எல்லாவற்றையும் முந்தி நிற்கும், 'கொரோனா' வைரஸ், பெரும் மனக்கலக்கத்தை மக்கள் நடுவில் ஏற்படுத்தியிருக்கிறது. இது அதிகம் அறிமுகம் இல்லாத வைரஸ். அப்படி எனில், இதன் தாக்கம் மற்றும் பரவும் விதம் ஆகியவை, அதிக குழப்பத்தை தருகிறது.சீனா, இத்தாலி, சில ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம், 6,500 பேரை பலிவாங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் இந்நோய்க்கு ஆட்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவைப் போல, பல கோடி மக்கள் அடங்கிய நம் நாடு, இந்த அச்சத்திற்கு உள்ளாவது இயற்கை.ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக தடை உத்தரவு பிறப்பித்தது போல, பல்வேறு மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.துபாய் வழியே விமானம் மூலம் வரும் பயணியர் தனிமைப்படுத்தப்படுவது சரியானதே. இவர்கள் உடனே குடும்பத்தினருடன் அதீதமாக பழகினால், அதனால் ஆபத்து வரலாம், வராமலும் இருக்கலாம்.பொதுவாக டைபாய்டு போன்ற சில பாதிப்புகளை, நாம் கையாண்ட விதமும், பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போலவும் இந்த கொரோனாவிற்கு ஏதும், தடுப்பூசி இல்லை.டில்லியில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலருக்கு, இந்த நோய் அறிகுறி இருந்ததாகவும், அதற்கு வைரசை தடுக்கும் சில மருந்துகள் சேர்க்கை தந்ததால், குணமாகி விட்டனர் என்பதும் ஒரு தகவல்.அப்படிப் பார்க்கும் போது, நம் மருத்துவர்கள், அந்தந்த கால கட்டத்தில் ஏற்படும் பிரச்னைகளை கையாளத் தெரிந்த விதம், நம் நாட்டில் காணப்படும் சிறப்பான அம்சம் எனலாம்.ஆனால் அரசு கவிழும் ஆபத்தை எதிர்நோக்கும் ம.பி., முதல்வர் கமல்நாத், கொரோனாவைக் காரணம் காட்டி சபை கூடுதலை ஒத்திவைத்த விதம், எதற்கு என்று தெரியவில்லை. பீஹார் சட்டசபை மூடப்படவில்லை. தமிழகம் இதில் சிறப்பாக முடிவெடுத்திருக்கிறது.ராஜ்யசபா, லோக்சபாவையும் கொரோனாவைக் காரணம் காட்டி நடவடிக்கைகளை சில நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டிய நடவடிக்கை எதற்கு? மக்களை வழிகாட்டும், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள், பாமர மனிதர்களைப் போல அல்ல. சுகாதாரத்துறை குறித்த தகவல் அறிந்தவர்கள். பல்வேறு சட்டங்களை இயற்றும் தகுதி படைத்தவர்கள். அப்படியிருக்கும் போது, ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப் பள்ளிகளை மூடுவது போல, இவற்றையும் மூட நேர்ந்தால், அது அவமானகரமானதாகும்..அப்படிப் பார்த்தால், காவலர்கள், மற்றும் பொதுநிர்வாகம் தொடர்பான அரசு பணியாளர்கள், எப்படி வீட்டில் இருந்தபடி வேலை பார்க்க முடியும்?ஐ.டி., துறையில், வீட்டில் இருந்து வேலைபார்க்கும் வசதி, எத்தனை ஆயிரம் பேருக்கு பொருந்தும்? அத்துறையில் பணியாற்றுவோர் எத்தனை பேர் என்ற கணக்கு இருக்கிறதா? திரையரங்கம் மூடல் என்பது சரி. ஏனென்றால், வரும் ரசிகர்கள் கூட்டமாக இருப்பதும், சமயங்களில் அங்குள்ள டாய்ெலட் வசதிக்குறைவும், அங்கு விற்கப்படும் குளிர்பானம் உட்பட பல, தரக் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதும் உண்மை.சீனாவின் வூஹான் பகுதி, உலக வர்த்தகத்துடன் இணைந்த பகுதி. அதனால் இந்த வைரஸ் பரவக் காரணமானது. சீனாவின் அடக்குமுறை ஆட்சி, இரு மாதங்களுக்கு முன்பே வைரஸ் தொற்று பாதித்ததும், அதை வெளிப்படுத்தவோ அல்லது தடுக்கும் முயற்சிகளையோ மேற்கொள்ளவில்லை. விளைவு, 'பான்டமிக்' என்ற உலகத் தொற்றாக வளர்ந்திருக்கிறது.இந்த தொற்றை சாதாரண மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிய முடியாது. அதற்கென பிரத்யேக மருத்துவ, 'கிட்' தேவை. அந்த சோதனை செய்யும் மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் அதிகம் இல்லை. அதனால் முதலில் சந்தேகத்திற்கு உள்ளானவர்களை பரிசோதிக்க, சில நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது.அது மட்டும் அல்ல, சீனப் பொருளாதாரம் மட்டும் இன்றி, நமது நாடு உட்பட பல நாட்டின் மொத்த வளர்ச்சியை பாதித்திருக்கிறது. ஏற்றுமதித் துறை மிகவும் பாதிக்கப்படும். நல்லவேளையாக தொழில்துறைக்கு தேவைப்படும் கடன் வசதிகளைத் தர ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருப்பதும், சுகாதார அமைச்சர் இந்த நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதும், மத்திய அரசு இதில் அதிக அக்கறை காட்டும் செயலாகும்.விமான சேவை, போக்குவரத்துத் துறை மற்றும் சில துறைகள் படும் நஷ்டத்தை, இப்போது கணக்கிட முடியாது . மார்ச் மாதக் கடைசியில் இதன் அளவு தெரியும் என்றாலும், நல்லவேளையாக இந்தியாவில் பணவீக்கம் அதிகம் இல்லை. ரிசர்வ் வங்கி டாலர் கையிருப்பு கணிசமாக இருக்கிறது. அதனால் தொழில்துறை தேக்கம், அதிக அளவில் பாதிக்க வாய்ப்பில்லை.அத்துடன், 'ஒயிட்குட்ஸ்' என்ற, 'பிரிஜ், டிவி' போன்ற பொருட்கள் விலைகள் உயர்வதையும், அதை வாங்கும் சக்தி குறைவதும், இந்த கொரோனா தந்த கொடையாக கருதலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!