Advertisement

'துாக்கம் தான் போடுறாங்க!'

Share

'துாக்கம் தான் போடுறாங்க!'


தஞ்சாவூர், வளமர்கோட்டையில், 100 நாள் வேலை திட்டத்தில், பாசன வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி, நேற்று முன்தினம் நடந்தது. அவ்வழியே சென்ற, கலெக்டர் கோவிந்தராவ், சீரமைக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து, சிறிது துாரம், வாய்க்காலை சீர்படுத்தும் பணியை மேற்கொண்டார்.கலெக்டர், மண் வெட்டுவதை பார்த்த, 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், மகிழ்ச்சியடைந்தனர்.அங்கிருந்த முதியவர் ஒருவர், 'இப்படி வந்து, மண் வெட்டணுமுன்னு அவசியமில்லை... அதுக்கு பதிலா, 100 நாள் வேலை திட்டம் ஒழுங்கா நடக்குதான்னு, தனக்கு கீழே இருக்குற அதிகாரிகளை, ஆய்வு செய்ய சொல்லலாம்... பல இடங்கள்ல, துாக்கம் போடுறாங்க...' என்றார்.
சுற்றியிருந்தோர், அவரது கருத்தை ஆமோதித்தனர்.



'நோய் வந்தா பரவாயில்லையா...!'


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, முகக்கவசம் அணியாமல் வீதிகளில் சுற்றும் நபர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்க, தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் ஜானகி உத்தரவிட்டார்.இதையடுத்து, தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில், அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதித்தனர்.செய்தி, மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு, தஞ்சாவூரில், 20, 21ம் தேதிகளில் நடத்திய சோதனையில், முகக்கவசம் அணியாதவர்களிடம், 45 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என, தகவல் தெரிவிக்கப்பட்டது.அங்கிருந்த புகைப்படக்காரர், 'கொரோனா தடுப்பு நிவாரண நிதியை, இப்படியாவது கொடுக்கட்டும் பா...' எனக் கூற, 'நோய் வந்தா பரவாயில்லையா...' என, மூத்த நிருபர் முறைக்க, அந்த போட்டோகிராபர், 'எஸ்கேப்!'



'திரும்பவும் கிளம்பிட்டாங்களே...'


தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், 'ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்' என, திருச்சி கலெக்டர் அலுவலகம் முன், கோவணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில், முடி திருத்தும் தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து, பழைய கலெக்டர் அலுவலக சாலையில், 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், அதன் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அடுத்தடுத்து நடந்த போராட்டத்தை கண்ட நிருபர் ஒருவர், 'கொரோனாவால, போராட்டம் ஏதும் இல்லாம, நாடு அமைதியா இருந்துச்சு... இப்ப திரும்பவும் கிளம்பிட்டாங்களே...' என்றதும், சுற்றியிருந்தோர் வேதனைப்
பட்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement