Advertisement

நன்றி மலர்களைப் பரப்புவோம்

உலகம் தோன்றிய நாள் முதல் அனைவரும் பயன்படுத்தும் உன்னத வார்த்தை நன்றி என்பது. உதவி செய்தவரின் செயலுக்கு நன்றி தெரிவிக்கும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது, அவரை மேலும் உதவி செய்யத் துாண்டுகிறது.

இந்த மூன்றெழுத்து மந்திரச் சொல் சேவைகளின் வளர்ச்சி. ஒற்றுமையின் உன்னதம், மானுடத்தின் அடையாளம்.நன்றி என்பது தோன்றி மறையும் நீர்க்குமிழி அல்ல. காலங்காலமாக பிறப்பு முதல் இறப்பு வரை ஏதாவதொரு சூழலில், அவரவர்கள் செய்த உதவிக்கு ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் உன்னதச் சொல் இது.கடைசி நேரத்தில் அவர் செய்த உதவி இருக்கு பாருங்க, அதற்காக வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக்கேன்' என நெகிழ்ச்சியோடு சொல்பவர்களும் உண்டு.நன்றி என்பது வெறும் வார்த்தையல்ல, அது வாழ்க்கை. அது வாயிலிருந்து வரக்கூடாது. இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவேண்டும்.

கண்ணதாசன் தரும் விளக்கம்நிறைய பேர் தனக்கு உதவி செய்தவர்களைப் பார்த்து, என்னை வாழ வைத்த தெய்வம் என்பார்கள். அதைத்தான் கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலில்,“ஆசை களவு கோபம் கொள்பவன்பேசத் தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன்மனித வடிவில் தெய்வம்” என்றார்.நன்றியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வள்ளுவர் கூட செய்ந்நன்றியறிதல் என ஒரு தனி அதிகாரத்தையே படைத்துள்ளார். செய்நன்றியை மறந்தவருக்கு வாழ்க்கையில் உயர்வே கிடையாது என்பதை,

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்கிறார்.

நன்றி மறப்பது நன்றன்று'நான் அவருக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்திருக்கிறேன். ஆனால் பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை நன்றின்னு சொன்னதில்லை' என சிலர் ஆதங்கப்படுவார்கள். இன்னும் சிலர் 'நான் செய்த உதவிக்கு நன்றின்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், இன்னும் எவ்வளவோ உதவிகளைச் செய்திருப்பேன்' என்பார்கள்.
கேட்கிற போதெல்லாம் பணத்தை துாக்கிக் கொடுத்தேன், கொஞ்சம் கூட நன்றியில்லை என சொல்பவர்களும் உண்டு. உதவிகள் கூடுவதும், குறைவதும் நன்றியைப் பொறுத்தது தான் அமைகிறது.ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு நாம் ஒவ்வொருவரும், நம் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் சில விஷயங்களுக்காக, காலமெல்லாம் நன்றி சொல்லக்
கடமைப்பட்டிருக்கிறோம். அவற்றுள் முக்கியமாக,

எப்போதும் துணையிருக்கும் நண்பர்களுக்குநட்பு என்பது மனதில் உள்ள துயரங்களையும், இறுக்கங்களையும் இறக்கி வைக்கும் மறுவாழ்வு மையம். நட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். துன்பத்தைப் பாதியாக்கும். நண்பர்கள் மாறலாம். ஆனால் நட்பு என்றும் மாறாதது. உலகையே படைத்துக் காக்கின்ற கடவுளுக்கு கூட நட்பு என்னும் உறவு தேவைப்படுகிறது. நாட்டை ஆளும் மன்னனுக்கும் இந்த நட்பு அவசியமாகிறது. நல்ல நண்பர்கள் கிடைத்தால் அவனிடம் இல்லாதது ஒன்றும் இல்லை. நண்பர்கள் சரியாக அமையவில்லையெனில், அவனிடம் இருப்பது ஒன்றுமில்லை.

எப்போதும் வழிகாட்டும் எழுத்துக்களுக்குநம் மனதில் உள்ள அக இருளை அகற்றி வெளிச்சத்தை தருவது எழுத்துக்களாகும். மானுட சமூகத்தை, கால ஓட்டத்திற்கேற்ப ஓர் அடி உயர்த்திக் கொண்டே இருப்பது எழுத்துக்கள். அணுகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும். எழுத்துக்கள் வாசிக்கும் போதெல்லாம் வெடிக்கும். சில எழுத்துக்கள் காலத்தால் அழிக்க முடியாதவை.
எழுத்துக்காட்டாக
1. உலகினை வெல்ல இரு கைகள் போதும். ஒன்று முகத்தில் புன்னகை, இரண்டு தன்னம்பிக்கை.
2. மரணத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நாம் இருக்கும் வரை அது வரப் போவதில்லை. அது வந்த பிறகு நாம் இருக்கப் போவதில்லை.
3. கழுத்தில், காதில், விரலில் நகைகள் போட்டுக் கொள்ளுங்கள். அது பெரிதல்ல. ஆனால் இதயத்தில் அன்பை போட்டுக் கொள்ளுங்கள், வாயில் சிரிப்பை போட்டுக் கொள்ளுங்கள்.
4. வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்.
இது போன்ற மேலும் பல வடிவங்களில் கதைகளாக, கட்டுரைகளாக எழுத்துக்கள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. இவற்றை படிக்கும் போது நம்மை நாமே செதுக்கிக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது.அந்த உயர்வான எழுத்துக்களைத் தந்து நம் எண்ணங்களை மேம்படையச் செய்யும் எழுத்தாளர்களுக்கு நன்றி சொல்லுவோம்.

எப்போதும் சிரிக்கும் பூக்களுக்குமலர்கள் இல்லாத தோட்டமும், மனையாள் இல்லாத வீடும் பாழ் என்பார்கள். பூமியில் தோன்றிய எல்லா மலர்களும் ஏதாவதொரு வகையில் பயன்படுகின்றன. மனிதன் மணமாகும் போதும், பிணமாகும் போதும் கூட வருவது மலர்கள் தான். காலையில் தோன்றி, மாலையில் மறைந்து ஒரு நாள் தானே வாழப் போகிறோம் என மலர் சலித்ததில்லை. கண்ணுக்கு விருந்தைத் தந்து, மூக்குக்கு வாசனை கொடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும், மலர்களுக்கு காலமெல்லாம் நன்றி சொல்லுவோம்.

எப்போதும் கைவிடாத நம்பிக்கைக்குஇப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் வலக்கை, இடக்கை இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் வாழவே முடியாது. கவிஞர் மேத்தா ஒரு கவிதையிலே, “நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால், உதிர்ந்த மலர்களும் ஒட்டிக் கொள்ளும், கழுத்தில் மாலையாக வந்து கட்டிக் கொள்ளும்” என்பார். நம்பிக்கை என்பது உள்ளத்தில் இருந்தால், எதை இழந்தாலும் பெற முடியும். எனவே, எல்லா இக்கட்டான காலத்திலும், நமக்கு கை கொடுத்து, நம் கூடவே வருகின்ற நம்பிக்கைக்கு நன்றி சொல்லுவோம்.

மரங்கள் நடுகின்ற கரங்களுக்குஇயற்கை நமக்கு வழங்கிய செல்வங்களில் மிகவும் உயர்வான செல்வம் மரங்கள். மரங்கள் மனிதனுக்கு வரங்கள். நாம் சுவாசிக்க தூய்மையான காற்றைத் தருவது மரங்கள் மட்டுமே. மறைந்த ஜனாதிபதி கலாம் கூட, ஒரு கவிதையில்,
“கிளி வளர்த்தேன், பறந்து விட்டது.
அணில் வளர்த்தேன், ஓடி விட்டது.
மரம் வளர்த்தேன். இரண்டும்
திரும்பி வந்து விட்டது” என்றார்.

மனிதனுடைய பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வொரு பயன்பாட்டிலும் கூடவே வரும் மரங்களை நட்டு வளர்க்கின்ற கரங்களுக்கு நன்றி சொல்லுவோம்!

ஆசிரியர்களுக்குகுழந்தையின் எதிர்காலம், ஆரம்பக் காலத்தில் விதைக்கப்படும் வித்தைப் பொறுத்தது. அந்த சத்தான வித்தை விதைப்பவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். குழந்தைகளுக்கு
கண்களைக் கொடுக்கின்றனர் பெற்றோர். அந்தக் கண்களுக்கு ஒளியைக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். அம்மா, அப்பா என பேசத்தெரிந்த குழந்தைகளை எழுத வைத்து பார்ப்பவர்கள் ஆசிரியர்கள். 'ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையாது' என்ற பழமொழிக்கேற்ப, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கற்றுத் தரும் ஆரம்பக்கல்வி தான். பின்னாளில் ஒவ்வொருவரையும் சாதனையாளராக உருவாக்குகிறதென்றால், அதற்கு அடித்தளமிட்ட அவர்களுக்கு கோடான கோடி நன்றி சொல்லுவோம்.

கடவுளுக்குபூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு, புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன். இது கண்ணதாசனின் வைர வரிகள்.
தெய்வ நம்பிக்கையை மனதில் கொண்டவர்கள் எப்போதும் வெற்றி பெறுகிறார்கள். நாம் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களுக்கும் துணை நிற்கின்ற கடவுளுக்கு
எந்நாளும் நன்றி சொல்லுவோம்.வாழ்வதற்கும் பொருள் வேண்டும். வாழ்வதிலும் பொருள் வேண்டும். நம்முடைய செயல்பாடுகள் பிறரை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் இருக்க வேண்டும். எல்லா செயல்களிலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் போது நன்றி மலர்களைத் துாவ வேண்டும். அந்த மலர்கள் உறவை நெருக்கமாக்கும். நட்பை விரிவாக்கும்.
-ச.திருநாவுக்கரசு
பேச்சாளர்
மதுரை
98659 96189

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement