Advertisement

காங்., தொண்டர்களின்உணர்வைபிரதிபலிக்குமா?

Share

எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: காங்கிரஸ் மாநில தலைவர், மாவட்ட தலைவர்களை, தமிழ் தெரியாத வெளிமாநில மேலிட பார்வையாளர்கள் மதிப்பது இல்லை. நியாயமான முறையில் அமைக்கப்பட்ட வார்டு கமிட்டிகள் இருந்தால் தான், தோழமை கட்சிகள், காங்கிரசை மதிக்கும்.'இன்னோவா' கார், விமான விக்கெட், நட்சத்திர ஓட்டல், விளம்பரம் மட்டும் தெரிந்தோர் தான், காங்கிரஸ் நிர்வாகிகளாக இருக்கின்றனர்.
தமிழக ஊரக, உள்ளாட்சி தேர்தலில், போட்டியிட குறைந்த இடங்களே தி.மு.க., ஒதுக்கியதாக, காங்கிரசார் குமுறினர். மறைமுக தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் கூடுதல் இடங்கள் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட அளவில் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.ஆனால், தி.மு.க., தரப்பில், ஒரு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி கூட காங்கிரசுக்கு ஒதுக்கவில்லை. இதனால், காங்கிரஸ் நிர்வாகிகளும் விரக்தி அடைந்தனர். கட்சி மேலிடத்துக்கு, தங்கள் அதிருப்தியை புகார் மனுக்களாக அனுப்பி வைத்தனர்.தொடக்கத்தில் இருந்து, எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவிலேயே பேசி முடிப்பது என, தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும், தி.மு.க., தரப்பில் இருந்து கிடைக்கவில்லை. தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட, காங்கிரசுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ௩௦௩ ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில், இதுவரை, இரண்டு இடங்களை மட்டுமே, காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது, தி.மு.க.,'இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது என்பதை, தி.மு.க.,வுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்' என மாநில தலைவர் அழகிரி, கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ., இருவரும் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்; இவர்கள் புலம்பல் நியாயமானது தான்.தமிழகத்தில், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற, எட்டு காங்கிரஸ் எம்.பி.,க்களுக்கும், மாவட்டங்களை ஒதுக்கி, டில்லி நிலவரம், தேசிய அரசியல் தகவல்களை விளக்க வேண்டும்.அடிமட்ட காங்கிரஸ் தொண்டனுக்கு கட்சியில் அங்கீகாரம் இல்லை. உறுப்பினர் சேர்க்கை நியாயமாக நேர்மையாக நடத்தி, ஊராட்சி தலைவர், நகர தலைவர், ஒன்றிய தலைவர், மாவட்ட தலைவர், மாநில செயற்குழு, பதவிகளை நிரப்பினால், கட்சி அமைப்பு தொண்டர்களின் உணர்வை பிரதிபலிக்கும்.
சமூகத்தில் விபரீதம்ஏற்படுத்தி விடுமோ'பெப்பர் ஸ்பிரே!'சுப்பு.லட்சுமணன், மாவட்ட கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பெண்களின் தற்பாதுகாப்பு கருதி, ரயில் கோட்டத்தில் பணியாற்றும் பெண்களுள், 15 பேருக்கு, மத்திய அரசு, 'பெப்பர் ஸ்பிரே' வழங்கியுள்ளது.'பணியாற்றும் இடங்களில் ஏற்படும் இன்னல்களில் இருந்து, பெண்கள் தற்காத்துக் கொள்ள வழங்கப்பட்டுள்ளது' என, மத்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகம், இதற்கு விளக்கம் அளித்துள்ளது.அடுத்த சில நாட்களில், 'சேலம் ரயில் கோட்டத்தில் பணியாற்றும், 1,800 பெண் ஊழியர்களுக்கும், 'பெப்பர் ஸ்பிரே' எனப்படும் மிளகுத் துாள் தெளிப்பான் வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு, தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்க, இப்படி அவர்கள் பணியாற்றும் துறைகளில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த தெளிப்பானை பயன்படுத்தக் தக்க அறிவுரைகளை அரசு வழங்கியுள்ளது.பெண்களுள், மிகுசினம் உடையோராக இருப்பர், மிளகுத் துாள் தெளிப்பானை தவறாக பயன்படுத்தக் கூடும். இதை பயன்படுத்தினால், உயர் அலுவலர்களுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.எந்த சூழ்நிலையில், யாரிடம் பயன்படுத்தப்பட்டது என்பதை, எழுத்து வடிவில் பெண்கள் அளிக்க வேண்டும். இதை தவறாக பயன்படுத்தினால், தண்டனை வழங்கப்படும் என்ற விதியும் இடம் பெற வேண்டும். இல்லை என்றால், ஆண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடும்.அலுவலகத்தில் ஏற்படும் சிறு கருத்து வேறுபாடுகளுக்காக மிளகுத்துாள் பயன்படுத்தக்கூடாது.இவ்விஷயத்தில், பொறுமையுடையவர்களாகவும், சூழ்நிலையை ஆராய தக்கவர்களாகவும் பெண்கள் இருக்க வேண்டும். இந்த தெளிப்பானை துப்பாக்கியை எவ்வாறு பயன்படுத்துகிறோமோ, அதைப் போல் பயன்படுத்த வேண்டும். எனவே, இதை பயன்படுத்த விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.தவறாக பயன்படுத்தினால், உறுதியான சட்டப்படியான தண்டனை வழங்கப்படும் என, மத்திய அரசு, திட்டவட்டமாக தெரிவித்து, ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு சட்டமும், ஆணையும் பிறப்பித்த பின்னரே, மிளகுத் துாள் தெளிப்பான் வழங்க வேண்டும். இவ்வாறு செய்யாவிடின், ஆண்களின் பாதுகாப்பு தவறாகி விடும்.

ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட முடியுமா?
சி.இரா.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுத் துறை நிறுவனங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிரு நிறுவனங்கள் தவிர்த்து, ஏனைய அனைத்து நிறுவனங்களுமே நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, போக்குவரத்து துறையே, சிறந்த உதாரணமாக எடுத்துக் கூறலாம்.மாநிலம் முழுவதிலும், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில், அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன.தமக்கென சொந்தமாக எரிபொருள் நிரப்பும் வசதி, பணிமனை, இன்னும் ஏராளமான வசதி வாய்ப்புகளுடன் செயல்படுகின்றன. ஆனாலும், அரசு போக்குவரத்துக்கழகங்கள் ஆண்டுதோறும், நிதி இழப்பில் தள்ளாடி வருகின்றன.ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு, முறைப்படி நிலுவை தொகை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ஒரே ஒரு பஸ்சை இயக்கும் தனியார் ஒருவர், அரசு பஸ்களில் பயணியரிடம் வசூலிக்கப்படும் பயண கட்டணத்தை விட, குறைவான கட்டணத்தை வசூலிக்கிறார். அந்த ஒரே ஒரு பஸ்சை இயக்கி, லாபத்தில் நடத்தி, சாதனை படைக்கிறார்.அரசு பஸ்களை இயக்க, முறைபடுத்த ஏராளமான சாராம்சங்கள் இருக்கின்றன. அவை முழுமையாக, சுதந்திரமாக, நாணயமாக செயல்படுகின்றனவா என, ஆராய்ந்தால், நிர்வாகத்தில் ஊழல், மெத்தனப்போக்கு, கரை படிந்து கிடக்கிறது என்பது தான், விடையாக கிடைக்கிறது.புதிய பஸ்கள் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை வாங்குவதிலும், அதை இறுதி செய்வதிலும், தனியார் நிறுவனத்தில், தனி ஒருவரே முடிவெடுக்கிறார். அவர் எடுக்கும் முடிவில், அந்த நிறுவனத்தின் நிதி நிலையை நிர்ணயிக்கும் சக்தி உள்ளது.ஆனால், பொதுத்துறை நிறுவனங்களில், அவ்வாறு செயல்பட வழியில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் மீண்டும் பொலிவு பெற்று, எழ வேண்டுமானால், நிறுவனத்தின் முதன்மை அதிகாரி துவங்கி, பணிமனை துப்புரவு தொழிலாளி வரை, உண்மையாக பணியாற்ற வேண்டும்.அப்படி பணியாற்றுவாரானால், நிச்சயமாக போக்குவரத்து துறை லாபம் ஈட்டும் துறையாக மாறும் என்பதில், ஐயமில்லை.ஓர் அரசு துறை நிர்வாக திறமையை வழிகாட்டியாக, மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் பின்பற்றினால், ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்ட முடியும்.
தண்ணீருக்காகஉலகப் போர்மூளும் அபாயம்!சொ.செல்வராஜ், கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: உலக நீர்வள ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், '17 நாடுகள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இவற்றில், இந்தியா, 13வது இடத்தில் உள்ளது' என, தெரிவித்துள்ளது.'உலகில், இன்று, 220 கோடி பேருக்கு, குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லை' என, உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 'இந்தியாவில் ஆண்டுதோறும் பாதுகாப்பான குடிநீரின்றி, இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்; 60 கோடி பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, இந்திய தர நிர்ணய அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.பி.ஐ.எஸ்., எனப்படும், இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை படி, 'நாட்டில், 21 மாநிலங்களிலுள்ள பெருநகரங்களில் குடிநீர் இணைப்பு குழாய்கள் வாயிலாக வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பாக இல்லை' என, கூறியுள்ளது.இதற்காக, 11 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், மும்பையில் வழங்கப்படும் குடிநீர், தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், தலைநகர் டில்லியில், குடிநீரின் தரம், 11 சோதனைகளிலும் தோல்வியடைந்து, கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, லக்னோ, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், குடிநீரின் தரம் மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இதை, குடிநீர் வழங்கும் உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்வதே இல்லை.இப்படி தொடர்ந்து நடந்தால், இந்தியாவிலுள்ள, 21 நகரங்கள் அடுத்த ஆண்டு இறுதிக்குள், நிலத்தடி நீரே இல்லாமல், தட்டுப்பாட்டை எதிர்நோக்க வேண்டி இருக்கும்.இனி, கிடைக்கும் தண்ணீரை சேமிக்காமலும், சிக்கனத்தை கையாளாமலும், அலட்சியமாக இருந்தாலும், தண்ணீருக்காக உலகப் போர் மூளும் அபாயத்தை மறுப்பதற்கில்லை.மத்திய, மாநில அரசுகள், மக்களுக்கு தரமான குடிநீர் கிடைப்பதை, தலையாய பணியாக கருத வேண்டும்.
ஏட்டிக்கு போட்டிஅரசியல் கலாசாரம்கற்று தந்த பாடங்கள்!அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு முழுவதும் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலின் போதும், அதன் முடிவுகளுக்கு பின், கூட்டணி கட்சிகளுக்கிடையே சிற்சில மோதல்கள் உருவாவது வழக்கம்.பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு - ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ் இடையே பிரிவை உண்டாக்கியது. உ.பி., மாநிலத்தில், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி- - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இடையே பிரிவை ஏற்படுத்தியது.சமீபத்தில், மஹாராஷ்டிராவில், பா.ஜ., -- சிவசேனா இடையே பகைமையை ஏற்படுத்தி, மாற்று அரசியலுக்கு வழிவகுத்தது. எதிரும், புதிருமாக விளங்கிய, சிவசேனாவுடன், காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து, ஆட்சி புரிகின்றன.தமிழகத்தில், பா.ஜ., - காங்கிரஸ் தேசிய கட்சிகளுக்கு, முறையான அமைப்பும், பலமும், மக்கள் செல்வாக்கும் இல்லை; இது, பலமுறை நடந்து முடிந்த தேர்தல்கள் வாயிலாக தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.திராவிட கட்சிகள் மீது, இக்கட்சிகளும், இதர சிறு கட்சிகளும் சவாரி செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.திருச்சியில் நடந்த லோக்சபா தேர்தல் வெற்றி விழா பொதுக்கூட்டத்தில், 'எத்தனை காலம் தான், காங்கிரசை தோளில் துாக்கி செல்வது?' என, பகிரங்கமாக தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர், கே.என்.நேரு, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பின், 'பா.ஜ., தனித்து தேர்தலில் நின்று இருந்தால், இன்னும் நிறைய இடங்களில் வெற்றி பெற்று இருக்கும்' என, முன்னாள் மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அதைப் போல, காங்கிரஸ் மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி, தி.மு.க., மீது விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருப்பது, இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.இனியாவது, வருங்காலங்களில் பெரிய இயக்கங்களோடு, மோதல் போக்கை மாநில அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். அதே போல, கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் விவேகமற்ற விமர்சனங்களை, தேசிய கட்சி தலைவர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது, நடுநிலையாளர்களின் கருத்து.
புதுச்சேரி அரசியலில் நெருப்பில்லாமல் புகையாது!
எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'முதல்வர் நாராயணசாமியும், அவரது மகனும் நில அபகரிப்பு வழக்கில் சம்பந்தப் பட்டிருப்பதாக, அவரது கட்சியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., தனவேலு கூறி உள்ளார். அதற்கு உரிய ஆதாரத்தை தருவதாக கூறி உள்ளார்' என, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் மாளிகையில் இருந்து, பத்திரிகைச் செய்தியாக தரப்பட்டுள்ளது.இதில், எந்த இடத்திலாவது, முதல்வர் நாராயணசாமி நில அபகரிப்பில் ஈடுபட்டிருப்பதாக சொல்லவே இல்லை.அவரது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., கூறியிருக்கும் குற்றச்சாட்டை, 'பொது மக்களும் அறிந்து கொள்ளட்டும்' என்ற சீரிய நோக்கில், அதை பத்திரிகைகளுக்குச் செய்தியாகக் கொடுத்து, தனக்குரிய கடமையை, கிரண்பேடி நிறைவேற்றி இருக்கிறார்.அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து, ஆட்சியில் அமர வைப்பது, மக்களுக்கு நன்மை செய்வதற்கு தானே தவிர, தங்களுக்கும் நன்மை செய்து கொள்வதற்காக அல்ல.இத்தருணத்தில், 'எனக்கு எதிராக குற்றச்சாட்டை கூறி, பதவி விலகத் தயாரா? என, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டு இருக்கிறார்' என, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கேட்டு இருக்கிறார்.அதுமட்டுமின்றி, 'நானோ, என் மகனோ, நில அபகரிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதாக, ஆதாரபூர்வமாக நிரூபித்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்; குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், பொது வாழ்க்கையிலிருந்து கிரண்பேடி விலகத் தயாரா?' என, துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு சவால் விட்டிருக்கிறார்.முதல்வர் நாராயணசாமி, சில விஷயங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்...துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கிரண்பேடி, ஒரு காலத்தில், டில்லியில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றியவர்; நிர்வாகத்தில் கெட்டிக்காரர். திஹார் சிறையை சீர்திருத்தி, வரலாறு படைத்தவர்.அவரைப் பார்த்து, 'அவருக்கு நிர்வாகம் தெரியாது' என்று கூறுவது, முதல்வர் நாராயணசாமிக்கு அழகல்ல!அரசியல் நாகரிகம் துணை நிலை ஆளுநருக்கு உள்ளதா, முதல்வருக்கு உள்ளதா என்பதை, படிப்பவர்களே தெரிந்து தெளிவடையட்டும்.நெருப்பில்லாமல் புகையாது என, பெரியோர், வேடிக்கைக்காகவா கூறி இருக்கின்றனர். ஏதோ ஒரு வில்லங்கமும், விவகாரமும் அந்த நில அபகரிப்பில் ஒளிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement