Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் சொல்வதைப் பார்த்தால், துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றோர் தான், ஸ்டாலின் முதல்வராக தடையாக இருப்பது போல அல்லவா தெரிகிறது...' என, மடக்கும் வகையில், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி: ஸ்டாலின் தான், தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என, காங்கிரஸ் வேலை பார்க்கிறது. ஆனால் அவரின், தி.மு.க.,வில் உள்ள சிலர், அவர் முதல்வராகக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ளனர் என்பது, தற்போது தெரிய வருகிறது. அவருக்கு எதிராக, அவரது கட்சியிலேயே ஒரு கூட்டம் செயல்படுகிறது.



'தி.க., வீரமணி, தி.மு.க., ஸ்டாலின், நாம் தமிழர் சீமான், ம.தி.மு.க., வைகோ போன்றோர், திருக்குறளை நன்றாக படிக்க வேண்டும் என்கிறீர்களா...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: ஜாதி, மதம், இனம், மொழியை கடந்தவர் திருவள்ளுவர். அ.தி.மு.க.,வின் நிலைப்பாடும் அது தான். ஜாதி வெறி, மத வெறி, இனவெறி, மொழி வெறி பிடித்தவர்கள், திருக்குறளை படித்தால், வெறித்தனம் போய் விடும்.


'துரைமுருகன் கூறுவது உண்மை தான் என்பது, தமிழக மக்களின் ஏகோபித்த கருத்து. தமிழகத்தில், காங்கிரசுக்கு, ஓட்டு வங்கி எங்கே இருக்கிறது; சொல்லுங்கள் பார்ப்போம்...' என, கிடுக்கி போட வைக்கும் வகையில், சிவகங்கை தொகுதி, காங்கிரஸ் - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: 'தமிழகத்தில் காங்கிரசுக்கு ஓட்டு வங்கி இல்லை. அதனால், தி.மு.க., கூட்டணியை விட்டு அக்கட்சி விலக விரும்பினால் விலகிக் கொள்ளலாம்' என, தி.மு.க., பொருளாளர் துரை முருகன் கூறியுள்ளார். அவருக்கு இந்த ஞானம், அவர் மகன் போட்டியிட்ட வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலுக்கு முன், ஏன் வரவில்லை?


'சட்டசபை தேர்தலில், காங்கிரசை கழற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தானே, ஒன்றுக்கும் உதவாத பிரச்னையை வைத்து, தி.மு.க., பிரச்னை செய்கிறது என்ற பேச்சாக உள்ளது...' என, எடுத்துக் கொடுக்கும் வகையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி: தி.மு.க.,வும், காங்கிரசும், பழசை மறக்க வேண்டும். இரு கட்சிகளும் இணைந்திருந்தால் தான் கூட்டணிக்கு நல்லது. எனவே, மோதலை தவிர்த்து, இரு தலைவர்களும் பேசி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். 2021 சட்டசபை தேர்தலுக்கு, இரு கட்சிகளும் தயாராக வேண்டும்.


'ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, காளை மாடுகள் தான் முக்கியம். எனவே, காளைகளுக்கு சிலை வைத்தால் தான் சரியாக இருக்கும்...' என, கிண்டல் செய்யத் துாண்டும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி: தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி உரிமையை மீட்டெடுத்தது, எங்கள் கட்சி தான். ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்துவதால், தமிழர்களின் வீரத்தையும், கலாசாரத்தையும், அ.தி.மு.க., அரசு பாதுகாத்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடக்கும், அலங்காநல்லுார் அல்லது பாலமேட்டில், நினைவுத் துாண் அமைக்கப்படும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement