dinamalar telegram
Advertisement

மீண்டும் ஊரடங்கு

Share

பகுதி பகுதியாக, 'லாக் டவுன்' நீங்கப் போகிறது என்ற மகிழ்ச்சி செய்தி வருவதற்கு பதிலாக, வரும் புதன் வரை ஊரடங்கு அமலாகி விட்டது.

சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் மாநகரங்களில் உள்ள மக்கள் தொகை கிட்டத்தட்ட, 2.5 கோடிக்கு அதிகம். தமிழக மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட, 40 சதவீதம் பேர். இது தவிர பல்வேறு மாவட்டங்களில், 'கொரோனா' பாதிப்பு உள்ள பல, 'சீலிடப்பட்ட' மக்கள் பகுதிகள் உள்ளன.

கடந்த, 10 நாளில், 'கோவிட் - 19' நோய் தொற்று இரு மடங்கு பரவியதே இதற்கு காரணம். தமிழகத்தில் இத்தொற்று உள்ளவர், 1,800 வரை அதிகரித்து விட்டனர். அதே சமயம், ஏற்கனவே இந்த நோய்க்கூறு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று, மீண்டு திரும்பியவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்தியாவின் தலைநகர் டில்லி, வர்த்தக நகரான மும்பை, அதிக அளவு தொழில் நிறைந்த ஆமதாபாத் மற்றும் மஹாராஷ்டிராவின் புனே ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, நாம் பரவாயில்லை.ஆனால், சமூக பரவல், இடைவெளி இல்லாத மக்கள் கூட்டம் இந்த வைரசுக்கு சாதகமானது. இன்னமும் இந்த நோய் பாதிப்பிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை எனினும், நுரையீரல் பாதிப்பு சோதனைகள் பலன் தருகின்றன. அதில், 'எக்ஸ் - ரே'யும் ஒன்று.மக்களைக் காக்கும் டாக்டர்களை, முதல்வர், இ.பி.எஸ்., 'இறைவனாக' உருவகித்திருப்பது சரியானதே.


ஆனால், டாக்டர்கள் சம்பள உயர்வு பற்றி, தமிழக அரசு மவுனம் சாதிக்கிறது. கோவிட் பீதி வந்ததும், டாக்டர்கள் போராட்டம் நின்றது, அவர்களது சேவை மனப்பான்மையின் அடையாளமாகும்.கேரளாவில் தரப்படும் சம்பளம் இங்கு இல்லை. நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், லட்சம் பேர் இருக்கலாம். இங்கு, 10 ஆயிரத்திற்கும் அதிகம். டிகிரி பட்டத்துடன் சில மேற்படிப்புடன், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, பதவியில் அமர்வோர் பெறும் சம்பளத்தை விட, அரசு மருத்துவமனையில் சேரும் டாக்டர்கள் சம்பளம் குறைவு.


10 ஆண்டுகள் ஆனால், மாதச் சம்பளம், 1.5 லட்சம் ரூபாய் கூட கிடையாது.தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லுாரிகள் ஏற்பட்டதால், அடுத்த இரு ஆண்டுகளில், டாக்டர் பட்டம் பெற்றவர் எண்ணிக்கை நிரம்பும் என்ற வாதம் சரியல்ல.ஏற்கனவே, டாக்டர்கள் அமைப்பு விடுத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதுடன், அவர்களது அடிப்படை மாத சம்பளம், லட்சம் ரூபாய் அல்லது சற்று கூடுதலாக இருக்க வேண்டும்.


இதனால், அரசுக்கு சில நுாறு கோடி ரூபாய் செலவு ஏற்படலாம். வேறு எத்தனையோ அர்த்தமற்ற செலவினங்களை விட, இது உபயோகரமானது.ஆரம்ப சுகாதார நிலையம் துவங்கி, மாவட்ட அரசு மருத்துவ மையம் வரை, பணிகள் சீராக இது தேவை. அதேபோல நிலவேம்பு கஷாயம், கபசுர கஷாயம் போன்றவை, நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் காரணிகளா என்பது ஆய்வுக்கு உட்பட்டது.அதுவும் இத்தொற்று அபாயம் கண்டு, 'வீரமிக்க' இளைஞர்கள் அஞ்சுகின்றனர்.


வாழ ஆசைப்படும் மக்கள் உணர்வு, வீடுகளில் கட்டிப் போட்டபடி இருக்கும் போது அதிகரிக்கும். ஊரடங்கு முடிந்து, 'சுயசார்புள்ள' இந்தியர் கூட்டம் எப்படி அமையும் என்பதை, அடுத்து வரும் சில நாட்கள் புரிய வைக்கும். மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி ரத்தால், அரசுக்கு, 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவு குறையும்.பாதுகாக்கப்பட்ட பணி, கடைசி காலம் வரை பென்ஷன், குறிப்பிட்ட கால வரையறையில் சம்பள உயர்வு பெறும் இவர்கள், மோடிக்கு ஆதரவாக ஓட்டளிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதனால், காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக வளரட்டும்.

அதேசமயம் இயல்பு வாழ்வு படிப்படியாக திரும்பிய பின், குறிப்பாக வரும் ஜூன் வரை, எந்த நிறுவனம், 10 முதல், 20 சதவீத சம்பளத்தை, தன் தொழிலாளரிடம் பிடித்தம் செய்யும் என, மதிப்பிட முடியாது. இவை அடுத்த கட்டமாக, 'வாட்ஸ் ஆப்' அலசலுக்கு உதவுமே தவிர, நடைமுறை நிதர்சனத்திற்கு பொருந்தாது.இன்றுள்ள நிலையில், சீனாவின் மீதான அதிருப்தியால், உலக நாடுகள், அதன் பொருளாதார வளர்ச்சியை தடுக்க முயன்றால், அது இந்தியாவுக்கு வாய்ப்பைத் தரலாம்.

அதற்கேற்ற பொருளாதார நடைமுறை வளர்ச்சிகளை, மத்திய அரசு எப்படி அணுகும் என்பதே இன்றைய அடுத்தகட்ட சிந்தனையாகும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆல்வின், பெங்களூர் - ,

    இந்த கட்டுரை தற்போதைய சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல் உள்ளது. சந்தடி சாக்கில் ஊதிய உயர்வு கோரும் செயலாகும். ஊதிய உயர்வு என்பது பல காரணிகளை கொண்டது. மருத்துவர்கள் சேவைக்கு இணையானது தான் செவிலியர்கள் சேவை. ஆனால் இந்த லாபி அவர்களுக்கு குரல் கொடுக்காது. ஒவ்வொரு மருத்துவர்களும் தனியே கிளினிக் அமைத்து பெரும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு செவிலியர்களுக்கு உண்டா? அந்த கிளினிக்கில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அவர்கள் தரும் ஊதியம் மிகவும் குறைவு. கொரோனாவை காரணம் காட்டி அரசை பயமுறுத்தும் பணியை தவிர்க்க வேண்டும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement