Advertisement

பிச்சைக்கார பிழைப்பு இனி நடத்த வேண்டுமா?

Share

என்.சாண்டில்யன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சியில், 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த, தமிழக அரசின் கடன் சுமை, இன்று, அ.தி.மு.க.,வின் பொற்கால ஆட்சியில், 4.56 லட்சம் கோடி ரூபாயாக பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது.ஒவ்வொரு தமிழன் தலையிலும், இப்போது, 57 ஆயிரம் ரூபாய் கடன் ஏறியுள்ளதாம்; ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்யும், அ.தி.மு.க., தலைவர்கள் நடத்தி காட்டிய, 'கின்னஸ்' சாதனை இது!கடன் சுமை, மூன்று மடங்கு பெருகியதற்கு, உருப்படியாக என்ன திட்டங்கள் நிறைவேற்றினர் என, யோசித்துப் பார்த்தால், மரமண்டைக்கு எதுவுமே, புலப்பட வில்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் புதிதாக அணைகள் கட்டப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புகள் உருவாக்கவில்லை. புதிதாக அரசு பள்ளிகள் உதயமாகவில்லை. கிராமங்களில், நல்ல தரமான சாலை வசதிகள் செய்யப்படவில்லை.குடிப்பதற்கே, நல்ல தரமான தண்ணீர் கிடைக்காமல், மக்கள் காலி குடங்களுடன் அலையும், அவல நிலை ஓயவில்லை. குடியிருக்க, நல்ல வீடுகள் கட்டி தரப்படவில்லை. அரசு அலுவலகங்களில், லஞ்சம் கொடுக்காமல் காரியம் நடப்பதில்லை.அரசு மருத்துவமனைகளில், தரமான சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும், பஞ்சைப் பராரிகளின் வாட்டம் போக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீணாக கடலில் கலக்கும் தண்ணீரைத் தேக்கி வைக்க, எந்த நீர் பாசன திட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இப்படி, உருப்படியாக எதுவுமே நடக்கவில்லையே?
ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட்டில், பல துறைகளுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் எல்லாம் எங்கே போனது, யார் வீட்டு கஜானாவை நிரப்பியது?இலவசங்களை நம்பி வாழும், இளிச்சவாயர்களான மக்கள் தான், வறுமைக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். திராவிட கட்சிகளின், பொற்கால ஆட்சியில், தமிழகம் பிச்சைக்கார மாநிலமாக மாறி வருவது தான், உண்மை!திராவிட கட்சிகளின் ஆட்சி, இனியும் தொடர்ந்தால், தமிழர்கள் திருவோடு ஏந்தி பிச்சைக்கார பிழைப்பு நடத்த வேண்டி இருக்கும்.

கடன் வலையில்பொது மக்களைசிக்க வைக்காதீர்!வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடன் வரம்பு, மாநில மொத்த வருவாயில், 25 சதவீதத்திற்குள் தான் இருக்க வேண்டும். 'தமிழக அரசின் கடன் வரம்பு, 21.83 சதவீதமாகவே உள்ளது' என, தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தன் கருத்தை கோடிட்டு காட்டி இருக்கிறார்.

'டாஸ்மாக் வாயிலாக, ஆண்டிற்கு மது வருவாய், 30 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டு விட்டது. இலவசம், மானியம் என, பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்குகிறது, மாநில அரசு. இந்த வகையில், தமிழக அரசின் கடன் சுமை, 4 லட்சத்து, 56 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஒவ்வொருவரின் தலையிலும், 57 ஆயிரம் ரூபாய் கடன் சுமை என, 'பட்ஜெட் - 2020' வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.மத்திய, மாநில அரசுகளின் நிதியை எதிர்பார்த்து, உள்ளாட்சி மன்ற நிர்வாகங்கள் காத்திருக்கின்றன. 18 ஆயிரம் கோடி ரூபாய் வரை, மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு நிதி வர வேண்டியுள்ளதாம்.இத்தருணத்தில், 'யாருக்கும், எதற்கும் போதாத பட்ஜெட், இது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்வரும் ஆண்டுகளிலும், நிதி நிலைமை மேம்படும் என, சொல்லி விட முடியாது. வளர்ச்சி பணிகளுக்கு, அரசு செலவிடும் பணம், பல்வேறு வழிகளில் விரயம் ஆவதை தடுக்க, குழுக்கள் அமைக்க வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில், பல ஆயிரம் பணியிடங்களை நிரப்பி, நிர்வாகம் முடக்கம் இன்றி நடைபெற வேண்டும்.புள்ளி விபரங்கள் வாயிலாக, 'மாயா ஜாலங்களை' பட்ஜெட்டில் காட்டக் கூடாது; பட்ஜெட்டின் பலன் நீட்டித்து இருக்க வேண்டும். தரமான முறையில் கட்டுமானம் நடைபெற குழுக்கள் அமைய வேண்டும். அரசு கட்டடங்கள் பலவற்றை தரம் இன்றி கட்டி, அதை சில ஆண்டுகளிலேயே, பராமரிப்பு இன்றி கைவிட்டு விடுகின்றனர், அரசு அதிகாரிகள்.அரசுக்கு வரும் வருவாய், எந்தெந்த வழிகளில் வருகிறது; அதை, இனம் பிரித்து வருவாயைஉயர்த்த கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். அதை விட்டு, மாநிலத்தை ஆள்வோர், கடன் வலையில் மக்களை சிக்க வைக்காதீர்கள்.

சாலை விரிவாக்கபணிகளை விரைவில்துவக்கணும்!எஸ்.வைத்தியநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கமும், பன்மடங்கு கூடி விட்டது.என்.எச்., 205 எனப்படும், சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை, பாடி, அம்பத்துார், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி, நகரி, புத்துார் வழியாக செல்கிறது.

பாடி - திருநின்றவூர் வரை, மாநில நெடுஞ்சாலை துறை வசம், சாலை பராமரிப்பு உள்ளது.பாடி, மண்ணுார்பேட்டை, அம்பத்துார் தொழிற்பேட்டை, அம்பத்துார் ஓ.டி., ஆகிய இடங்களில் சாலை குறுகலாக உள்ளது. அங்கு போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.தனியார் தொழிற்சாலைகள், கம்பெனிகள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், டூ - வீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து தான், பணி செய்கின்றனர்.'பீக் ஹவர்' நேரங்களில், அனைத்து சாலைகளிலும் விழி பிதுங்கும் அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது.சென்னையில் சாலைகளை விரிவாக்கம் செய்தாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தபடி உள்ளது. திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, சாலை அகலப்படுத்தப்படவில்லை. சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிக்கி அவதிப்படுகின்றனர்.திருத்தணி - திருவள்ளூர் வரை, சாலை அகலப்படுத்தப்பட்டு, கட்டண சாலையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், சாலையில், தடுப்பு இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. திருவள்ளூரில் புறவழிச் சாலை அமைக்கப்படவில்லை.பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள சாலை விரிவாக்க பணிகளை விரைவில் துவக்க, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venkat Iyer - nagai,இந்தியா

    நான் நாகை மாவட்டம்,தரங்கம்பாடி தாலுகா,மடப்புரம் ஊராட்சி மண்மலை என்ற கிராமத்தில் வசித்து வருகின்றேன்.கடந்த சில ஆண்டுகளில் எனது கிராமத்தில் நான் அறுபது ஆண்டுகளில் பார்க்காத வளர்ச்சியை சமீப நாட்களில் ஆண்டுகளில் பல நடைபெற்று இருப்பதை நீங்கள் என்னை எங்கு சாட்சியாக சொல்ல வேண்டும் என்று கூறினாலும் சொல்ல வருகின்றேன்.1.எங்களது கிராமத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களின் கூறை வீடுகள் பலவும் இன்று கான்கிரிட் வீடுகளாக மாறி உள்ளனர்.2.குடி நீர் இருபத்து நான்கு மணி நேரமும் பஞ்சாயத்து குழாயில் வீடுகளுக்கு வருகின்றது.3.பல விவசாய தொழிலாளர்கள் வீட்டில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் அரசு உதவியில் வளர்க்கின்றார்கள் 4.இவர்கள் வீட்டு குழந்தைகள் ஆரம்ப கல்வி என்ற நிலை மாறி செகண்டரி கல்வியை நூறு சதவீதம் பயின்று வருகின்றனர்.5.எங்கள் கிராமக் குளம் முழுவதும் தூர்வாரப்பட்டு கிராமத்திற்கு நீர் பிடிப்புக்கு முக்கிய ஆதாரமாக உருவாகியுள்ளது.6.பல விவசாய தொழிலாளர்கள் முதியோர் பென்ஷன் பெற்று வருகின்றனர்.7.பிறக்கும் குழந்தைகளின் உயிர் இழப்புகள் குறைந்து முற்றிலும் இல்லை என்று சொல்லலாம்.அதற்கு அரசு மருத்துவ மனை நல்ல முறையில் செயல்பட்டதும் கிராம சுகாதாரம் பாதுகாக்கப்பட்டதுதான் முக்கிய காரணமாகும். 8.மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் அரசு எங்கள் கிராமத்தில் நூறு நாள் வேலை கொடுத்து கிராம பொருளாதாரம் ஓரளவு உயர்ந்து உள்ளது.9.ஊராட்சியில் தார் சாலை போடப்பட்டு டிராக்டரும் இரு சக்கர வாகனமும் சென்ற சாலைகள் இன்று பதினாறு டன் லாரி வரும் வகையில் தார் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.10.சிறிய கிராமத்தில் விளையாட்டு மைதானம்,11.தெரு விளக்குகள் மிளிர்கின்றனர்12..பிராதான போக்குவரத்து சாலைகள் அனைத்தும் நூறடி சாலைகளாக மாறியுள்ளது. 13.இவற்றை யெல்லாம் பார்க்கும்போது உண்மையில் கிராமம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு பேசாதீர்கள்நாட்டின் வளர்ச்சி கிராமங்களை மையப்படுத்தி தான் உள்ளது.முதலீடுகள் வளர்ச்சி பணிகளுக்கு அனைத்து நாடுகளிலும்தான் கடன் வாங்கப்பட்டு செய்யப்பட்டு இன்று பல நாடுகள் கடன் சுமைகளில் இருக்கின்றது.சில நாடுகள் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்தவே ஏகப்பட்ட கடனை வாங்கி சிக்கி தவிக்கின்றது.நாம் வளர்ச்சி பணிகளுக்கு தான் செலவு செய்து கடன் சுமை உருவாகி உள்ளது.நம்மிடம் மனித ஆற்றல் அதிகமாக இருப்பது பெரிய விஷயம்.நல்ல படிப்பறிவு கொடுப்பதன் மூலம் அந்நிய செலாவானியாக பணம் நிறைய வருகிறது. மாநிலங்களில் ஒரியா,மகாராஷ்ட்ரா,காஷ்மீர் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் தீவிரவாதத்தினை கட்டுப்படுத்த மிகுந்து செலவழிக்கின்றனர். நமது மாநிலம் அமைதியான மாநிலமாக இதுவரை இருந்தது.ஆனால் எதிர்கட்சிகளின் சுயநலங்களால் தினமும் போராட்டங்களும், மதக்கலவரங்களையும் தூண்டுதல் பேரில் செய்து வருகின்றனர். அன்று கம்னியூஸ்ட் போராட்டங்களை செய்து இன்று அந்த கட்சி காணாமல் போனது.இன்று யார் போராட்டங்களை செய்து வருகிறார்கள் என்பதை முதலமைச்சரே பட்டவர்த்தனமாக கூறிவிட்டார்.கடன் ஒரு பொருட்டே அல்ல.அம்மா ஊழல் செய்த அமைச்சர்களை எல்லாம் அப்போதே சலித்து எடுத்து விட்டார்.இருப்நவர்கள் ஓரளவு பொதுநல மனப்பான்மையில் உள்ளவர்கள்தான்.குறை கூறினால் கடனில் திட்டங்களை செய்யாமல் ஊழல் செய்துவிட்டது போல கூறி உள்ளீர்கள்.ஆதாராங்களை தெரிவியுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement