Advertisement

டீ கடை பெஞ்ச்

கொட்டமடிக்கும் ரவுடிகள்; குறட்டை விடும் போலீசார்!



''கட்சியில மரியாதை குறைஞ்சிடுமோன்னு கவலைப்படுறாருங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''எந்தக் கட்சியில, யாருவே பயப்படுதா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''ஜெயலலிதா முதல்வராக இருந்தப்ப, ஐவர் குழுவுல ஒருத்தராகவும், அமைச்சராகவும் இருந்தவர், தஞ்சை, ஒரத்தநாட்டைச் சேர்ந்த வைத்திலிங்கம்... 2016 தேர்தல்ல தோத்துட்ட இவரை, ஜெயலலிதா, ராஜ்யசபா, எம்.பி.,யாக்கினாங்க...''இப்ப,அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரா இருக்காருங்க... உள்ளாட்சித் தேர்தல்ல, தஞ்சை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியையும், 14 ஒன்றியங்கள்ல, 12ஐ தி.மு.க., பிடிச்சிடுச்சு... பக்கத்துல இருக்கிற திருவாரூர், நாகை மாவட்டங்கள்லயும், பெரும்பாலான பதவிகளை, தி.மு.க.,வே பிடிச்சிடுச்சுங்க...''தன் மேல, தலைமைக்கு நம்பிக்கையும், மரியாதையும் குறைஞ்சிடுமோன்னு வைத்தி கவலைப்படுறாருங்க... இதனாலயே, அவருக்கு உடம்பு சரியில்லாம போய், சென்னைக்கு போய் சிகிச்சை எடுத்துட்டு வந்தார்னும் கட்சியினர் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''காலாற நடந்து காவிரியை ரசிச்சிருக்காரு பா...'' என, அடுத்த மேட்டரை கையில் எடுத்தார், அன்வர்பாய்.''யாரைச் சொல்றீர் ஓய்...'' என, விசாரித்தார் குப்பண்ணா.''போன வாரம், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, தமிழகத்துல ஒரு வாரம் சுற்றுப்பயணம் வந்தாருல்ல... திருச்சியில சில விழாக்கள்ல கலந்துக்கிட்டாரு பா...''ஒரு விழா முடிஞ்சு, தங்கியிருந்த இடத்துக்கு அவர் கார்ல போறப்ப, காவிரி பாலம் வந்திருக்கு... உடனே, காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கினவர், காவிரியின் அழகை ரசிச்சிருக்கார்... அப்படியே, பாலத்துலயே கொஞ்ச துாரம் நடந்து, காவிரியின் அழகை பார்த்துட்டு போயிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.''ரவுடிகள் கொட்டம் ஜாஸ்தியாயிண்டே போறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு சென்றார், குப்பண்ணா.''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கடலுார் மாவட்டத்துல தான்... இங்கே மொத்தம், 46 போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கு... இதுல, 31 ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில இருக்கு ஓய்...''இதுல, 15 பேர் பெண் இன்ஸ்பெக்டர்களா இருக்காங்க... இவா, ரவுடிகள் மேல கடும் நடவடிக்கை எடுக்காம அசால்டா இருக்கறதா புகார்கள் வரது... இதனால, மாவட்டம் முழுக்கவே, ரவுடிகள் கொட்டம் அதிகமாயிடுத்து ஓய்...''குறிப்பா, நெய்வேலியில, கொலை, கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமா நடக்கறது... சமீபத்துல, மத்திய போலீசாரையே முட்டி போட வச்சு, ரவுடி மிரட்டின வீடியோ வெளியாச்சு... இதனால, 'ரவுடிகள் மேல, தயவு தாட்சண்யம் பார்க்காம, கடும் நடவடிக்கை எடுக்கணும்'னு பொதுமக்கள் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.அரட்டை முடியவும், நண்பர்கள் நடையைக் கட்டினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement