Advertisement

பஞ்., செயலர்களை மிரட்டும் தி.மு.க., சேர்மன்!

''அதிருப்தியில இருக்கிறவங்களை அழைச்சிட்டு வாங்கன்னு பச்சைக் கொடி காட்டிட்டாவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''யாருக்கு, யாருங்க இந்த உத்தரவை போட்டது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தி.மு.க.,வுல, சில மாவட்டச் செயலர்களின் பதவிகளை, அதிரடியா பறிச்சிட்டு இருக்காங்களே... பதவி இழந்தவங்களும், அந்தப் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பலரும், கட்சி தலைமை மேல, கடும் அதிருப்தியில இருக்காவ வே...''இது, உளவுத்துறை மூலமா, அரசின் கவனத்துக்கு போயிருக்கு... அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல் வரப் போறதால, தி.மு.க.,வை பலவீனப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்க, ஆளுங்கட்சி முடிவு பண்ணிட்டு வே...''இதனால, 'தி.மு.க., தலைமை மேல அதிருப்தியில இருக்கிறவங்களை, அ.தி.மு.க., பக்கம் தள்ளிட்டு வாங்க'ன்னு, அந்தந்த மாவட்டச் செயலர்களுக்கு, இரட்டை தலைமை உத்தரவு போட்டிருக்கு... அவங்களும் அதுக்கான வேலைகள்ல இறங்கிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மின் வாரிய அதிகாரிகளின் மிரட்டல் கதையை கேளுங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.''தமிழக மின் வாரியம், மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை, பிரிவு அலுவலகங்கள், செயற்பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் அலுவலகங்கள் மூலமா செய்யுது...''இதுல வேலை பார்க்கிற ஊழியர்களின் வருகை பதிவேடு, உபகரணங்கள் இருப்புகளை, சென்னை, தலைமை அலுவலகத்துல இருக்கிற நிர்வாக அதிகாரிகள், நேர்ல போய் ஆய்வு செய்வாங்க பா...''அப்படி போற சிலர், தங்களுக்கு, மது விருந்துடன் நட்சத்திர ஓட்டல்ல, 'ஏசி' அறை போட்டு தரும்படி, சம்பந்தப்பட்ட அலுவலக பொறியாளர்களை கேட்கிறாங்க... அதே மாதிரி, ஆய்வுல ஏதாவது குத்தம், குறை கண்டுபிடிச்சா, அதுல சம்பந்தப்பட்டவங்களை மிரட்டி பணம், பரிசு பொருட்கள்னு அள்ளிட்டு போயிடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''இந்த மிரட்டல் வசூலையும் கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''திருவண்ணாமலை மாவட்டத்துல இருக்கிற ஒரு ஒன்றியத்துல, தி.மு.க.,வைச் சேர்ந்தவர், சேர்மனா ஜெயிச்சிருக்கார்... இந்த ஒன்றியத்துல, இவரும், இவரது மனைவியும் தான், மாறி மாறி, நாலு முறை தலைவரா இருக்கா ஓய்...''ஒன்றியத்துல இருக்கற, 37 ஊராட்சி செயலர்களையும் கூப்பிட்ட சேர்மன், 'நான் தேர்தல்ல நிறைய செலவு பண்ணி தான் ஜெயிச்சிருக்கேன்... அதனால நீங்க, தலைக்கு, 1 லட்சம் ரூபாய் தந்துடணும்... ''மூணு வருஷங்களுக்கு மேலா, ஊராட்சிகளுக்கு தலைவர் இல்லாம, எல்லா கமிஷனையும் நீங்க தானே சாப்பிட்டேள்... அந்தப் பணத்துல எனக்கு 1 லட்சம் குடுங்கோ... இல்லேன்னா, கணக்கு, வழக்குகளை ஆய்வு செஞ்சு, உங்க வேலைக்கு உலை வச்சுடுவேன்'னு மிரட்டி அனுப்பியிருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.ஒலித்த போனை எடுத்த அண்ணாச்சி, ''சுந்தரபாண்டியன்... அங்கனயே வெயிட் பண்ணும்... இதோ கிளம்பிட்டேமுல்லா...'' என்றபடியே எழ, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    என்ன கருத்து சொல்லி என்னாகப்போகுது. அதிகாரவர்க்கமும் ஆளும்வர்க்கமும் அடிக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்த மக்களிடம் சக்தி இல்லையே. தேர்தல் நேரத்தில் ஓட்டுகள் பணம்கொடுத்து வாங்கப்படுவதால் சிந்தித்து வாக்களிக்கும் வாக்குகளும் வீணாகி அக்கிரம ஆட்சியே அமைகிறது.. இந்த லட்சணத்தில் மற்றக்கட்சி அபிமானிகள் நடிகன் ரஜினியுடன் சேர்ந்து நல்லாட்சி தர போகிறார்களாம்..

  • A R J U N - sennai ,இந்தியா

    'ஏசி' அறை போட்டு தரும்படி, சம்பந்தப்பட்ட அலுவலக பொறியாளர்களை கேட்கிறாங்க....AUDIT என்கிற பெயரில் நடக்கும் கொள்ளை இன்று நேற்று அல்ல,70 களிலிருந்து நடக்கிறது.இன்னும் சொல்லப்போனால் 'தற்போது' ஆப்பசை பட video கல் addition ளாக கேட்கிறார்கள்,முடித்து போகும்போது GIFT packet பல ரூபாய் கணக்கில்..தங்கும் இடம் வாழ்நாளில் பார்த்திராத ..இந்த AUDIT PARTY AG AUDIT என்கிற FORMALITY தெண்டம்,காசுபார்க்க போடப்பட்ட அழ)வழிவகுக்கப்பட்ட ஒரு தில்லு முள்ளு.பெரிய இடத்து கூட்டும் உண்டு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement