Advertisement

இலக்கியம் வாழ்வின் கண்ணாடி

பலஅவலங்களும், வேதனைகளும், சோதனைகளும் கொண்ட மனித வாழ்க் கையை எளிமையாக்குவதும், இனிமையாக்குவது இலக்கியம். இலக்கியம் மனித வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணாடி. தொன்மையான நமது நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இலக்கியங்களும், இலக்கியவாதிகளும் தோன்றி மனித வாழ்வை செம்மைப்படுத்தி உள்ளனர்.

ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதையும், இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அடிப்படை தளம் அமைத்து கொடுத்துள்ளன. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் இந்த இதிகாசங்களில் தீர்வு உள்ளது. கடவுள்கள் மனிதர்களாக பூமியில் அவதரித்து மனிதர்களுக்கு உண்டான அனைத்து பிரச்னைகளையும் சந்தித்து இறுதியில் அப்பிரச்னைகளுக்கு தெளிவான தீர்வையும் கொடுத்துள்ளார்கள். ராமாயண கதாநாயகன் ராமர் அரசராக பிறந்திருந்தாலும் அவர் வாழ்வில் சந்தித்த பிரச்னைகள், போராட்டங்கள் அனைத்துமே ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவானவைதான்.

பாடம் புகட்டுகின்றனபொறுமை, பணிவு, அமைதி போன்ற நற்செயல்களின் பலன்களை ராமாயணம் மனிதனுக்கு புகட்டுகிறது. 'களவும் கற்று மற', 'ரவுத்திரம் பழகு' போன்ற கருத்துக்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மகாபாரதம், மனித வாழ்க்கையில் சூதும், சூழ்ச்சியும் எவ்வாறு அழிவை தேடி தருகின்றன என்ற கருத்தை வலியுறுத்துகிறது.அழகு, அறிவு, திறமை, விடாமுயற்சி போன்ற குணங்களின் மகத்துவத்தை அர்ச்சுனன் கதாபாத்திரம் விளக்குகிறது. உலகின் முதல் பெண்ணியவாதியாக திரவுபதி விளங்குகிறாள். தன் உரிமைக்காக போராடும் விஷயத்திலும், அவமானத்திற்கு பழி தீர்க்கும் கோபத்திலும், சூழ் நிலையை உணர்ந்து குமுறும் நேரத்திலும் பெண்ணுக்குரிய அனைத்து பிரச்னைகளையும் தன்னுடைய திறமையான வாதத்தினால் சமூகத்திற்கு புரிய வைக்கிறாள். நட்புக்கும், கொடைத்தன்மைக்கும், அவமானத்திற்கும் சின்னமாக விளங்குகிறான் கர்ணன். எவ்வளவு திறமை இருந்தாலும் அந்த திறமை உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படாவிட்டால், மனிதன் எவ்வளவு வேதனைகளுக்கு உள்ளாவான் என்பதை கர்ணன் கதாபாத்திரம் நமக்கு விளக்குகிறது.

நல்லவனாக இருந்தால்நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது கிருஷ்ணபரமாத்மாவின் கதாபாத்திரம்.தமிழர்களின் ஐம்பெரும் காப்பியங்களும், திருக்குறளும், நாலடியாரும், அவ்வையாரின் ஆத்திசூடியும் குழந்தை முதல் பெரியவர் வரை உள்ள அனைவருக்கும் அனைத்து கால கட்டத்திலும் தேவைப்படக்கூடிய அறிவுரைகளை அள்ளி வழங்குகிறது. இன்று இன்டர்நெட், வாட்ஸ்ஆப், டுவிட்டர் என்று தகவல் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டு கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் மாறி உள்ள சூழ்நிலையிலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறளும் நமக்கு இன்றியமையாத இலக்கியமாக உள்ளது.

இலக்கிய பயிற்சிமேலை நாடுகளில் ஒருவர் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், இலக்கியமும், தத்துவமும் அவர்களுக்கு கட்டாய பாடமாக உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலக்கியத்தையும், தத்துவத்தையும் கட்டாயமாக பயில வேண்டும்.ஒருவர் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ, பொறியியல் வல்லுநராகவோ இருந்தாலும் அடிப்படையில் மனிதன் தான். மனிதனுக்குரிய கடமைகள் பல உள்ளன. ஒரு மனிதன் அடிப்படையில் தந்தைக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், உடன் பிறந்தவர்களுக்கு சகோதரனாகவும், உற்றார் உறவினருக்கு சொந்தமாகவும், நண்பனுக்கு உண்மையாகவும் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாகவும் கடமையாற்ற வேண்டி உள்ளது. அப்படி வெற்றிகரமாக சமுதாயத்தில் வாழ அவனுக்கு இலக்கியமும், தத்துவமும் பேருதவியாக இருக்கின்றன.

பணத்திற்காக பதட்டம்தத்துவத்தை உள்ளடக்கியது இலக்கியம். இலக்கியத்தில் பயிற்சி பெற்ற மனிதன் வாழ்வில் பிரச்னைகளையும் எளிதாக கையாண்டு மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்கிறான். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இலக்கியத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு அறுந்து போய் உள்ளது. பணம் ஒன்றே குறிக்கோளாக வாழும் மனிதன் அதை தேடுவதிலேயே வாழ்நாளை செலவழிக்கிறான். அதனால் உண்டாகும் பதட்டம், குழப்பம், அவனை நிம்மதியற்ற நிலைக்கு தள்ளுகிறது.பிரச்னைகள் வரும் பொழுது அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருந்தாலும் போதிய இலக்கிய அறிவு இல்லாததால் பிரச்னையை சந்திக்க வேண்டிய மனப்பக்குவம் இல்லாமல் நிலைகுலைந்து விடுகிறான்.வாழ்க்கையில் போதிய அனுபவம் பெற நமது இலக்கியம் காட்டும் நெறிகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக காந்தி என்ற சாதாரண சிறுவன் “அரிச்சந்திரா” என்ற நாடகத்தை பார்த்ததன் மூலமாக பிற்காலத்தில் “மகாத்மாவாக” மாறினார். ஒரு மனிதன் வாழ்நாளில் பொய் சொல்லாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிய அரிச்சந்திரா நாடகம், அந்த கேள்விக்கு விடை தேட ஆரம்பித்த சிறுவன் தான் பிற்காலத்தில் உலகம் போற்றும் மகாத்மாவாக மாறினார்.

ஆறுதல் கிடைக்கும்பிரச்னை வரும் பொழுது இலக்கிய கதாபாத்திரங்கள் மூலமாக நமக்கு ஆறுதல் கிடைக்கிறது. அரசகுமாரராக பிறந்த ஸ்ரீராமர் படாத கஷ்டமா நாம் படுகிறோம் என்றும், சீதா தேவியின் துயரங்களுக்கு மேலானதா நம் துயரம் என்றும், செல்வச்சீமானின் ஒரே மகள் க ண்ணகி பட்ட துன்பத்திற்கும் மேலானதா நம் துன்பம் என்றும், வாழ்க்கையின் பல துயரங்களை அனுபவிக்கும் பொழுது இலக்கியம் மூலமாக ஆறுதல் தேடுகின்றோம்.“இன்பத்தை கண்டு மகிழாமாலும், துன்பத்தை கண்டு துவழாமலும் இருக்கக்கூடிய நடுநிலையான மனநிலை” நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்ற உண்மையை பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் எடுத்துரைக்கிறார்.ஆங்கில இலக்கிய பிதாமகன் ஷேக்ஸ்பியர் கூட தன்னுடைய 36 நாடக காப்பியங்களில் மனித வாழ்வின் பல்வேறு பரிணாமங்களை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். புதல்விகளின் மேல் உள்ள அளவு கடந்த தந்தையின் பாசத்தை 'கிங்லியர்' நாடகத்திலும், காதலின் மகத்துவத்தை 'ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா' நாடகத்திலும், பதவியின் மோகத்தை 'மேக்பத்' நாடகத்திலும், தேசப்பற்று மற்றும் நட்பின் மகத்துவத்தை 'ஜீலியஸ் சீசர்' நாடகத்திலும், அதிகப்படிப்பு மற்றும் தாகத்தினால் உண்டாகும் பல மோசமான விளைவுகளை 'ஹேம்லட்'நாடகத்திலும், சந்தேகத்தினால் உண்டாகும் கொடிய விளைவுகளை'வின்டர்ஸ்டேல்' நாடகத்திலும், மன்னிப்பின் மகத்துவத்தை 'தி டெம்பஸ்ட்' நாடகத்திலும் விளக்கியுள்ளார். மின்னுவதெல்லாம் பொன்னல்ல, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, கூடா நட்பு கேடாய் முடியும் போன்ற வாழ்விற்கான கருத்துக்களை அவரது நாடகங்கள் பிரதி பலிக்கின்றன.தொடர்ந்து வாசிப்பதன் மூலம் இலக்கியங்கள் நமக்கு மனித வாழ்வின் பல்வேறு இருண்ட பிரதேசங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இலக்கியங்களை படிப்போம்; அது காட்டும் வழியில் நடப்போம்!
-மு. கண்ணன், முதல்வர்
சரஸ்வதி நாராயணன் கல்லூரி
மதுரை
99427 12261

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

    'களவும் கற்று மற' இது தவறான பழமொழி..'களவும் கத்தும் மற' என்பதே சரி..கத்து என்றால் பொய் என்பது பொருள்..திருட்டு பொய் இரண்டையும் மற என்பதே சரி..மெத்த அறிந்தவர்களும் தமிழில் குறைவது கண்கூடு

  • ஆல்வின், பெங்களூர் - ,

    இலக்கிய நயத்தை எடுத்து இயம்பிய இனிய கட்டுரைக்கு நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement