Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இந்த அறிக்கை வெளியான நாளில், நீங்கள் காலை முதல், மாலை வரை, துாத்துக்குடி மாவட்டத்தில், 'பிசியாக' இருந்தீர்கள். 'அட்மின்'களிடம் சொல்லி, அறிக்கை தயாரிக்கச் சொல்லி விட்டீர்களோ; அதனால் தான், தமிழக பிரச்னை தவிர்த்து, டில்லி விவகாரத்திற்கு சென்று விட்டனரோ...' என, கிண்டல் செய்யும் விதமாக, த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: நிர்பயா வழக்கில் துாக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நால்வருக்கும், மார்ச் 3ல் கட்டாயம் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி செய்தால் தான், கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோர், நமக்கும் இதுபோல தண்டனை கிடைக்கும் என நினைத்து திருந்துவர்.
'இப்படி சொல்லிக் கொள்ள வசதியாகத் தான், தமிழக அரசியல் தலைவர்கள், எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், முந்திரிக்கொட்டை போல அறிக்கை அளித்து, அவ்வப்போது வலியுறுத்தி வருகின்றனர்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு: முதல்வர் இ.பி.எஸ்., இப்போது தான், காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். ஆனால், ராமதாஸ், 2015லியே அதை வலியுறுத்தியுள்ளார். 2016 தேர்தல் அறிக்கையில் அதை குறிப்பிட்டுள்ளார்.
'தாடி வைத்தவர்கள் எல்லாம் பயங்கரவாதிகளா; உங்கள் சிந்தனை வித்தியாசமாக இருக்கிறதே...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தடுப்பு ஒத்திகையின் போது, பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டவர்கள், முஸ்லிம்கள் போல தாடி வைக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் முஸ்லிம்கள் தான் பயங்கரவாதிகள் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதை நான் கண்டிக்கிறேன்.
'சமீப காலமாக, இ.பி.எஸ்.,சை அமைச்சர்களும், மாஜிக்களும் இப்படித் தான் வானளாவ புகழ்கின்றனர்; காரணம் தான் என்னவென்று தெரியவில்லை...' என, சந்தேகம் கிளப்பும் வகையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செம்மலை பேட்டி: ஜெ., ஆட்சியைக் காட்டிலும், முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சியில், முடிவுகள் வேகமாக எடுக்கப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில், தன் ஆளுமையையும், செயல் திறனையும், முதல்வர் இ.பி.எஸ்., நிரூபித்து காட்டியுள்ளார்.
'வெங்காய விலையேற்றம் என்னவாயிற்று... அதிகபட்சம், 100 ரூபாய் வரை சென்றது; இப்போது திரும்பவும், கிலோ 20க்கு கிடைக்கிறது...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையத்தின் செயலர் பொன்னுசாமி அறிக்கை: தமிழகத்தில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், சமீபத்தில் வெங்காயத்திற்கு ஏற்பட்ட நிலை தான், பாலுக்கும் ஏற்படும். ஒட்டுமொத்த பால் விலையை, அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement