Advertisement

பஞ்சம் வராமல் தடுக்க வழிகள் இருக்கு!

வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: நீர் மேலாண்மை திட்டத்திற்கு, தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்தது, வாஸ்தவம் தான். 500 கோடி, 250 கோடி ரூபாய் என, ஏரி, குளங்களை துார்வாரும் பணிக்கு செலவிடப்பட்டன.தமிழக பொதுப்பணித்துறையும், பெயருக்கு துார்வாரி கணக்கு காட்டியது. ஆனால், சில தனியார் அமைப்புகள், அரசை எதிர்பாராமல், உண்மையாக துார்வாரி, தங்கள் பகுதிகளில் நீர் நிலைகளை பாதுகாத்தன. அதற்கு, 'தினமலர்' நாளிதழ் துாபம் போட்டது; அதற்காக, நாளிதழுக்கு நன்றி.
துார்வாரி நீரை சேமிக்கும் எண்ணம் வந்தது சரி தான். ஆனால், நாட்டிலுள்ள, ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் துார்வாரப்படவில்லை. அரசு துார் வாரியதாக கணக்கு காட்டியது, 49 சதவீதத்திற்கு மட்டுமே!கடந்தாண்டு, தமிழகத்தில் பருவமழை திருப்திகரமாக இல்லை. ஒரு புயலும் வரவில்லை; அடை மழையும் பெய்யவில்லை. தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்தது. வட மாவட்டங்களில், அவ்வளவாக பெய்யவில்லை.குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுப்புற நீர் நிலைகளில் கணிசமாக நீர் மட்டம் உயரவில்லை. புழல், செம்பரபாக்கம், சோழவரம், மதுராந்தகம் மற்றும் போரூர் ஏரிகளில் முழு அளவாக நிரம்பவில்லை.கோடைக் காலத்தில் ஏற்படப் போகும் நீர் பஞ்சத்தை போக்க, அரசு இன்னும் நிலத்தடி நீரை சேமிக்க வழி தேட வேண்டும்.
அதற்கு, கோடையில் வெப்ப சலன மழை கை கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம், சென்னையில் வீராணம் ஏரி, கிருஷ்ணா வாய்க்கால் நீர், இவற்றையாவது தொடர் முயற்சி செய்து வரவழைக்க வேண்டும்.தமிழக நீர் மேலாண்மை எண்ணம் விழிப்படைந்ததற்கு மகிழ்ச்சி. ஆனால், அது மட்டும் போதாது. இனி வரும் ஆண்டுகளிலாவது, நீர் நிலைகளை ஆழப்படுத்தி, ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க வேண்டும். அப்போது தான் விவசாயம் செழிக்கும்; நீர்ப்பஞ்சம் வராது!

தேன் கூட்டில்கை வைத்தகதையாகி விடுமே!
சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: பொதுத் துறை வங்கிகள் பலவற்றில், வாராக்கடன் அளவு அதிகரித்ததாலும், வங்கிகள் நஷ்டத்தில் இயங்கியதாலும், 27 பொதுத் துறை வங்கிகள், 12 ஆக குறைக்கப்பட்டுள்ளன.அதன்படி, பாங்க் ஆப் பரோடா, விஜயா பாங்க், தேனா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, சிண்டிகேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கிகள் போன்றவை பிற பொதுத் துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு பொதுத் துறை வங்கிகளின் லாபம், 1.60 லட்சம் கோடி ரூபாய். ஆனால், வாராக் கடன்களை சீர் செய்வதற்காக, பொதுத் துறை வங்கிகளின் இழப்புத் தொகை, 60 ஆயிரம் கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது.பொதுத் துறை வங்கிகளை வாராக் கடன் அதிகரிப்பில் இருந்து மீட்டெடுக்கவும், நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ஏதுவாகவும், சில அறிவுரைகளை மத்திய அரசு கூறியுள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கியில் உபரியாக இருப்பில் உள்ள, 1.45 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது.வாராக் கடன்களை குறைத்து, வங்கிகளை லாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவது தான், வங்கித் துறையை மேம்படுத்தும் ஒரே வழி; நஷ்டத்தைச் சந்திக்கும் வங்கிகளை, லாபம் ஈட்டும் வங்கிகளுடன் இணைப்பது சரியான தீர்வாகாது என, பொருளாதாரம் மற்றும் நிதித்துறை வல்லுனர்களும் கூறுகின்றனர்.பொதுத் துறை வங்கிகள் இணைப்பால், நாட்டின் பொருளாதாரத்துக்கும், மக்களுக்கும் அபாயம் ஏற்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பெரு முதலாளிகளுக்கு மட்டுமே, கடன் வழங்கும் சூழல் உருவாகும்.ஏழை, நடுத்தர மக்களுக்கு, வங்கிகள் கடன் தர முன் வராது. அதனால், ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் மூடப்படும். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என்ற முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வங்கி ஊழியர் கூட்டமைப்புகள் கூறுகின்றன.நஷ்டத்தில் தள்ளாடும் வங்கிகளை, லாபம் ஈட்டும் வங்கிகளுடன் இணைத்து, அவற்றுக்கு மேலும் நிதியுதவி அளிப்பது, எவ்வித பலனும் இல்லை. ரிசர்வ் வங்கியின் உபரி நிதியும், நெல்லுக்கு இறைத்த நீர் போல் வீணாகும் நிலை ஏற்படலாம்.மத்திய அரசு பல்வேறு துணிச்சல் மிக்க நடவடிக்கைகளை எடுத்தபோதும், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில், 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சி குறைந்தது. 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மை, வாராக் கடன், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இந்திய பொருளாதார நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.இத்தருணத்தில், வங்கிகள் இணைப்பு என்பது தேவையின்றி, 'தேன் கூட்டில் கை வைத்து விட்டதோ' அரசு என, எண்ணத் தோன்றுகிறது.
அரசியலில் பரபரப்பைஏற்படுத்தியவர்பி.எச்.பாண்டியன்!
டி.இ.அபிஷேக், சென்னையிலிருந்து எழுதுகிறார்: எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின், அவரது மனைவி ஜானகி அம்மாள் முதல்வராக இருந்த போது, 28 நாட்கள், அ.தி.மு.க., ஆட்சியை கலைத்த நேரத்தில், சபாநாயகராக இருந்தவர் பி.எச்.பாண்டியன்.'சட்டசபை சாவி என் கையில்; நீங்கள், எப்படி சட்டசபைக்குள் வருவீர்கள்... அதையும் பார்க்கிறேன்' என, ஜெயலலிதாவின், எம்.எல்.ஏ.,க்களை திணற வைத்தவர்.'தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால், மீண்டும் ஜானகி அம்மாளை முதல்வராக ஆக்குவேன். எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து, புதிய அமைச்சரவையை உருவாக்குவேன்' என, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கே கெடு விதித்தவர், பி.எச்.பாண்டியன்.கடந்த, 1988ல் கவர்னர் ஆட்சி நடந்தது. ஆக., 15ம் தேதி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, முதல்வர் இல்லாததால், கோட்டையில் கவர்னர், பி.சி.அலெக்சாண்டர் கொடியேற்றி வைக்க வேண்டும்; இது தான் மரபு.ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பி.எச்.பாண்டியன், 'முதல்வர் இல்லை என்றாலும், அவரது சார்பில், சட்டசபை உறுப்பினராகவும், சபாநாயகராகவும் உள்ள எனக்கு, அந்த அதிகாரம் உள்ளது' என, அதற்கு ஒரு விதியை தெரிவித்து, கோட்டையில், தேசியக் கொடியை ஏற்றினார். இந்தியாவில் இருந்த, அத்தனை சபாநாயகர்களும், பி.எச்.பாண்டியனை திரும்பிப் பார்த்தனர்.கடந்த, 1989ல், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சி தலைமைகள் நியமித்த, அத்தனை சபாநாயகர்களும் வானளாவிய அதிகாரம் பெற்றவர்களாக, சபையை நடத்தி வந்தனர்.தற்போதைய சபாநாயகராக இருக்கும், தனபால் கூட, 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறித்தது, பி.எச்.பாண்டியனால் எழுதப்பட்ட சட்டசபை விதி தான் என்பதை, யாரும் மறக்க முடியாது!

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    நண்பர் கலமைப்பித்தன் நீர்நிலை தூர் வாரும் பற்றி கூறாயிருந்தார்.நான் நாகை மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.தனிநபர்கள் வைத்திருக்கும் சொந்த நீர்நிலைகளை தூர்வார கி.நி.அ,வட்டாட்சியர் ஊராட்சியில் அனுமதி வாங்க வேண்டுமாம்.அதற்கு லஞ்சம் கொடுத்தால்தான் அனுமதிக்கு பரிந்துறைப்போம் என்று கூறுகிறார்களாம்.உண்மையான விவசாயி,பூமியில் நீர் மட்டம் பூமியில் ஏற வேண்டும் என்ற எண்ணத்தில் நினைப்பவர்களுக்கு அரசு அதிகாரிகள் படுத்தும் பிரச்சனைகள் சொல்லிக்க முடியாது.

  • Darmavan - Chennai,இந்தியா

    ஏன் நஷ்டம் ஏன் வாராக்கடன் என்று சொல்லாமல் அதை எப்படி தவிர்ப்பது என்றும் சொல்லாமல் இணைப்பதை நிறுத்த சொல்வது அர்த்தமற்றது/

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement