Advertisement

.வாழ்வோம்....வாழ விடுவோம்

இந்த உலகம் மனிதனுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் பொதுவானதாகவே படைக்கப்பட்டது. மனிதனுக்கு இந்த மண்ணில் வாழ்வதற்கு எந்த உரிமை இருக்கிறதோ, அதே உரிமை தாவரங்களுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், பல்லுயிர்களுக்கும் உண்டு. மனிதன் இன்றி மரங்கள் உயிர்வாழும். ஆனால் மரங்களின்றி மனிதன் உயிர்வாழ முடியாது.நமது முன்னோர் இயற்கையின் சக்தியை இறைவனாக வழிபட்டனர். ஆண்டவனை மரத்தின் அடியில் வைத்து தொழுதார்கள். இன்றும் அரச மரத்து பிள்ளையாரும், வேப்பமரத்து மாரியாத்தாள், கருப்பணசாமிகள் தான் நமது காக்கும் கடவுளர்கள்.
காடுகளை பாதுகாப்போம்
மரத்தை வெட்டாதே, காட்டை அழிக்காதே, கடலை குப்பை தொட்டியாக்காதே என்று கூறினால் யாரும் கேட்க தயாராக இல்லை. மரத்தை வெட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இயற்கை வளத்தை பாதுகாக்க முடியும். இந்திய நிலப்பரப்பில் 22 சதவீதம் தற்போது காடுகளாக உள்ளன. நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியாக 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை.ஜப்பான் நிலப்பரப்பில் 10 சதவீதம் காடுகளாக இருக்கின்றன. உலகிலேயே மிகவும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரமான டோக்கியோ மற்றும் நகரங்களில் ஜன நெருக்கம் அதிகமாக இருந்தும், தங்களது காடுகளை பாதுகாப்பதில் ஜப்பான் தீர்மானமாக இருக்கிறது.தனக்கு வேண்டிய மரங்களை இந்தியா, தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறது.அழிக்கப்படும் வனங்களுக்கு பின்னால் ஓர் அரசியல் மற்றும் பன்னாட்டு சதி இருக்கிறது. நம் காடுகளில் தான் மிக வேகமாக அழிந்து வரும் உயிரினங்கள் உள்ளன. தமது நாட்டு காடுகளை பாதுகாக்கும் வல்லரசுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகள் காட்டு வளங்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கின்றன.

இயற்கைக்கு எதிரான வாழ்க்கை

இரண்டாம் உலகப்போரின் போது துாவப்பட்ட பார்த்தீனிய விதைகள், லேண்டான கேமரா போன்ற களைகள், முதல் பசுமைப்புரட்சி, பி.டி., ரக விதைகள் வரை மேலை நாடுகளின் சதி விருட்சமாகி வளர்ந்து நிற்கின்றன. நம் வாழ்க்கை இயற்கைக்கு எதிராகத் திருப்பப்பட்டு இருப்பதை உணர்ந்தால், அது சூழலியலில் செய்யப்படும் தந்திரத்தை அறியலாம்.செல்வக்கிடங்கான இந்தியா இப்போது குப்பை கிடங்காக இருக்கிறது. யாரும் வனங்களை, இயற்கை செல்வங்களை, கடல் வளத்தை அரவணைக்க தயாராக இல்லை. வனத்தில் வளத்தை சுரண்டுவதே அவர்களின் குறி. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளை கொண்டாடும்போது, நினைவாக ஒரு மரத்தை நட்டு ஆளாக்கினால் நாடு காலப்போக்கில் சோலைவனமாகும். ஆளுக்கொரு மரம் வளர்ப்பதும், ஆண்டுதோறும் மரம் நடுவதும் முடியாத காரியமே அன்று.

இயற்கையை காப்பாற்றுவோம்

இந்த உலகில் எல்லாமே பொழிகின்ற மழையை பொறுத்தே நிகழ்கின்றன. இயற்கையை காப்பாற்றுவதும், இயன்ற அளவு இயற்கையோடு இயைந்து வாழ்க்கையை அமைத்து கொள்வதும் நமது தலையாய கடமை. சிறுத்தை, புலி தமிழ்நாட்டில் 2,500 உள்ளன. இந்தியா முழுவதும் சுமார் ஒரு லட்சம் சிறுத்தை, புலிகள் இருக்கின்றன. சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிசா மாநில காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.''சீட்டா'' எனப்படும் வேங்கைகள், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவிலும் வேறும் எங்கும் இல்லை. ஆப்பிரிக்க காடுகளில் மட்டும் காணப்படுகின்றன. வேங்கை தமிழ்நாட்டில் கடைசியாக பார்க்கப்பட்டது 1930 ல் தான். ஜமீன்தார்களும் அரசர்களும் வேட்டையாடி அதனை வீரம் எனக்கூறி அழித்து ஒழித்தார்கள்.உடலில் வரிகள் கொண்டது புலி. வட்டமான ''ஸ்பாட்டுகள்'' கொண்டது சிறுத்தை. ஒரு புலியின் மேல் உள்ள வரிகள் போன்று இன்னொரு புலிக்கு உடலில் வரிகள் அமையாது. இதனால் ஒவ்வொரு புலிகளையும் வரிகளை கொண்டு வேறுபடுத்தி அடையாளம் காணலாம்.

அழிவின் விளிம்பில் பல்லுயிர்கள்

மனிதனின் பேராசையாலும், காடுகளுக்குள் தீயை வைப்பதாலும், ஆடு, மாடுகளின் மேய்ச்சலாலும், தவறான விவசாய பயன்பாட்டினாலும் காடுகள் வெகுவாக அழிந்து வருகின்றன. காடுகள் என்பது இயற்கை நமக்கு அளித்திருக்கும் விலை மதிப்பிட முடியாத சொத்து. இதில் ஒரே பிரச்னை என்னவென்றால், மற்ற சாதாரண சொத்துக்களை போன்று இதை பூட்டு, சாவி கொண்டு பூட்டி வைக்க முடியாது. காம்பவுண்ட் சுவர் கட்டி பாதுகாக்க முடியாது.காடுகளில் உள்ள எண்ணற்ற பறவைகள், தேனீக்கள், பூச்சிகள், புழுக்கள், நுண்ணுயிர்கள் விவசாயத்திற்கு உதவுகின்றன. நாம் பயிரிடும் எல்லா வகை பயிர்கள் மற்றும் செடிகளோடு ஒப்பிடும்போது காடுகளில் வளரும் அதே வகை பயிர்கள், நெல்லோ, மிளகாயோ, தக்காளியோ இன்னும் வீரியம் மிகுந்ததாக, சத்துள்ளதாக உள்ளன.காடுகளில் இருக்கும் ஒவ்வொரு செடிக்கும் மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ''மருந்து'' என்ற வார்த்தையே ''மரத்திலிருந்து'' தான் வந்தது. காடுகளில் உள்ள மூலிகைகளின் மருத்துவ குணங்களை 60 சதவீதம் தான் உபயோகப்படுத்தி வருகிறோம். இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டியவை அதிகமுள்ளது. நவீன மருந்துகளுக்கு அடிப்படை பொருட்கள், காடுகளில் தான் கிடைக்கின்றன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.இனி அழிவு காலம்ஒரு சிறிய கணக்கின் படி கானுயிர்களின் அழிவு 2010 வரை 52 சதவீதமாக உள்ளது. 2012 கணக்கின்படி 58 சதவீதமாக அழிவு உள்ளது. இந்த கணக்குப்படி பார்த்தால் 2026 வருடம் உலகின் அனைத்து கானுயிர்களும் முற்றிலுமாக அழிந்து விடும். தற்போதுள்ள அதிநவீன ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் மூலமும், விசைப்படகுகள் மூலமும் கடலிலுள்ள கடைசி மீனும் பிடிக்கப்பட்டு விடும். அனைத்து விலங்குகளும் ஏதோ ஒரு காரணத்தினால் கொல்லப்பட்டிருக்கும். முன்னேற்றம் என்று கூறி அனைத்து இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுவிடும்.தங்க முட்டையிடும் வாத்தை அறுத்ததை போல, இயற்கையை அழித்து வருகிறோம். நாம் எவ்வாறு இந்த பூமியில் சுத்தமான காற்றையும், தண்ணீரையும் அனுபவித்தோமோ, அதே போன்று எதிர்காலச் சந்ததியினருக்கு இயற்கையை விட்டு வைக்க வேண்டாமா.அந்தக்காலத்தில் அசோகரும், ராணி மங்கம்மாள் போன்றவர்களும் சாலையோரங்களில் நிழல்தரும் மரங்களை நட்டு வளர்த்தனர். மரத்தை நட்ட பின்னர் தான் சாலைகளை அமைத்தனர். ஆனால் இப்போது நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, கிராம சாலை, பசுமை சாலை போன்ற சாலைகள் அமைப்பதற்காகவே ஆயிரக்கணக்கான மரங்களை சாய்த்து விடுகிறார்கள். பதிலுக்கு மரக்கன்றுகளை நடுவதுமில்லை, பராமரிப்பதுமில்லை.வாழு, வாழ விடுபொதுவாக உணவு, தண்ணீர், இருக்கும் இடம், இது மூன்றும் தங்கு தடையின்றி கிடைக்கும் போது காட்டில் விலங்குகள் சவுகரியமாக வாழ்கின்றன. இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் மான்கள் தான் மிகவும் விரும்பப்படும், தேடப்படும் உணவு. ஒரு காட்டில் புலிகள் ஆரோக்கியமாக இருந்தால் அந்த காட்டில் எல்லாமே நலம் என்று பொருள். அதிகமான புலிகள் மேற்கு வங்காளத்தில் சுந்தர்பன் காடுகளில் உள்ளன.தமிழக காடுகளில் ஒரு சிங்கம் கூட கிடையாது. இந்தியாவில் மொத்த சிங்கங்களின் எண்ணிக்கையே 250. குஜராத் மாநிலத்தில் ''கிர்'' காடுகளில் அதிகமான சிங்கங்கள் உள்ளன. நம் கண் முன்னே அழிவின் விளிம்பில் சிட்டுக் குருவிகள், தேனீக்கள், சிங்கவால் குரங்குகள், வரையாடுகள் உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு காட்டு விலங்குகளும், வீட்டு விலங்குகளும் அழிந்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படும். உணவு உற்பத்தி பாதிக்கும். நாம் மட்டும் தனியாக உயிர்வாழ முடியாது. சிந்தித்து செயல்படுங்கள், பல்லுயிர்களை பெருக்குங்கள். வாழ்வோம்... அவற்றை வாழ விடுவோம்.

- இரா.ராஜசேகரன் வனதாசன், முன்னாள் உதவி வனப்பாதுகாவலர், திண்டுக்கல்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement