Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இந்த மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை ரத்தாகாது. இதற்குப் பிறகாவது, போராட்டங்களில் ஈடுபடுவோர் மனம் திருந்துவரா...' என, எதிர்பார்க்கத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேச்சு: குடியுரிமை என்பது மதத்தின் அடிப்படையிலானது அல்ல; மண்ணின் அடிப்படையிலானது. இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் இந்த மக்கள். 70 ஆண்டுகளாக இருக்கும் அடிப்படை கோட்பாட்டை தவிடு பொடியாக்கியுள்ளது, மத்திய அரசு.
'இப்படி எத்தனையோ பேர், எப்படி எல்லாமோ எடுத்து சொன்ன பிறகும், முஸ்லிம்களில் கொஞ்ச பேர் போராடிக் கொண்டிருக்கின்றனரே; அவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டும்...' என, வலியுறுத்தச் செய்யும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி:குடியுரிமை சட்டத்தில், பா.ம.க.,வின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த சட்டம் குடியுரிமை கொடுப்பதற்கான சட்டம், பறிப்பதற்கான சட்டம் இல்லை. ஸ்டாலின், ஏதாவது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஓட்டுக்காகவும் துாண்டி விட்டு வருகிறார். முஸ்லிம்களின் போராட்டங்கள் தேவையற்றது.
'சட்டசபையை முற்றுகையிடுவதாக அறிவிப்பது தான், தற்போதைய தமிழக கட்சிகள், அமைப்புகளின் போராட்ட வியூகமாக இருக்குமோ...' என, எண்ணத் தோன்றும் வகையில், தமிழக வி.ஹெச்.பி., நிறுவன தலைவர் வேதாந்தம் பேட்டி:கடந்த, 2016ல், முதல்வராக இருந்த ஜெ., கிராம கோயில் பூசாரிகளுக்கு, மாதம், 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க உறுதியளித்தார்; அது, இது நாள் வரை அமல்படுத்தவில்லை. பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரி, ஏப்ரலில் சட்டசபையை முற்றுகையிடுவோம்.
'ரஜினி செலுத்திய வரியில், 66 லட்சம் விலக்கு அளித்துள்ளது வருமான வரித்துறை. ஆனால், சசிகலா, வருமானத்திற்கு அதிகமாக, பல கோடி சொத்து சேர்த்த வழக்கில், உள்ளே இருக்கிறார். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது; சத்தமாக பேசினால், பொய் உண்மையாகி விடாது...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:வருமான வரித்துறை, நடிகர் ரஜினிகாந்திற்கு, 66 லட்ச ரூபாய் விலக்கு அளித்துள்ளது. ஆனால், அதே வழக்கில், ஜெ., தோழி சசிகலாவுக்கு, சிறை தண்டனை வழங்கியுள்ளது. ரஜினிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு வேறு நீதியா?
'குடியுரிமை சட்டம் குறித்து, வீடு வீடாக சென்று விளக்கினீர்களே; அதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையா...' என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கேசவ விநாயகன் அறிக்கை:பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம்களை ஆதரிக்கும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டித்தும், அக்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 28ல், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் நோக்கி பேரணி நடத்தப்படும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement