Advertisement

சூழ்நிலை சிரீயஸ்...நீங்கள் சீரியஸ் ஆக வேண்டாம்! கொரோனாவை எதிர்கொள்ள சத்குருவின் டிப்ஸ்!

ஒரு வைரஸ், இவ்வளவு விழிப்புணர்வுக்கும், புத்திசாலித்தனத்திற்கும் ஆதாரமாக இருக்க முடியும் என்பது முன்பே தெரிந்திருந்தால், நானும் உங்களுக்கு ஒன்றை வழங்கியிருப்பேன். இவ்வளவு பயிற்சிகளை கற்றுத்தந்து, உங்களை விழிப்புணர்வான, புத்திசாலியான மனிதனாக மாற்றும் முயற்சியில் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தேனோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு வைரஸ் சர்வ சாதாரணமாக இதை சாதிக்கும் என்பது தெரியாமல் போய்விட்டதே!


இது சிரிக்கும் விஷயமில்லை. ஆனால், உங்கள் சிரிப்பை நீங்கள் தொலைத்துவிட்டால், வைரஸ் போய்விடாது. நீங்கள் ரொம்பவும் சீரியஸாக இருந்தால், இறப்பு நிகழ்வதற்கு முன்பே இறந்தவராக இருப்பீர்கள். எனவே, இது போன்ற நேரங்களில் தான், நாம் இன்னும் தெளிவாக, உற்சாகமாக, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.


நம் தேசத்தில் இன்னும் பிரச்சனை பெரிதாகவில்லை, ஆனால் எப்போது வேண்டுமானாலும் பெரிதாக மாறலாம். துரதிர்ஷ்டவசமாக, சில தேசங்களில் இது ஏற்கனவே பெரிய பிரச்சினையாகி விட்டது. இது போன்ற சிக்கலான சமயங்களில் தான், நீங்கள் எந்த மாதிரியான மனிதராக இருக்கிறீர்கள் என்பது முக்கியமானாதாகிறது! இது எப்போதுமே முக்கியம்தான். ஆனால் சாதாரண நேரங்களில், எல்லாவிதமான அற்பமான மனிதர்களும் வெவ்வேறு விதமாக நடித்து தப்பித்து விட முடிகிறது.


இப்போது இந்த வைரஸ்… இதைப்பற்றி உங்களுக்கு போதுமான அளவு தெரிந்திருக்கும். அதனால் இது என்ன, எப்படிப்பட்டது எனும் நுட்பங்களுக்குள் நான் செல்லவில்லை. ஆனால், இந்த வைரஸின் மிக மிக மகத்துவமான அம்சம் -இதை ஒரு கொசுவோ, எலியோ, வேறு ஏதோவொரு உயிரினமோ பரப்பவில்லை. இதை நாம் தான் சுமக்கிறோம், பரப்புகிறோம்! பிரச்சனையும் இதுதான், நமக்கு மிகப்பெரிய சாதகமான விஷயமும் இதுதான்!


ஏனென்றால் நாம் மனிதர்களாக இருக்கிறோம். இப்போது நாம் இதை முடிவு செய்ய வேண்டும் - நாம் மனிதர்களா? இல்லை மனித விலங்குகளா? நாம் மனிதர்களாக இருந்தால், இப்போது எப்படி இருக்க வேண்டும் என்பது நமக்கு தெரியவேண்டும். இது நமக்கு தெரிந்திருந்தால், அடுத்தடுத்த மனிதர்களுக்கு இதை பரப்பாமல் இருப்பதற்கான எளிய விதிமுறைகளை பின்பற்றுவது அனைவருக்கும் சாத்தியமே.


நீங்கள் மனித உருவில் விலங்குகளாக இருந்தால், எப்படியும் ஒருவர் மீது ஒருவர் குவிந்து, உலகளவில் இதை பரப்புவீர்கள். ஒருவேளை நீங்கள் தான் இந்த வைரஸை பரப்பும் ஏஜென்ட்டோ என்னவோ?! நான் விளையாட்டிற்காக சொல்லவில்லை. நீங்கள் தான் இந்த வைரஸை பரப்பும் ஏஜென்ட்.


நம்மில் பலரிடமும் அது எந்த அறிகுறியும் காட்டாமலேயே இருக்கலாம். சிலரிடம் லேசான நோய் அறிகுறிகளை, சிலரிடம் மிக மோசமான நோய் அறிகுறிகளை காட்டலாம், நம்மில் சிலர் இறந்தும்விடலாம். நம்மிடம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால், இந்த வைரஸை உயிருக்கே அபாயம் வரக்கூடிய வேறொருவருக்கு நாம் கொடுத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால், அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய ஒருவருக்கு இந்த வைரஸை கொடுத்தவர்கள் நாமாவோம். அதனால்தான், நீங்கள் எந்த மாதிரியான மனிதர் என்பதை காட்டுவதற்கு இதுதான் நேரம் என்கிறோம்!


இப்போது நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலே, உலகத்திற்கு அற்புதமான ஏதோவொன்றை செய்திருக்கிறோம் என்று மிக மன நிறைவாக உணர முடியும், இது பெரிய விஷயம் தானே! எதுவும் செய்யாமல் இருப்பது எப்படி என்பதைப் பற்றி நாம் பல ஆண்டுகளாக பேசி வந்திருக்கிறோம்.


பல்வேறு கருவிகளை, போதனைகளை, வழிமுறைகளை உருவாக்கிக்கொடுத்தோம் - எல்லாம், ஒரு சில நிமிடங்கள் ஒன்றும் செய்யாமல் உங்களை உட்கார வைப்பதற்கு! ஆனால் இப்போது உங்களுக்கு இந்த வாய்ப்பு தானாகவே தேடி வந்திருக்கிறது - எதுவும் செய்யாமல் இருந்தாலே, தேசத்துக்கு, மக்களுக்கு, மனித குலத்திற்கே மகத்தான சேவை செய்கிறீர்கள். இதற்கு முன் உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இருந்ததில்லை. இப்படி இன்னொரு வாய்ப்பு கிடைக்காது! இதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!


கொரோனாவால் பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் - இது முழு முதலான உண்மை இல்லை, ஆனால் உலகில் போதிய அளவு நிரூபணமாகியிருக்கிறது. மருத்துவ காரணங்களால் ஏதாவது இம்யூனோபிளாக்கர் பயன்படுத்துபவர்கள், இரத்த உறைவெதிர்ப்பி மருந்துகள் பயன்படுத்துபவர்கள், ஏதாவது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள், மற்றும் ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரிவினராக இருக்கிறார்கள்.


இவர்கள் அனைவரும் நம் மத்தியில் நல்லவிதமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நமது பொறுப்பு. அடுத்த 12 மாதங்களுக்கு நீங்கள் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஏனென்றால் 12 மாத காலத்தில் இந்த வைரஸ் அதனுடைய நாடகத்தை நடத்தி முடிக்கும் என்று கணக்கிடுகிறோம்.


பொதுவாக ஒருவர் வைரசால் பாதிக்கப்பட்டிருந்தால், முதல் 3 லிருந்து 4 நாட்களுக்கு பொதுவாக எந்த அறிகுறியும் இருக்காது. 4வது - 5வது நாள் லேசான காய்ச்சல் வரலாம். இது லேசான காய்ச்சல்தானே என்று கவனிக்காமல் விடக்கூடாது. 6-வது 7-வது நாளுக்குள் இருமல் ஆரம்பிக்கலாம். 9-வது 10-வது நாளுக்குள், இது நுரையீரலில் நிமோனியாவாக மாறலாம். அல்லது மோசமானால், நார் திசுக்கட்டிகளாக மாறலாம். ஆனால், லேசான காய்ச்சல் வந்தவுடனேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், நீங்கள் 1 வயதிலிருந்து 60 வயதிற்குள் இருந்தால், மிக சுலபமாக, 99% சமயம் நீங்கள் குணமடைந்துவிட முடியும். ஆம், 99%!
நாம் செய்து வரும் ஆன்மீகப் பயிற்சிகளுடன், ஓரளவுக்கு நம் தினசரி வாழ்க்கை முறையில் கவனத்துடன், எப்படி சாப்பிடுகிறோம், வாழ்கிறோம் என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டாலே, நம்மால் ஓரளவு இதைத் தாண்டி வர முடியும்.


ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது, வைரஸ் யாருக்கு வரும்- யாருக்கு வராது என்று நாம் பிரித்துப் பார்க்க வழியே இல்லை. 12 லிருந்து 18 மாதங்களில், இந்த பூமியில் இருக்கும் எல்லாருக்குமே இந்த வைரஸ் வரும். கேள்வி இதுதான் - இதை நாம் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்த அனுமதிப்போமா, அல்லது சும்மா ஒரு சளி, காய்ச்சல் போல கடந்துபோவோமா? இது நாம் செய்யும் பல விஷயங்களையும் சார்ந்திருக்கிறது.


எல்லாவற்றிற்கும் மேல், இதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருக்கிறது - ஒருவர் உற்சாகமாக, ஆனந்தமாக, அற்புதமாக இருந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தியானது எப்போதும் எதைப் பற்றியாவது கவலையாக, துயரமாக இருப்பவரைவிட இன்னும் சிறப்பான நிலையில எப்போதும் இயங்குகிறது.


சூழ்நிலை சீரியஸாகத் தான் இருக்கிறது, ஆனால் நீங்கள் சீரியசாக வேண்டியதில்லை. நான் சீரியஸாக இல்லையென்பதால், அற்பமாக இருக்கப் போகிறேன் என்று அர்த்தமா? இல்லை! நான் ஆனந்தமாக, பொறுப்பாக, புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளப் போகிறேன். இப்படித்தானே நீங்கள் இருக்கவேண்டும்.


குறிப்பாக, நீங்கள் பதற்றமாக இருக்கும் போது ஸ்தம்பித்து போவீர்கள். நீங்கள் செயலிழந்து, ஒரு சூழ்நிலையை இன்னும் சிறப்பாக கையாள முடியுமா?உங்கள் புலன்கள் கூர்மையாக செயல்படும் நிலையிலும், உங்கள் உடலும் மூளையும், சூழ்நிலையின் தேவைக்கேற்ப செயல்படுவதும், பதில் கொடுப்பதும், இப்போது மிக முக்கியம்.


ஒரே நேரத்தில் நம்மில் பலர் பாதிக்கப்பட்டால், நம் மக்கள் தொகையின் 10 சதம் அழியும் படியான பேரழிவு ஏற்படலாம் என சில விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் குறிப்பிடுகிறார்கள். அப்படி நடப்பதை நாம் விரும்பவில்லை. அதனால் நாம் ஒவ்வொருவருமே பொறுப்பாக நடந்துகொள்வது மிக மிக முக்கியம்.


ஒரு வேளை நோய் வாய்ப்பட்டவர் போல தெரியும் ஒருவர் நம்முடன் தொடர்பில் வந்தால், அவர்கள் நோய்வாய்ப்படாமலேயே இருந்தாலும், உடனே சிகிச்சையகம் சென்று உங்களை நீங்களே சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நெறிமுறையை நாம் பின்பற்ற வேண்டும்.


இது நீண்ட காலத்துக்கானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 3 நாளிலயோ 7 நாளிலயோ, 15 நாளிலயோ இது முடிந்துவிடும் விஷயமில்லை. 21 நாட்களுக்கு நாம் இப்படி செய்ய விரும்புவது, அதனுடைய சுழற்சியை உடைத்து, அது பரவும் வேகத்தை குறைக்க வேண்டுமென்பதற்காக! ஆனால் இது அதற்குள் முடிந்துவிடாது. பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்துப்படி, நமது உடல் இந்த வைரஸை கையாளக் கற்றுக்கொள்ள 12 லிருந்து 18 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள்.


இந்த வைரசுக்கு நீங்கள் தான் வீடு. அவர்களுக்கு இங்கே வாழ பிடிக்கும். நிச்சயம் இன்னும் நிறைய வீடுகளுக்கு பரவி, அவர்களது ராஜ்ஜியத்தை விரிவாக்கவும் விரும்புவார்கள். ஆனால் உங்கள் உடலுக்கு அதை எதிர்த்துப் போராடுவதற்கும், அதை தாக்குப் பிடிப்பதற்கும் போதுமான நோய் எதிர்ப்புசக்தி இல்லையென்றால், துரதிர்ஷ்டவசமாக நீங்கள் இறக்க நேர்கிறது.
இந்த உயிரிழப்புகள் தான் நமக்கு கவலை தரும் விஷயமாக இருக்கிறது. வெறும் சளி காய்ச்சலாக இருந்திருந்தால் நாம் கவலைப்பட்டிருக்க மாட்டோம்.


உலகம் முழுக்க இது பல லட்சம் மக்களை பாதிக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள். மனித சமுதாயங்கள் உண்மையிலயே பொறுப்பாக நடந்து, தனிமனிதர்களுக்கு இடையில் இடைவெளி விட்டு இருந்தால் நாம் நிச்சயமாக இந்த சூழ்நிலையை வெற்றிகரமாக கடந்து வருவோம். சமூகத்தில், பொதுவிடங்களில் தானே கூட்டம் சேரக்கூடாது, நம் வீட்டிலேயோ நம் அறையிலயோ நாம் பார்ட்டி நடத்தினால்... இது அப்படி வேலை செய்யாது. தனி நபர்களுக்கு இடையில் நிச்சயமாக இடைவெளி இருக்கவேண்டும்.


கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும் போது நாம் நம் செயல்களை நினைத்து தலைநிமிர்ந்து நடக்க போகிறோமோ அல்லது தலைகுனிய போகிறோமா என்பது நம் கையில் தான் உள்ளது.


கட்டுரையாளர் - சத்குரு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர்
(சத்குரு பேசிய முழு வீடியோவை பார்க்க இந்த லிங்கை https://www.youtube.com/watch?v=iPraPVuQow8 கிளிக் செய்யவும்)

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement