Advertisement

தீவிரவாதத்துக்கு தீர்வு காணும் மோடி!

ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க, அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லப பாய் படேலின் முயற்சி கை கொடுத்ததைப் போல், தீவிரவாத அச்சுறுத்தலை ஒடுக்க, இன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முயற்சி கை கொடுத்துள்ளது.

கடந்த, 1972 முதல், தங்களின் உரிமைக்காகவும், தனி மாநிலம் கோரியும் போராடி வந்த, அசாமின், போடோ பழங்குடியினரின், 48 ஆண்டு கால போராட்டத்திற்கு, மோடி தலைமையிலான அரசு, தீர்வை அளித்து உள்ளது.

போடோ மக்கள்அசாம் மாநிலத்தில், அந்த மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட போடோ பழங்குடியினர், 30 லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்கின்றனர்.இவர்கள், அசாமில், போடோ மக்கள் அதிகம் வாழும் கோக்ரஜார், சிராங், பஸ்கா மற்றும் உடல்குரி ஆகிய நான்கு மாவட்டங்களை இணைத்து, போடோலாந்து என, தனி மாநிலமாக அறிவிக்க கோரி, போராடி வந்தனர். இவர்களுக்கு, அசாமை ஆண்ட அரசுகள், கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாகம், அரசியல் என, எதிலும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனால், போடோலாந்து தனி மாநிலம் தான், தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தனர்.இதற்காக அவர்கள், 1986ல், போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தினர். 'உரிமையை வென்றே ஆக வேண்டும்; அதற்கு ஆயுதம் ஏந்திய போராட்டமே தீர்வு' என நினைத்து, போராடியதன் விளைவாக இதுவரை, பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்; அரசின், பல கோடி ரூபாய் சொத்துக்கள் அழிந்துள்ளன.ஆயுதம் ஏந்திய போடோ தீவிரவாதிகளின் அட்டகாசமும், மாணவர்களின் போராட்டமும், அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தரவே, 20 ஆண்டுகளுக்கு பின், 1993ல், போடோ மாணவர்கள் சங்க கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி, முதல் ஒப்பந்தத்தை, அசாம் மாநில அரசு ஏற்படுத்தியது.

இரண்டாவது ஒப்பந்தம்அதன் வழியே, போடோலாந்து தன்னாட்சி கவுன்சில் உருவானது. இதில், தங்கள் உரிமைக்கான வழி ஏதுமில்லை என, திருப்தி அடையாமல், மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.எனவே, 2003ல், இரண்டாவது ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.இதன் மூலம் கல்வி, வனம், தோட்டக்கலை உட்பட, 30க்கும் மேற்பட்ட துறைகளை உள்ளடக்கிய அட்டவணை, 6ன் கீழ், 'போடோலாந்து டெரிடோரியல் கவுன்சில்' எனப்படும், பிரதேச குழு உருவாக்கப்பட்டது.எனினும், காவல், வருவாய், பொது நிர்வாகம் ஆகிய துறைகள், அசாம் மாநில அரசிடமே இருக்கும் என, ஒப்பந்தம் சொன்னது.அதை ஏற்காத போடோ குழுவினர், தொடர்ந்து போராடியே வந்தனர். மத்தியில், 2004 முதல், 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் தொடர்ந்து, 2001 முதல், 2016 வரை, 16 ஆண்டு ஆண்ட காங்கிரஸ் அரசும் இதற்கு நிரந்தர தீர்வை அளித்திருக்கலாம். எனினும், வட கிழக்கில் உள்ள இந்த முக்கிய மாநிலம் மீது கவனத்தை செலுத்தாமலும், அலட்சிய போக்குடனும், மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்டன..


தற்போது, மத்தியில் ஆட்சியில் உள்ள, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தீவிரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் தீர்வு காணும் நோக்கத்துடன் செயல்பட்டதன் விளைவு, ஆயுதம் ஏந்தி போராடிய போடோ அமைப்பு சரணடைந்தது. 48 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்றைய சூழலில், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாதத்தை ஒடுக்க, ஒருங்கிணைந்து போராட, உலக நாடுகள் அழைப்பு விடுக்கும் நிலையில், நம் நாடும், அதற்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் மோடி தலைமையிலான இந்திய அரசு, உலகிற்கு ஓர் உயரிய கருத்தை விதைக்கும் வகையில், அற்புதத்தை நிகழ்த்தி காட்டியுள்ளது.அது தான், உள்நாட்டு தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஒடுக்குவது. இதை ஒவ்வொரு நாடும் பின்பற்றினால், உலகில் பயங்கரவாதம் இருக்காது. கடந்த ஆட்சியின் போது, நக்சல் தீவிரவாதி களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் கை கொடுத்ததன் விளைவு, ஜார்க்கண்ட், ஒடிசா,சத்தீஸ்கர், ஆந்திரா போன்ற மாநிலங்களில் நக்சல் அட்டூழியம் வெகுவாக குறைந்துள்ளது.

மக்கள் மகிழ்ச்சிஅதுபோல, காஷ்மீரை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கவும், அங்குள்ள மக்கள் உண்மையான சுதந்திர காற்றை சுவாசிக்கவும், அரசியல் சட்டப் பிரிவு, 370ஐ நீக்கியது, மத்திய அரசு.இதனால் தற்போது அங்கு, உண்மையான அமைதி நிலவி, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.இது போன்றே, வரலாற்று சிறப்பு மிக்க போடோ இனக்குழுவின், 48 ஆண்டு கால போராட்டத்துக்கும், மத்திய அரசு தீர்வு கண்டுள்ளது.கடந்த மாதம், 27ல், போடோ தீவிரவாத குழுக்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், 1,615 பேர், ஆயுதங்களுடன்சரணடைந்தனர்.தேசிய நீரோட்டத்தில் போடோ குழுவினர் இணைந்ததை அறிவித்து, பிரதமர் மோடி, கோக்ரஜார் என்ற இடத்தில் பேசும் போது, பிராந்திய வளர்ச்சிக்கு, 1,500 கோடி ரூபாய் அறிவித்தது வரவேற்கக் கூடியது. அதேபோல, 'நாட்டில் செயல்படும் வேறு சில பிரிவினைவாத குழுக்களும், தீவிரவாத குழுக்களும் இதை போன்ற முடிவை எடுத்தால், வரவேற்கப்படும்' என, பிரதமர் மோடி கூறியது பாராட்டக்கூடிய விஷயம்.நாட்டின் வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல என்பதை உணர்ந்த, பா.ஜ., அரசு, நாட்டில் அமைதியான சூழல் நிலவினால் மட்டுமே இவை எல்லாவற்றையும் பயன்படுத்தி முன்னேற்றம் அடைய முடியும் என்ற சரியான பார்வையை, சரியான கோணத்தில் கையாள்கிறது.இந்தளவு கூர்மையுடன், நாட்டு நலனையும், மக்கள் நலனையும் பேணி காக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விரைவில், நம் நாட்டை வல்லரசாக மாற்றும் என்பதை நம்புவோம்.

நா.உதயகுமார்
திருவாலங்காடு,
திருவள்ளூர் மாவட்டம்.
இமெயில்: knudhayakumar10@gmail.com

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    உண்மையான எழுத்துக்கள்

  • Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா

    நல்ல முயற்சி சரியான கட்டுரை அனைவரும் படிக்கவேண்டும்

  • Naga rajan - singapore,சிங்கப்பூர்

    உண்மை ....உண்மை ....உரக்க சொல்வோம் . நாட்டை கட்டஅமைப்பு பணியை ஆளும் மத்திய அரசு நன்றாக செய்கிறது . வாழ்த்துக்கள் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement