Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'தமிழ் போர்வையாளர்களும், தமிழை வைத்து அரசியல் நடத்தியவர்களும் செய்த கோளாறு இது; இதை சரி செய்தே தீர வேண்டும்...' என, ஒப்புக் கொள்ளும் வகையில், இறையன்பு ஐ.ஏ.எஸ்., பேச்சு: தமிழ் பேசத் தெரிந்த, அதே சமயத்தில், தமிழ் படிக்கத் தெரியாத சமூகம் உருவாகி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது. ஆகவே, தமிழ் வாசிப்பு பழக்கம் வளர, ஊடகங்கள் உதவ வேண்டும்.


'அப்போ, தி.மு.க., - காங்கிரஸ் ம.தி.மு.க., கம்யூ.,க்கள் எல்லாம், சும்மா தான், இங்கு அரசியல் செய்கின்றனவா; அந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு இல்லையா...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், தமிழக செய்தித்துறை அமைச்சர் ராஜு பேட்டி: பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. 2021 சட்டசபை தேர்தலில், இந்த கூட்டணி தொடரும். எனினும், மேலும் சில கட்சிகள் இணையும். அந்த தேர்தலில் மீண்டும், அ.தி.மு.க., தான் வென்று ஆட்சி அமைக்கும்.

'நாட்டு மக்களின் கடமை, போராடுவது அல்ல; நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவது. இதை எந்த கட்சிகளும் சொல்வதில்லை; போராட மட்டும் தான் துாண்டுகின்றன...' என, கண்டிக்கத் துாண்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் பேட்டி: தமிழகத்தை ஆளும், அ.தி.மு.க., அரசில், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதோடு, பழிவாங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன; இவற்றை ஏற்க முடியாது.

'சமுத்திரம் பெரிதாக இருந்தாலும், அந்த தண்ணீரை எடுத்து குடிக்க முடியாதே; அதனால், அடுத்த முறை, உதாரணத்தை மாற்றி விடுங்கள்...' என, 'அட்வைஸ்' கூற வைக்கும் வகையில், தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, உடைந்த கண்ணாடி போல உள்ளது. அதை ஒட்ட வைக்க இயலாது. ரஜினி கூறியதை வைத்துப் பார்த்தால், கிணற்றுத் தவளை போல, தி.மு.க., உள்ளது. அ.தி.மு.க., சமுத்திரம் போல உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை.

'அப்படியே, பம்பரம், கோலிக்குண்டு, தாயம், குச்சிக்கம்பு, மல்லர் கம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் பற்றியும், மாணவர்கள் அறிந்து கொள்ள, பாடப் புத்தகங்களில், சிறு குறிப்புகளாவது எழுதுச் சொல்லுங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: ஜல்லிக்கட்டு போட்டியை, பள்ளி பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து, கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். அதுபோல, சேவல் சண்டை நடத்தவும், தமிழகத்தில் அனுமதி கோரி வருகின்றனர். அது, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

'காங்கிரஸ் பற்றி நீங்கள் சொல்வது சரி தான்; அதற்காக, 3 - 5 சதவீத ஓட்டுகளை வைத்திருக்கும் நீங்களும், ஆட்சியை பிடிக்க முடியாது...' என, சொல்லத் தோன்றும் வகையில், நீங்கள் சொல்வதுநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: உள்ளாட்சி தேர்தலில், எங்கள் ஓட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. 'நோட்டோ'வுடன் நாங்கள் போட்டியிடுகிறோம் என, காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது. தனித்து நின்று, நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால், காங்கிரஸ், திராவிட கட்சிகள் மீது, 40 ஆண்டுகளாக சவாரி செய்தும், எங்கள் அளவுக்குக் கூட ஓட்டுகள் பெறவில்லையே!

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    \\தமிழ் பேசத் தெரிந்த, அதே சமயத்தில், தமிழ் படிக்கத் தெரியாத சமூகம் உருவாகி விடுமோ...\\ என்னது, தமிழ் பேசத் தெரிந்த சமூகமா? "ழ" னவுக்கு "ல" னவும், "ல" னவுக்கு "ள" னவும் (பேச்சில்) பயன்படுத்தும் சமூகமய்யா இது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement