Advertisement

யூனியன் ஆபீசை ஆட்டி படைக்கும் பெண் ஊழியர்!

யூனியன் ஆபீசை ஆட்டி படைக்கும் பெண் ஊழியர்!


''கள்ளக்காதல் விவகாரத்துல சிக்குனவரை, மேலிட தலைவர் காப்பாத்த முயற்சி செய்யலாமான்னு விவாதமே நடக்குதுங்க...'' என, பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.''எந்தக் கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி நகர, தி.மு.க., செயலர் சாரதிகுமார் மேல, அவரது மனைவியே போலீஸ்ல புகார் குடுத்திருக்காங்களே... சாரதிகுமார், கள்ளத்தொடர்பு வச்சுக்கிட்டு கொடுமை பண்றதா, புகார்ல சொல்லியிருந்தாங்க...''வழக்கமா, இந்த மாதிரி புகார்ல சிக்குனா, அவங்க கட்சி பதவியை பறிச்சு, கட்சியை விட்டு நீக்கிடுவாங்க... ஆனா, சாரதிகுமார் மேல, கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கலைங்க...''விசாரிச்சதுல, மேலிட தலைவர் ஒருத்தருக்கு, சாரதிகுமாரின் அப்பா ரொம்ப வேண்டியவராம்... அந்த நட்புல, சாரதிகுமார் மேல நடவடிக்கை எடுக்க விடாம, மேலிட தலைவர் காப்பாத்திட்டு இருந்தாருங்க... ''இப்ப, விவகாரம் விஸ்வரூபம் ஆனதால, அவரை ராஜினாமா பண்ண சொல்லிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''துரைமுருகன், கொஞ்ச நாளா உங்களை பார்க்க முடியலையே... வெளியூர் போயிருந்தீயளா...'' என, நண்பரிடம் நலம் விசாரித்த அண்ணாச்சியே, ''கலெக்டர் அலுவலகத்துலயே, 'கிடுக்கிப்பிடி' போட சொல்லிட்டாருல்லா...'' என, அடுத்த மேட்டருக்கு சென்றார்.''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.''மதுரை கலெக்டரா இருக்கிறவர், டாக்டர் வினய்... பைக்குல போறவங்க, 'ஹெல்மெட்'டும்; கார்ல போறவங்க கண்டிப்பா, 'சீட் பெல்டும்' போடுறதை தீவிரமாக கண்காணிக்கணும்னு, போலீசாருக்கு உத்தரவு போட்டுஇருக்காரு வே...''இதை, கலெக்டர் அலுவலகத்துலயும் கண்டிப்பா அமல்படுத்துங்கன்னும் சொல்லிட்டாரு... ''அதனால, கலெக்டர் அலுவலகத்துக்கு, ஹெல்மெட், சீட் பெல்ட் போடாம வர்றவங்களை, போலீசார் அனுமதிக்கிறது இல்லை... இதுக்கு பல தரப்புலயும் ஆதரவு கிடைச்சிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''யூனியன் ஆபீசையே ஆட்டி படைச்சுண்டு இருக்காங்க ஓய்...'' என, கடைசி தகவலுக்கு தாவினார், குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருச்சி, மணப்பாறை யூனியன் அலுவலகத்துல, ஒரு பெண் ஊழியர் இருக்காங்க... இவங்க, 100 நாள் வேலை திட்டத்துல, போலி கார்டுகள் மூலமா, நிறைய பேர் வேலை பார்த்ததா கணக்கு காட்டி, மாசம் பல லட்சம் ரூபாயை அள்ளிடுறாங்க ஓய்...''அதுவும் இல்லாம, பஞ்சாயத்து செயலர்களை கைக்குள்ள போட்டுண்டு, கணிசமா சம்பாதிச்சிட்டு இருக்காங்க... இந்தம்மா, 'டார்ச்சர்' தாங்க முடியாம, ஒரு செயலர் உடம்பு சரியில்லாம, இறந்தே போயிட்டார் ஓய்...''உயர் அதிகாரிகளை கூட மதிக்க மாட்டேங்கறாங்க... அப்பப்ப, 'மாவட்டத்துல இருக்கற ரெண்டு அமைச்சர்களையும் எனக்கு நன்னா தெரியும்... எங்கிட்ட யாரும் எதுவும் வச்சுக்காதேள்'ன்னு ஜம்பமா பேசுறாங்க... இதனால, அவங்க மேல நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயங்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.''அந்தோணிசாமி, உம்ம தங்கை ஜூலி ஊருக்கு போயிட்டாங்களா வே...'' என, விசாரித்தபடியே அண்ணாச்சி எழ, பேசியபடியே பெரிய வர்கள் நடந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement