Advertisement

நடக்காத பயிற்சிக்கு கணக்கு கேட்கும் அதிகாரிகள்!

''குடிகாரங்க நலன்ல யாருக்குமே அக்கறை இல்லை பா...'' என, புலம்பியபடியே பெஞ்சுக்கு வந்தார், அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சேலம் மாவட்டத்துல, 213 மதுக்கடைகள் இருக்கு... சந்தியூர், சேலம் பகுதி குடோன்கள்ல இருந்து, கடைக்கு மது பாட்டில்களை அனுப்புறாங்க பா...''கூடுதல் விலை மது பாட்டில்கள் விற்பனை, கம்மியா தான் இருக்கும்... ஆனா, அந்த மது பாட்டில்களை அதிக அளவுல கடைகளுக்கு அனுப்புறாங்க பா...''இப்படி வந்த சரக்குகள், ஒவ்வொரு கடையிலயும், பல லட்சம் ரூபாய் மதிப்புல தேங்கி கிடக்குது... கடைக்கு வந்து, 90 நாட்கள்ல விற்பனை ஆகாத சரக்குகளை, மறுபடியும் குடோனுக்கே அனுப்பணும்... அதை, அவங்க, மது ஆலைகளுக்கு திருப்பி அனுப்பிடணும் பா...''ஆனா, குடோனுக்கு வர்ற சரக்குகளை, அங்க இருக்கிற அதிகாரிகள், மது ஆலை ஏஜன்ட்களிடம் கமிஷன் வாங்கிட்டு, வேற கடைகளுக்கு அனுப்பிடுறாங்க... ''சில கடைகள்ல, 2017ம் வருஷம் தயாரிச்ச சரக்குகள் கூட இருக்கு... இதை குடிக்கிறவங்க கதியை நினைச்சா தான் கவலையா இருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.

''இனிமே பாதாள சாக்கடை பக்கமே போக மாட்டோம்னு சொல்றா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''திருச்சி மாநகராட்சி, கோ - அபிஷேகபுரம் கோட்டத்துல, பாதாள சாக்கடையில, துப்புரவு பணியாளர்களை பணியில ஈடுபடுத்தினதா புகார்கள் எழுந்தது... இது சம்பந்தமா, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் இப்ராஹிம்னு ரெண்டு பேரை, 'சஸ்பெண்ட்' செஞ்சுட்டா ஓய்...''ஆனா, பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய, 'கம்ப்ரசர்' இயந்திரத்தை பயன்படுத்தறோம்... அடைப்பு இருக்கற இடத்தை கண்டுபிடிச்சு, 'ஆட்டோமேட்டிக்'கா சரி செய்யற அளவுக்கு, நம்மகிட்ட இயந்திரம் இல்லை... ''அதனால, கம்ப்ரசர் இயந்திரத்துல, குழாயோட இணைச்சு இருக்கற புட் வால்வை, அடைப்பு இருக்கற இடத்துல வைக்க, ஆட்களைத் தான் பயன்படுத்த வேண்டி இருக்கு... ''இது தெரியாம, கமிஷனர், இரண்டு பேரை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டார்... இனிமே, பாதாள சாக்கடை அடைப்புன்னு புகார் வந்தா, நாங்க சரி செய்யப் போறதில்லைன்னு, மாநகராட்சியின் மற்ற பொறியாளர்கள் புலம்பறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''நடக்காத பயிற்சிக்கு கணக்கு கேட்காவ வே...'' என, கடைசி மேட்டரை தொட்ட அண்ணாச்சியே தொடர்ந்தார்...''தமிழகத்துல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு சொந்தமான, 1480 மாணவ - மாணவியர் விடுதிகள் இருக்கு... விடுதி மாணவர்களின், ஆங்கில புலமையை அதிகரிக்க, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சி வழங்க, ஒரு மாணவருக்கு, 1,000 ரூபாய்க்கும் மேல் நிதி ஒதுக்குனாவ வே...''அதே மாதிரி, மெல்ல கற்கும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு கையேடுகள் குடுப்பாவ... இப்படி பல திட்டங்களுக்கு, கோடிக்கணக்குல நிதி ஒதுக்கியும், அது, முறையா மாணவர்களுக்கு போய் சேரலைன்னு புகார்கள் வந்துச்சு வே...''இதனால, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சி சம்பந்தமான அறிக்கையை அனுப்புங்கன்னு, விடுதி காப்பாளர்களிடம், மாவட்ட அதிகாரிகள் கேட்டிருக்காவ... ஆனா, 'நடக்காத பயிற்சிக்கு எப்படி அறிக்கை குடுக்கிறது'ன்னு தெரியாம, காப்பாளர்கள் கலக்கத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement