Advertisement

பதவி உயர்வு உத்தரவுக்கு ஆசிரியர்களிடம் வசூல்!

பதவி உயர்வு உத்தரவுக்கு ஆசிரியர்களிடம் வசூல்!
''மாணவர்களுக்கு, பொங்கல் பரிசா, 100 ரூபாய் குடுத்துருக்காருங்க...'' என, பேப்பரை மடித்தபடியே, விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''யாருவே அது...'' என, விசாரித்தார் அண்ணாச்சி.''மதுரை கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.,வாகவும் இருக்காரே... இவர், தீபாவளி, பொங்கலுக்கு, தனக்கு வாழ்த்து சொல்ல வர்ற கட்சிக்காரங்களுக்கு, புது ரூபாய் நோட்டுகளை பரிசா குடுப்பாருங்க...''சமீபத்துல, தமுக்கம் தமிழன்னை சிலை பக்கத்துல, பள்ளி மாணவர்கள் கலந்துக்கிட்ட ஒரு நிகழ்ச்சிக்கு ராஜன் செல்லப்பாவும் போயிருந்தாருங்க... ''அப்ப, மாணவர்கள் எல்லாருக்கும், புத்தம் புது, 100 ரூபாய் நோட்டை குடுத்திருக்கார்... அதே மாதிரி, பொங்கல் அன்னைக்கு தன் ஆபீசுக்கு வாழ்த்து சொல்ல வந்தவங்களுக்கும், 100 ரூபாய் குடுத்திருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''அரசியல்ல இப்படி எல்லாம் ஏதாவது பண்ணிண்டே இருந்தா தான், நிலைச்சு நிக்க முடியும்னு நெனைக்கறார் போலிருக்கு...'' என்ற குப்பண்ணா, ''இதே மாதிரி என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு... கேளுங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...''திருத்தணி நகர, தி.மு.க., பிரமுகர் ஒருத்தர், பொங்கல் பண்டிகைக்காக, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்னு, 1,000 பேருக்கு, வேஷ்டி, சட்டை, கட்சி காலண்டரோட, பணமும் பரிசா குடுத்திருக்கார் ஓய்...''நிர்வாகிகள், தொண்டர்கள்னு அவாவா தகுதிக்கு ஏத்தாப்புல, 500ல துவங்கி, 5,000 ரூபாய் வரைக்கும் குடுத்திருக்கார்... ''தீபாவளிக்கு, இதே மாதிரி பரிசு குடுத்த வகையில, அவருக்கு, 2 லட்சம் ரூபாய் தான் செலவானது... ஆனா, பொங்கல் பரிசுக்கு மட்டும், 5 லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்கார் ஓய்...''அதுக்கும் காரணம் இருக்கு... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை, சீக்கிரம் நடத்த போறாளோல்லியோ... இதுல, திருத்தணி நகராட்சி தலைவர் பதவியை பிடிச்சாகணும்னு, பிரமுகர் தீவிரமா இருக்கார் ஓய்... ''அதுக்கு, கட்சியினர் தயவு வேணுமோல்லியோ... அதான், இப்பவே சின்ன மீனை போட்டு வச்சிருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''பூபதி, இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த அண்ணாச்சி, ''ஆசிரியர்கள் கிட்ட வசூல் பண்ணுதாவ வே...'' என, கடைசி மேட்டருக்கு வந்தார்.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''பெரம்பலுார் ஒன்றியத்துல இருக்கிற அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகள்ல, 20 வருஷம் சர்வீஸ் முடிச்ச ஆசிரியர்கள், 20 பேர், சிறப்பு நிலை அந்தஸ்து வாங்கியிருக்காவ... ''இதனால, இவங்களுக்கு தலா, 4,000 முதல், 4,500 ரூபாய் வரை சம்பளம் கூடுதலா கிடைக்கும் வே...''இந்த உத்தரவை போட்ட, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு தரணும்ன்னு, வட்டார கல்வி அலுவலகத்துல இருந்து, 20 ஆசிரியர்களிடமும், தலா, 2,000 ரூபாய் வசூல் பண்ணியிருக்காவ...''இந்தப் பணம் யாருக்கு போச்சுன்னு தெரியலை... 'சீனியாரிட்டிப்படி கிடைச்ச பதவி உயர்வுக்கு கூட, லஞ்சம் வசூலிக்காவளே'ன்னு ஆசிரியர்கள் புலம்புதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.பேச்சு முடிந்ததும், பெரியவர்கள் கிளம்பினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    லஞ்சம் கொடுத்தால்தான் அரை நாள் casual லீவ் கிடைக்கும், ஒரு மணி நேர அனுமதி கிடைக்கும் என்றுகூட ஆரம்பித்துவிடுவார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement