தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் தவிர, வேறு யாரிடமும், மது ஆலைகள் இல்லை. சிலர், அ.தி.மு.க., மீதுள்ள பற்றால், தி.மு.க., மீது வேண்டுமென்றே, புழுதி வாரி துாற்றுகின்றனர்". அப்போ டி ஆர் பாலு கிட்ட என்ன மூலிகை பெட்ரோல் ஆலையா இருக்கு...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement