Advertisement

லஞ்ச பேய் விலக துவங்க...!

Share

தி.மங்களம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'பணமின்றி பிணத்தை கூட, எரிக்க முடியாது' என்ற தலைப்பில், இதே பகுதியில், வாசகர் ஒருவர், கடிதம் எழுதி இருந்தார்; அது உண்மை தான்!
ஆனாலும், நிலைமை அதை விட, மோசமாக இருக்கிறது. தொட்டில் துவங்கி, சுடுகாடு வரை, மனிதர்களிடையே, இன்று இரண்டற கலந்து கிடப்பது, லஞ்சமும், ஊழலுமே!பிரசவத்துக்காக, மருத்துவமனைக்குள் நுழையவே, லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள், நர்சுகளை, 'கவனிக்க' வேண்டியுள்ளது. பிறப்பு சான்றிதழ் பெற, பள்ளியில் குழந்தைகளை சேர்க்க, லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. கல்லுாரியில் சேர நன்கொடை என்ற பெயரில், லஞ்சம் கொடுக்கப்படுகிறது.கடினமாக உழைத்து, அதிக மதிப்பெண் பெற்று, அரசு வேலை தேடும் போதும், டி.என்.பி.எஸ்.சி.. தேர்வாணயத்திற்கும், லஞ்சம் கொடுத்தால் தான் வேலைகிடைக்கும்.வேலையில் அமர்ந்து, சம்பாதித்து வீடு கட்டினால், உரிய சான்றிதழ் வாங்க, வாங்கிய நிலத்திற்கு பட்டா வாங்க, லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. எல்லாம் முடிந்து, இறந்த பிறகும், பிணத்தைஎரியூட்ட லஞ்சம் கொடுத்தால் தான், சுடுகாட்டில் வேலை நடக்கிறது.பிறப்பில் துவங்கி, இறப்பு வரை, மனிதர்களை ஒன்றரக் கலந்து, உயிருக்கு வாதை ஏற்படுத்துகிறது. இதை ஒழிக்கவே முடியாதா என்ற கேள்விதான், ஒவ்வொருவர் மனதிலும் நிழலாடுகிறது. ஏன் முடியாது; நாம் அனைவரும், மனது வைத்தால் முடியும்.நாம் பெற வேண்டிய அனைத்து சான்றிதழ்களுக்கும், காலக்கெடு, அரசு வைத்துள்ளது. அதை முறையாக உணர்ந்து, அவசரமின்றி செயல்பட்டாலே, பல நேரங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம்.ஆனால், நாமோ, எதுவும் அன்றைக்கே வேண்டுமென்று சொல்லி, அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் லஞ்சம் கொடுத்து, அவர்களையும் ஊழலுக்கு துணை போகச் செய்கிறோம். நம்மிடம் நியாயம் இருப்பதில்லை. லஞ்சத்தின் வாயிலாக, பலர், அதிகாரிகளையும் தவறு செய்ய வைக்கின்றனர்.ஒவ்வொருவரும், 'நியாயத்தின் வழி நிற்பேன்' என, உறுதியெடுக்க வேண்டும். லஞ்சம் கொடுப்பதில்லையென்ற உறுதிப்பாட்டை எடுத்து, அதிலிருந்து மாறாமல் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், மெல்ல மெல்ல, லஞ்ச பேய், தமிழகத்திலிருந்து விலக ஆரம்பிக்கும்.


எந்த அதிரடிநடவடிக்கைகளும்பயன் தராது!

என்.மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், ஊழல் பெருச்சாளிகளை சுதந்திரமாக நடமாட அனுமதி அளித்து, தேர்வர்களின், 'தில்லுமுல்லு'களை மட்டும் தடுத்து நிறுத்துவதால், எந்த பயனும் இல்லை.ஜெயகுமார் என்ற ஊழல் பெருச்சாளியை பிடித்து விட்டால், டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகத்தின் மீது, மக்களுக்குநம்பிக்கை வந்து விடுமா? எட்டு ஆண்டுகளாக, தில்லுமுல்லுகளை செய்து, அரசு ஊழியர்களாகி இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை, எப்படி அரசு அடையாளம் கண்டு, பதவியிலிருந்து விரட்டப் போகிறதோ...இந்த லட்சணத்தில், கேள்வித்தாள்கள் திருட்டுத்தனமாக, பயிற்சி மையங்களுக்கு கிடைப்பதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர்.லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் போது, 'உண்மை' விசுவாசியான ஊழியர்கள் செய்யும், தில்லுமுல்லுகள் எல்லாம் எப்படி வெளிச்சத்திற்கு வரும்?இத்தருணத்தில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும், 'தில்லாலங்கடி' வேலைகளை தடுத்து நிறுத்த, சில அதிரடிநடவடிக்கைகள்அறிவிக்கப்பட்டுள்ளன.'குரூப் - 4, குரூப் - 2 ஏ' பதவிகளுக்கு, இனி, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என, இரண்டு தேர்வுகள் எழுத வேண்டுமாம்; கேட்கப்பட்ட கேள்விகள், அத்தனைக்கும் கட்டாயம் பதில் அளிக்க வேண்டுமாம்; பதில் தெரியாவிட்டால், 'இ' என்ற குறியீட்டில், பேனாவால் குறியீடு செய்ய வேண்டும்.எந்த கேள்வியாவது, பதில் அளிக்காமல் விடுபட்டிருந்தால், தேர்வர், தன் தகுதியை இழப்பார். தேர்வர்கள் இனிமேல் கையெழுத்து போட வேண்டாம்; படிக்காத பாமரன் மாதிரி, கைரேகை வைத்தால் போதும்.விடைத்தாள்களை சுமந்து செல்லும் வாகனங்கள் பயணிக்கும் வழியெல்லாம், 'ஜி.பி.ஆர்.எஸ்.,' வாயிலாக தீவிரமாக கண்காணிக்கப்படுமாம்; 'காமெடி' நடிகர் வடிவேலு பேசும் வசனம் போல், 'ஓப்பனிங்எல்லாம், நல்லாத்தான் இருக்கு! 'ஆனால், 'பினிசிங்' தான் வேறே மாதிரி ஆயிடுது போங்க' என, நடித்திருப்பார். அதை போல், இப்படியெல்லாம் கெடுபிடிகள் காட்டினாலும், தேர்வில் ஊழல் நடப்பதை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியுமா?ஜெயக்குமார் மாதிரி, இன்னும் எத்தனையோ ஊழல் திமிங்கிலங்கள் வெளியே இருக்கின்றனர். எலும்பு துண்டுகளுக்கு ஆசைப்படும் ஜென்மங்கள், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருக்கும் வரை, எந்தஅதிரடி நடவடிக்கைகளும்பயன் தராது.

கல்வித் துறைஏற்றம் காணமுடியாது!

சோ.ஆதங்கன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் முதல்வர்காமராஜர் காலத்தில்கட்டப்பட்ட கட்டடங்களிலேயே, பல பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும், இன்றும் பல ஆயிரம் பள்ளிகளில் முழுமையான சுற்றுச்சுவர் வசதி கிடையாது.பள்ளி வளாகத்தினுள் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. போதுமான உள்கட்டமைப்பு, பாதுகாப்பு இல்லா பள்ளிகளுக்கு, மேலும் உபகரணங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகள், தரம் இல்லாத கட்டடங்களாக கட்டப்பட்டு வருகின்றன.மாணவர்களுக்கு, இலவச பொருட்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில், யாருக்கு எவ்வளவு கமிஷன் தொகை கிடைக்கும் என, அரசியல்வாதிகள் பலரும் கணக்கு போடுகின்றனர்.இத்தருணத்தில், தமிழக பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறைக்கு, ௩௪ஆயிரத்து, ௧௮௧ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்தத் தொகையில் மாணவர்களுக்கு, ௧,௦௧௮ கோடி ரூபாய்க்கு, இலவசப் பொருட்கள் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. வெறும் இலவசத்துக்காக மட்டும், அரசுப் பள்ளியில் யாரும் சேர்வதில்லை.ஒன்றிய அளவில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, மாதிரிப் பள்ளிகளை அரசு துவக்க வேண்டும்.இரவு காவலர்கள், சுற்றுச்சுவர், தரமான கட்டுமானம், தேவையான தளவாடங்கள், குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், மேம்பட்ட கற்பித்தல் முறைக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.மாணவர்களுக்கு இலவச பொருட்களை கொடுப்பதன் வாயிலாக மட்டுமே, மாநில கல்வித்துறைஏற்றம் காண முடியாது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இதே நாளிதழில் முப்பது வருஷத்துக்கு முன் இறந்தவரின் சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட விவரம் உள்ளது காலக்கெடு முடிய என்ன நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? ஆனாலும் லஞ்சமில்லாமல் இந்த வேலையைச் செய்து கொடுக்க மாட்டார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement