Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'முந்தைய ஆண்டுகளில் நடந்தது போல நடக்கும்; நீங்களும் கண்டிப்பாக, குடமுழுக்கு விழாவுக்கு போய், கட்சியை வளர்க்க, சிவனிடம் வேண்டி வாருங்கள்...' என, அறிவுரை கூற வைக்கும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை, தமிழர் வழிபாட்டு முறையில், தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என, பெரிய கோவில் மீட்புக்குழு கோரிக்கை விடுத்து உள்ளது. அந்த கோரிக்கையை, தமிழக அரசு ஏற்க வேண்டும்; தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்.


'வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும், உங்கள் கூட்டணி செய்யுமே, 'ப' என்ற அந்த பணியை செய்யவில்லை என்கிறீர்களா...' என, சந்தேகம் கிளப்பும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி: உள்ளாட்சி தேர்தலில், விதைக்காமலேயே அறுவடை செய்தது, எங்களின், தி.மு.க., கூட்டணி; உண்மையிலேயே வெற்றி பெற்றது நாங்கள் தான். தேர்தல் வெற்றிக்காக, நாங்கள் எந்த பணிகளையும் செய்யவில்லை. ஆனால், அ.தி.மு.க., அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது.'படித்த, அப்பாவி இளைஞர்களுக்கு, ஒன்றிரண்டு ஆண்டுகள் வேலை கிடைக்கும்; அதில் ஏன் மண்ணை அள்ளி போடுகிறீர்கள்; இளைஞர்கள் சாபம், உங்களை சும்மா விடாது...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: வரும், ஏப்ரல், 1 முதல், தமிழகத்தில் நடைபெற உள்ள, மக்கள்தொகை பதிவேடு பணிகளை, தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும். அதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர் நியமன அரசாணையையும், தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.


'கல்விதான் மேலானது; அருமையான உதாரணம்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் பேச்சு: பதப்படுத்தப்படாத பால், ஒரே நாளில் கெட்டு விடும். ஆனால் பதப்படுத்தினால், ஒரு வாரம் வரை கெடாத தயிராகிறது; ஒரு மாதம் வரை கெடாத வெண்ணெய் ஆகிறது; எந்த காலத்திலும் கெடாத நெய் ஆகவும் மாறுகிறது. அதுபோல, கல்வி மூலம் நம்மை சுற்றியிருப்பவர்களை மேம்படுத்த வேண்டும்.


'சினிமா நடிகர்களுக்கும் அதிகபட்சம் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என, சினிமா துறையில் அதிகரித்து வரும் குரலுக்கு, உங்கள் பேச்சு வலு சேர்க்கிறது...' என, கூறத் தோன்றும் வகையில், சினிமா இயக்குனர் தங்கர் பச்சான் பேச்சு: இலக்கியம் படிப்போர், தமிழகத்தில் வெகு சிலரே. சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள், ஒரு நாள் வாங்கும் சம்பளத்தை, ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியாத நிலை தான் காணப்படுகிறது. எழுத்துக்கு, அந்த அளவுக்குத் தான் மதிப்பிருக்கிறது.


'அரசியல்வாதிகள் எதை, இல்லை என்கிறார்களோ, அது, இருக்கும் என்ற மறைமுக பொருளை, தமிழக மக்கள் நன்கு உணர்வர்; காதில் பூ சுத்தாதீர்...' என, கிண்டலாக கூறும் வகையில், காங்., செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி:தமிழகத்தில் காங்கிரசும், தி.மு.க.,வும் நீண்ட காலமாக தோழமை கட்சியாக உள்ளன. அவ்விரு கட்சிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்ட போது, மாநில காங்., தலைவரை கட்சி மேலிடம் கண்டிக்கவில்லை. மேலிடம் கேட்டுக் கொண்டதால் தான், ஸ்டாலினை அவர் சந்தித்து சமரசம் செய்தார் என்பது தவறு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement