Advertisement

'டவுட்' தனபாலு

த.மா.கா., தலைவர் வாசன்: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், ஏற்கனவே கடந்த, 8ல் போராட்டம் நடத்தியும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்; இம்மாதம், 31 மற்றும் பிப்., 1 ஆகிய இரு நாட்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சம்பள உயர்வு போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலை நிறுத்தம் நடக்க உள்ளது.


'டவுட்' தனபாலு: நீங்க என்ன, வங்கி ஊழியர்களுக்கான தொழிற்சங்க தலைவரா? ஒரு பக்கம், பா.ஜ.,வோட ஐக்கியமாகப் பார்க்கிறீங்க... இன்னொரு பக்கம், கம்யூனிஸ்ட் மாதிரி பேசுறீங்க... உங்க கொள்கை என்னன்னு, 'டவுட்' இல்லாம விளக்கினா தான், அடுத்த தேர்தல்லயாவது, உங்க கட்சி பத்தி, மக்கள் கொஞ்சமேனும் சிந்திப்பாங்க... எவ்வளவு நாள் தான், உங்க அப்பா மூப்பனாரின், 'கெத்தை' வைத்தே, காலத்தை ஓட்ட எண்ணம்?



தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும், இ.பி.எஸ்., ஆட்சியில், ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை நிறைவேற்றியுள்ளனரா... 'மக்களுக்கு என்ன செய்துள்ளீர்கள்' என, ஆட்சியாளர்களிடம் கேட்டால், 'விருது வாங்கியுள்ளோம்' என்கின்றனர். இந்த நாட்டில், விருதுகளுக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டது.



'டவுட்' தனபாலு: 'விருதுகள் அறிவிப்பில், கட்சி சார்பு மற்றும் அரசுக்கு ஆதரவானோருக்கு வழங்கப்பட்டது, தி.மு.க., ஆட்சியில் தான் என்பது, தமிழக மக்களின், நடுநிலையாளர்களின் கருத்து. தி.மு.க.,வின் அப்போதைய அரசுக்கு, இப்போது கிடைத்துள்ளது போன்ற விருது, கிடைக்கவில்லை என்ற சோகத்தில் தான், ஒட்டுமொத்தமாக விருதுகள் மீது ஸ்டாலின் சாடுகிறார் என்பது, 'டவுட்' இல்லாமல் புரிகிறது.


இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள், பிப்., 24ல் வருகிறது. அதை சிறப்பாக கொண்டாட வேண்டும். பொதுமக்களுக்கு, தங்களால் இயன்ற நலத் திட்டங்களை, கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்; அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் சொல்ல வேண்டும்.


'டவுட்' தனபாலு: அரசின் சாதனைத் திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என, கட்சியினருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளதால், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு, கட்சியினரை தயார்படுத்துகிறார் என்பது புரிகிறது. ஜமாய்ச்சிடுவாங்கங்கறதுல, 'டவுட்'டே இல்லை!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement