Advertisement

முதுமைக்கு மரியாதை

இறைவனின் பேரருள் இருந்தால் மட்டுமே ஒருவர் முதுமை பருவத்துக்குள் நுழைய முடியும். இன்றைய தேதியில் இரண்டு மூன்று குழந்தைகளைக் கூட வளர்க்க முடியும், ஒரு முதியவரை வீட்டில் வைத்து பராமரிக்க முடியவில்லை என்ற புலம்பல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது..குடும்பத்திற்கு ஆறேழு பிள்ளைகள் பெற்று வளர்த்தது போய் 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' என்றான பிறகு தான், வீட்டிலுள்ள முதியவர்களை பார்ப்பது சிரமத்துக்குரியதாய் உள்ளது. வாரிசுகள் மற்றும் அவர்களின் இணையர் வேலைக்கு சென்றுவிட்ட பிறகு, அவர்களுக்கு தன்னுடன் பேசக்கூட ஆள் இன்றி தவிக்கிறார்கள்.
காலை முதல் மாலை வரை எத்தனை மணிநேரம் தொலைக்காட்சி பெட்டியையே வெறித்துக் கொண்டிருப்பது? பக்கத்திலிருக்கும் நுாலகத்துக்கோ, பூங்காவுக்கோ செல்வதானாலும் தனியாக செல்வதற்கு பயம். வழுக்கி, விழுந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் இன்னும் பிள்ளைகளுக்கு சங்கடமாய் போய்விடுமே என்ற கவலை!

முதியோரின் விருப்பம்இப்போதெல்லாம் முதியோர் இல்லங்களில் முதியவர்கள் பலர் எவ்வித வெறுப்புணர்வும் இன்றி விருப்பமுடன் இணைகின்றனர். இது எவ்வாறு சாத்தியமாகிறது?முதலில் தன் வயதுடையவர்களிடம் பேசினாலே வயோதிகத்தின் விரக்தி நிலை பாதி ஒழிந்துவிடும். முதியோர் இல்லம் குறித்த சமூகத்தின் பார்வை எப்படி இத்தனை மாற்றத்துக்கு உள்ளானது?வீட்டில் நான்கு சுவருக்குள் அடைந்து போயிருப்பர். ஆனால் காலாற நடப்பதற்கு, இயற்கையை ரசிப்பதற்கு என முதியோர் இல்லங்களில் பல தளங்களை பிரத்யேகமாக உருவாக்கிக் கொடுத்துள்ளனர். ஓடி ஓடி களைத்துப் போன வாழ்க்கையில் மனதுக்கு நிறைவாய் அசை போட மனம் ஏங்கும். அதற்கான வாய்ப்புகளை இந்த இடங்கள் ஏற்படுத்தித் தருகின்றன.வேளா வேளைக்கு அவர்களின் உடல் வாகுக்கேற்ற பத்திய உணவுகள் சுகாதாரமான முறையில் சத்தாக வழங்கப்படுகின்றன. மாதந்தோறும் சீரான மருத்துவ பரிசோதனைகள் என அவர்களுக்கான தனி உலகம் அது.

களைகட்டுகிறதுஎன் உறவினர் ஒருவர் அவர் வசிக்கும் முதியோர் இல்லம் குறித்து என்னிடம் கூறிய போது தான் முதியோர் இல்லங்கள் பற்றிய என் பார்வையும் மாறிப்போனது.எத்தனையோ வருஷமா உழைச்சாச்சு. வீட்டுல பேரக் குழந்தைங்க வளர்ற வரைக்கும் ஒத்தாசையா இருந்துட்டு நானே விருப்பமா இங்க வந்துட்டேன். உடம்புல புது ரத்தம் ஏத்தினா மாதிரி ஒரு புது வாழ்க்கை' என்று சிலிர்த்தார் அவர்.உண்மை தான். வேறுவேறு மனிதர்கள். புதுப்புது நட்புகள். ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருப்பதால் ஏற்படும் மனநிறைவு என்று தெம்பாக உணர்கின்றனர். ஒன்றாக கோவிலுக்கு போவது, கடைத்தெருவுக்கு கிளம்புவது, பஜனை செய்வது, பாட்டு பாடி நடனம் கூட ஆடி சந்தோஷமா இருப்பது என களை கட்டுகிறது முதியோர் இல்லங்கள்.வீட்டில் இருக்கும்போது ரொம்ப வயதாகிடுத்தோ என எண்ணும் அவர்கள் இங்கு வந்ததன் பிறகு தான் இன்னும் இளமையோடு இருப்பதாக உணர்கின்றனர்,” என்றார்.

கவலைகள் மறைந்திடும்அன்பும் அரவணைப்பும் அபரிமிதமாக கிடைக்கும் போது கவலைகள் பறந்து போய்விடுகிறது.பிள்ளை இல்லாதோர்களும் இணையை பிரிந்தவர்களும் ஆதரவற்றோர்களுமே இந்த இல்லங்களை நாடிவந்த காலங்கள் கரையத் தொடங்கிவிட்டது. புதுமை விரும்பிகளும் வீட்டு நிலவரத்தின் புரிதல் பெற்றவர்களும் பெரிதாக சங்கடப்படுவதில்லை. துவக்கத்தில் சிற்சில தடுமாற்றங்கள் இருப்பினும் கவலைகள் மறைந்துபோகும் இடமாக இவை விளங்குகிறது. கைவேலைகள் கற்றுக் கொடுத்தல், டியூஷன் எடுத்தல், சமையல் சொல்லித் தருதல், குழந்தையை கால அளவிற்கேற்ப போய் பராமரித்தல் என இங்கிருக்கும் முதியோர்களும் சில இடங்களுக்குச் சென்று பொருள் ஈட்டுகிறார்கள்.உளவியால் ரீதியாக அவர்களின் மனநலம் சிறப்பாக இருப்பதால் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது. அவரவர் வசதிக்கு ஏற்ப இல்லங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.பாக்கியசாலிகள்வயதானவர்களுக்கு முதியோர் இல்லங்களே சிறந்தது என்பது என் கூற்று அல்ல. தன் குடும்பம், வாரிசுகள், பேரப்பிள்ளைகள் என அவர்களுடன் வாழையடி வாழையாக அன்பு, அதிகாரத்துடன் வாழ்பவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலை இடம்கொடுக்கா பட்சத்தில் தினம் ஒரு சண்டை, சச்சரவு என குடும்ப உறவே முற்றிலும் கருதத் தொடங்க வேண்டாம் என்பதே சொல்ல வரும் செய்தி. சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதை நாம் ஏற்கலாம்.சில இடங்களில் முதியவர்கள் குழந்தைகளைவிட மிக மோசமாக அடம்பிடிப்பதாக இளையவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். வீட்டில் செய்யப்படும் எந்தவொரு மாற்றத்தையும் அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. அனைத்து விஷயங்களிலும் முன்னுக்கு பின் முரணாக நடந்து கொள்கிறார்கள். விட்டுக்கொடுத்தல் என்பது இரண்டு பக்கத்திலும் இருக்க வேண்டும். பல இடங்களிலும் தன் பிள்ளைகளுடன் வசிக்கும் முதியவர்கள் ஆனந்தமாகவும் இல்லை. எப்போதும் அவர்களுக்காக விட்டுக்கொடுத்துக் கொண்டே இருந்தால் நாங்கள் எப்போது தான் எங்கள் வாழ்க்கையை வாழ்வது என பரிதாபமாக கேட்கின்றனர்.

பார்வையை மாற்றுவோம்காலங்கள் மாற காட்சிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது. நாமும் நம் பார்வையின் கோணத்தை வேறு நிலையில் நிறுத்திப் பார்ப்போம். முதியோர் இல்லத்தில் வாழ்பவர்களை ஏதோ பரிதாபத்துக்குரிய ஜீவன்களாக பார்க்கும் நம் பார்வையை முதலில் மாற்றுவோம்.குழந்தையின்மையை போக்க வாடகைதாய் மூலமாக பிள்ளை பெற்றுக் கொள்வது நம் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாக முன்பு இருந்தது. ஆனால் இன்று பரவலாக அம்முறையை ஏற்றுக்கொண்டுள்ளோம்.முக்கியமாக முதியோர் இல்லங்கள் என்பது அனாதை இல்லங்கள் கிடையாது. அந்த எண்ணம் அனைவர் மனதிலும் இடம்பிடிப்பது சிறந்தது. ஏனெனில் உணவு போல உணர்வும் முக்கியமானது.மிகச்சில வீடுகளில் தம்பதி சமேதராய் வாழும் முதியவர்களை பிரிக்கும் வேலையும் நடக்கிறது. தாய் பெரியவன் வீட்டில், தகப்பன் சின்னவன் வீட்டில் என பிரிந்து வாழ்கிறார்கள். பாத்திர பண்டங்களை பிரிப்பது போல பெற்றவர்களை பிரிப்பது மகா பாவம். அவர்களே விருப்பப்பட்டாலொழிய இப்படி பிரிந்து வாழ்வது கொடுமையிலும் கொடுமை.

முதியோரின் காதல் வாழ்க்கைதம் பிள்ளைகளை வளர்க்க, பராமரிக்க, பாதுகாக்க யாராவது ஒருவர் உடன் இருக்க வேண்டிய கட்டாயத்தினால் பெற்றோரை பிரிக்கின்றனர். 'அவர்களுக்கு என்ன வாழ்ந்து முடித்தவர்கள். பேரப்பிள்ளைகளை பார்க்கட்டுமே” என்று வீணான வார்த்தைகள் வேறு. வாழ்ந்த வாழ்க்கையை நின்று, நிதானமாக, நிறைவாக அசை போட பக்கத்தில் இணை இருப்பது அவசியம். இதை பிள்ளைகள் உணர வேண்டும். காதல் வாழ்க்கை இளமையில் இனிப்பாய் இருப்பதை பல கவிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால் முதியோரிடம் உண்டாகும் காதல் வாழ்க்கையை பாரதிதாசன் குடும்ப விளக்கில் அழகாகக் காட்டியுள்ளார்.'புதுமலர் அல்ல; காய்ந்தபுற்கட்டே அவள் உடம்பு!சதிராடும் நடையாள் அல்லள்தள்ளாடி விழும் மூதாட்டிமதியல்ல முகம் அவட்குவறள்நிலம்! குழிகள் கண்கள்!எது எனக்கின்பம் நல்கும்?'இருக்கின்றாள்' என்ப தொன்றே!'முதியவளின் உடம்பு புதுமலர் போல் ஒளியுடன் இல்லை; காய்ந்து போன புல்கட்டைப் போன்று இருக்கிறது. அவள் நடப்பது நடனத்தைப் போல் அழகாக இல்லை; தள்ளாடி விழுவது போல் இருக்கிறது. கண்கள் குழிந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட முதியவளின் உடலில் எனக்கு இன்பத்தைத் தருவது எது? இன்றும் உயிருடன் இருக்கின்றாள் என்பது மட்டுமே எனக்கு இன்பத்தைத் தருவது ஆகும் என்று முதியவர் கூறுவது போல் பாரதிதாசன் பாடியுள்ள பாடல் உண்மைக் காதல் என்பது உயிர் இருக்கும் வரை தொடரும் வலிமை உடையது என்பதை உணர்த்துகிறது அல்லவா? முதுமை குறித்து இன்னும் சரியான புரிதலுடன் நாம் அவர்களை அணுகுவது நன்மை தரும்.-பவித்ரா நந்தகுமார்எழுத்தாளர், ஆரணி94423 78043

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ

    வெரி நைஸ் Ms.Pavithra. You did a good job.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement