Advertisement

கண்ணின் வழி கொரோனா பரவும் அபாயம்!

Share

இன்று உலகம் முழுவதிலும் உச்சரிக்கப்படும் ஒற்றைச் சொல், கொரோனா. முதன் முதலில் இது சீனாவில் பரவியபோது வாய், மூக்கு, கண்கள் வழியாக சுவாசப்பாதையில் தொற்றுகிறது என்று சொன்னார்கள். இருமல், தும்மல், சளி வழியாகப் பரவுகிறது என்றார்கள். அப்படியான தொற்றுப் பரவலைத் தடுக்க மக்களை முகக் கவசம் அணியச் சொன்னார்கள்.

இப்போது உலகம் முழுவதிலும் மக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்துகொண்டுதான் செல்கிறார்கள்.
காரணம் என்ன

என்றாலும், கொரோனா பரவும் வேகத்தை எதிர்பார்த்த அளவுக்குக் குறைக்க முடியவில்லை. அதற்கு மருத்துவர்கள் காரணம் தேடினார்கள். இப்போது வந்துள்ள புதிய செய்தி என்னவென்றால், கொரோனா கண்கள் வழியாகவும் பரவுவது அதிகரித்து வருகிறது என்பதுதான். இனி, கண்களின் பாதுகாப்பு பற்றியும் பொது இடத்தில் பேச வேண்டும் என்கிறார்கள்
மருத்துவர்கள்.

கண்ணுக்கு உள்ள தொடர்புகொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைய வெளி அடுக்கு செல்கள் (எபிதீலியல் செல்கள்) தேவை. நம் கண்ணிலும் அவை இருக்கின்றன. கொரோனா உள்ள பொருள்களைத் தொட்டுவிட்டு கண்ணைத் தொடும்போது இந்த செல்கள் வழியாக கண்ணுக்குள் வைரஸ்கள் புகுந்துவிடுகின்றன.கண்ணுக்கும் மூக்குக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால்தான் கண்ணில் விடப்படும் மருந்தில் கொஞ்சம் மூக்குக்கும் வந்து, தொண்டைக்குச் செல்கிறது. இந்த செயல்முறையில்தான் கொரோனா கிருமிகள் கண்ணின் வழியாக சுவாசப் பாதைக்குள் நுழைகின்றன. இந்த வழியை அடைத்தால்தான் கொரோனா தொற்றுப் பரவலை இன்னும்
வேகமாகத் தடுக்க முடியும்.

முகக்கவசம் அணிவதில் ஏற்படும் தவறுகள்

நடைமுறையில் கொரோனா வைரஸ் உள்ள நீர்த்திவலைகள் நேரடியாக முகத்தில் விழுந்து கண்ணுக்குள் புகுவது கொஞ்சமே. நாமாக கண்களுக்குள் புகுத்திக்கொள்வதுதான் அதிகம். இதற்கு நமக்கு பாதுகாப்பு என்று கருதி அணிந்து கொள்ளும் முகக் கவசம்தான் முக்கியக்
காரணமாகிறது. எப்படி?

வெளியில் செல்லும்போது அடுத்தவரிடம் இருந்து கொரோனா கிருமிகள் முகக் கவசத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கலாம். ஆகவேதான் முகக் கவசத்தை அணிந்த பிறகு அதை முன்பக்கமாகத் தொடக்கூடாது என்கிறோம். ஆனால், பலரும் அதை 'சரி செய்கிறேன்' என்று
அடிக்கடி முன்பக்கம்தான் தொடுகிறார்கள். பேசும்போது முகக் கவசத்தை கீழே இறக்கிவிட்டு பேசுகிறார்கள். இப்படித் தொட்ட கையால் கண்களைத் துடைக்கிறார்கள். கசக்குகிறார்கள்.

கண்ணுக்குள் கிருமி
மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் அதை சரி செய்யத் தொடுகிறார்கள். நெற்றியில் வழியும் வியர்வையைத் துடைக்கிறார்கள். நெற்றியில் கைகளை வைத்து துாரத்தில் வருபவர்களைப் பார்க்கிறார்கள். கண்ணீரைத் துடைக்கிறார்கள். இவை எல்லாம் கொரோனாவுக்கு ஆகாதவை எனத் தெரியாமலே செய்கிறார்கள். அதனால் நமக்கு நாமே கொரோனா கிருமிகளைக் கண்ணுக்குள் நுழைத்துக் கொள்கிறோம். ஆகவே முதலில் நாம் முகக் கவசத்தை முறையாக அணியப் பழகிக்கொள்ள வேண்டும்.

முகக்கவசம் அணியும் போது கவனிக்க வேண்டியவை

முகக் கவசம் அணிந்துகொள்வதற்கு முன்பு கைகளை குறைந்தது 20 விநாடிகளுக்கு நன்றாக சோப்பு அல்லது சானிடைசர் தேய்த்துக் கழுவிக்கொள்ள வேண்டும். முகக் கவசத்தின் நாடாக்களை தொட்டுத் துாக்க வேண்டும். மூக்கு, வாய், தாடை ஆகிய பகுதிகள் நன்றாக
மூடும்படி காதுகளில் பொருத்திக்கொள்ள வேண்டும். முகத்துக்கும் முகக் கவசத்துக்கும் நடுவில் இடைவெளி இருக்கக்கூடாது.

முகக் கவசத்தின் முன் பக்கத்தில் கைபடக்கூடாது. அப்படிப் பட்டுவிட்டால் உடனே கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். கைகளைக் கழுவாமல் கண்களைத் தொடக்கூடாது. முகக் கவசம் அழுக்காகிவிட்டால் அதைக் கழற்றிவிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நேரத்துக்கு மட்டுமே ஒரு முகக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும். அதைக் கழற்றும்போது கைகளைப் பின்பக்கமாகக் கொண்டு சென்று அதன் நாடாக்களைக் கழற்றி முன்பக்கமாக வெளியில் எடுக்க வேண்டும்.

இப்போதும் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். ஒருவர் பயன்படுத்திய முகக் கவசத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.முகக் கவசம் அணியாத நேரங்களிலும் தேவையில்லாமல் கண்களைக் கசக்கக்கூடாது. அப்படி கண்களைக் கசக்கினாலோ, தொட்டாலோ, கண்ணீர் விட்டாலோ உடனடியாக முகத்தையும் கைகளையும் கழுவிக்கொள்ள வேண்டும். குழந்தைகள் அல்லது மற்றவர்களின் கண்ணீரைத் துடைக்க நேர்ந்தாலும் கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்.

மூக்குக் கண்ணாடி முக்கியம்

கைகளையும் முகத்தையும் கழுவிய பிறகே மூக்குக் கண்ணாடி அணிய வேண்டும். அடிக்கடி அதைக் கழற்றி வைக்க வேண்டாம். அப்படி கழற்றுவதாக இருந்தால் மறுபடியும் கைகளையும் முகத்தையும் கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது Eye shield கண்ணாடி அணிந்து
செல்வது நல்லது. அது கிடைக்காதவர்கள் கறுப்புக் கண்ணாடி (Sun glass) அணிந்துகொள்ளலாம். இது கொரோனா பரவும் காலமாக இருப்பதால் கண்ணுக்கு கான்டாக்ட் லென்ஸ் அணிய வேண்டாம்.

மூக்குக் கண்ணாடி சுத்தமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அதை அணியும் முன்பு டிஸ்யூப்பேப்பர் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். அதைக்
கழற்றும்போது அதற்கென்று உள்ள பெட்டியில் வையுங்கள். அதை அணிந்திருக்கும் ஆடையாலோ, துவாலையாலோ துடைக்காதீர்கள். கண்ணாடியை மிதமானசோப்புத் தண்ணீரில் நனைத்த மெல்லிய துணியால் துடையுங்கள். கண்ணாடி பிரேமை இளம் வெந்நீரில், சில துளிகள் சோப்புத் தண்ணீரைக் கரைத்துக்கொண்டு, அதில் நனைத்த துணியால்
துடையுங்கள்.


தினமும் 4 முறையாவது இப்படி சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். துடைக்கும் துணியை வாரம் ஒருமுறை மாற்றிவிடுங்கள். கண் உலருதல் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி கண்களைக் கசக்க நேரிடும் என்பதால் ஈரமூட்டும் கண் சொட்டு மருந்துகளைக் எப்போதும் கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.அவசரத்துக்கு மருத்துவமனைக்குச் சென்றால், கண் மருத்துவர்கள் தங்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க தலை முழுவதும் மூடக்கூடிய 'Head gear covering' போட்டுக்கொள்கிறார்கள்.


பயனாளிகளுக்கான பரிசோதனைக் கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பும்பின்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.கண்கள் பாதிக்கப்பட்டால்கொரோனா வைரஸ் கண்களை நேரடியாகப் பாதிப்பதும் உண்டு. அப்போது கண்கள் ஆப்பிள் பழம் போல் சிவந்து விடும். கருவிழியில் அழற்சி தோன்றும். கண்ணீர் வழியும். கண் உறுத்தலும் அதிகமாக இருக்கும்.


இவற்றைத் தொடர்ந்து காய்ச்சல், இருமல் கடுமையாகும். கண்ணில் அறிகுறிகள் தெரிந்தாலே உஷாராகிவிட வேண்டும். கண் மருத்துவரை ஆலோசித்து, கொரோனா நோய்க்கு
ஆரம்பத்திலேயே கடிவாளம் போட்டுவிட வேண்டும்.

- டாக்டர் கு.கணேசன்
மருத்துவ இதழியலாளர்
ராஜபாளையம்.
gganesan95@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement