Advertisement

தமிழக பா.ஜ.,வுக்கு தினமும் ஒரு தலைவர்!

''நன்கொடை கேட்டு மிரட்டுறாங்களாம் பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''என்னன்னு, விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள், அடுத்த மாசம் வருது... இதனால, ஏழைகளுக்கு அன்னதானம், நல திட்டங்கள் கொடுக்குறோம்ன்னு சொல்லி, தென் சென்னை மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள், வசூலில் இறங்கியிருக்காங்க பா...''சென்னை, தி.நகர்ல இருக்கிற ஜவுளி, நகை, பாத்திர கடைகள், ஓட்டல் வியாபாரிகளை மிரட்டி, கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபடுறாங்க... ''யாராவது, தர முடியாதுன்னு சொன்னா, 'ஏரியாவுல தொழில் செய்ய முடியாது'ன்னு மிரட்டுறாங்களாம் பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.
''காலண்டருல, முதல்வர் படம் இல்லை; ஆனா, அமைச்சர் படம் இருக்குன்னு, பிரச்னைய கிளப்பறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.'
'ம்... மேல சொல்லுங்க...'' என, டீயை உறிஞ்சியபடியே கேட்டார், அந்தோணிசாமி
.''தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்புல, மாதாந்திர காலண்டர் அச்சடிச்சு, பொங்கல் விழாவுக்கு வந்தவாளுக்கு கொடுத்துருக்கா... ''அதுல, முன்னாள் முதல்வர், ஜெ., தற்போதைய முதல்வர், இ.பி.எஸ்., படங்கள் இல்லை... துறை அமைச்சர் துரைகண்ணு மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் படங்கள் மட்டும் இருக்காம் ஓய்...''அமைச்சர், தன் படத்தை மட்டும் போட்டுருக்காருன்னு, முதல்வர்கிட்ட எதிர் கோஷ்டியினர் பத்தவச்சுட்டாளாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.'

'ரொம்ப இழுத்தடிச்சா, இப்படித் தான் நடக்குமுங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன வே, சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''கடந்த, 17ம் தேதி, தமிழக பா.ஜ., தலைவராக, நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக தேர்வு செஞ்சிருக்காங்கன்னு, நாமக்கல், பா.ஜ., நிர்வாகி ஒருத்தர், 'டுவிட்டர்' பக்கத்துல பதிவு செஞ்சாருங்க...''அதைப் பார்த்த, பா.ஜ.,வினர், அது உண்மையான்னு, ஆளாளுக்கு போன் போட்டு விசாரிச்சுருக்காங்க... சிரிப்பு நடிகரு, எஸ்.வி.சேகர், தன் டுவிட்டர் பக்கத்துல, எச்.ராஜா தான், மாநில தலைவர்ன்னு பதிவு போட்டாருங்க...''உடனே, தேசிய இளைஞரணி துணைத் தலைவர் முருகானந்தம், மாநில துணை தலைவர் குப்புராம் பெயர்களை, அவங்களோட ஆதரவாளர்களும், டுவிட்டர் பக்கத்துல பதிவு செஞ்சு, காமெடி பண்ணிட்டாங்க...

''அப்புறமா, இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடலைன்னு, டில்லி மேலிடம் தெரிவிச்சுருக்கு... காலாகாலத்துல தலைவரை அறிவிச்சுருந்தா, இப்படி நடக்குமாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Aaaaa - Bbbbbb,இந்தியா

    இப்போதுதான் பா.ஜ.க வில் யார் யார் உள்ளார்கள் என்பது தெரியவருகிறது

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இன்னும் ஒரு பத்துப்பேரையாவது ‘தலைவர்/ தலைவி’ ஆக்கிய பிறகுதான் OFFICIAL தலைவர் பெயர் வெளி வரும் அதுவரை Twitter , WhatsApp is ஆளாளுக்கு விளையாடிக் கொண்டிருக்கட்டுமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement