Advertisement

அரசியல் வாழ்வில் முதிர்ச்சியை ஏற்படுத்துங்கள்!

கே.ஜீவா, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த ஆண்டின் தமிழக சட்டசபை முதல் கூட்டம், கவர்னர் புரோஹித் உரையுடன் துவங்கியது. உரை நிறைவு பெறும் வரையிலாவது, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் அமர்ந்திருக்கலாம். கவர்னர் பேச துவங்கியதும், வெளிநடப்பு செய்தனர்.

மத்தியில் பெரும்பான்மை பலம் உள்ள பா.ஜ., அரசு, மத்திய அமைச்சரவையின் ஒருமித்த முடிவுக்கிணங்க எடுத்த முடிவே, குடியுரிமை திருத்த சட்டம். அதன் பின், ஜனாதிபதி ஒப்புதல் தந்த பின்னரே, குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 'இந்திய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு, என் ஜனநாயக கடமைகளை ஆற்றுவேன்' என, உறுதிமொழி ஏற்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார், தமிழக முதல்வர் இ.பி.எஸ்., அதன்படி, சட்டங்களை மதித்து நடக்கிறார்; இதில், தவறு ஏதும் இல்லையே!

தமிழக முதல்வர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்ட குறை தான் என்ன, போதாக்குறைக்கு, நீங்களும் தான், அவ்வாறு உறுதிமொழி எடுத்து, தற்போது, அதை மீறிக் கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் வெறும், தி.மு.க., தலைவர் மட்டுமல்ல; பெரும்பான்மை பலம் கொண்ட எதிர்க்கட்சி தலைவர். உங்களுக்கென்று, சில நடைமுறை உத்திகளை, வகுத்து, செயலாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளீர்கள். எண்ணற்ற அரசியல் வாதிகளில் ஒருவராக, உங்களை, நீங்களே தரம் தாழ்த்தி விடாதீர்கள்.

'இந்த சட்டத்தின் விளைவாக, நாட்டின் அமைதிக்கும், மதசார்பின்மைக்கும் குந்தகம் விளையும். சிறுபான்மை மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது' எனக் கூறுகிறார், ஸ்டாலின். மொத்தத்தில், இதிலிருந்து குடியுரிமை சட்டத்தின் சரத்துக்களை, நீங்கள் முழுமையாக படித்து தெளியவில்லை என தெரிகிறது. இனியாவது, அரசியல் வாழ்வில் முதிர்ச்சியை ஏற்படுத்தி, அதன் வாயிலாக, அரசியல் வாழ்வை ஸ்திரப்படுத்தி கொள்ளுங்கள், ஸ்டாலின்!

***

விமான பயண கனவை நனவாக்க முடியுமா?ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: ஏழை, எளிய மக்களுக்கு வேண்டுமானால், விமான பயணம் எட்டாக்கனியாக இருக்கலாம். ஆனால், ஓரளவு வசதி படைத்தோறும், இத்தகைய விரைவான விமான போக்குவரத்து வசதியை, அதிக கட்டணம் செலுத்தி, செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விமான சேவை நடத்தும் நிறுவனங்கள், பல காலங்களில் மிக அதிகமாக, இரண்டு அல்லது மூன்று மடங்கு பயண கட்டணத்தை வசூலிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. ரயில், பஸ் கட்டணங்களை, கி.மீ.,க்கு இவ்வளவு என, மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்து, வசூலிக்கின்றன. 'டிராய்' என்ற மத்திய அரசு அமைப்பு, மொபைல் போன், தொலைபேசி கட்டணங்களை நிர்ணயம் செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது. அதன்படி கட்டணங்கள் வசூல் செய்யும் நடைமுறை உள்ளது.

விமான பயணக் கட்டணங்களை, விமான கம்பெனிகள் தாங்களே இஷ்டப்படி நிர்ணயித்து, பல நேரங்களில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. வெளிநாடுகளில் விமான கட்டணங்களை, நம் நாட்டுக் கட்டணங்களோடு ஒப்பிடுகையில், எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தளவிற்கு நம் விமான கம்பெனிகளிடையே ஏற்றத்தாழ்வு இருக்கிறது. என்ன தான் பெட்ரோல் விலை மற்றும் பராமரிப்பு செலவை காரணம் காட்டினாலும், பல நேரங்களில், விமான கட்டணங்களும் விண்ணில் பறக்கின்றன.

நம் நாட்டை பொறுத்தவரை, பெரும் பணக்காரர்களும், இலவச பயணத்தை எப்போதும் அனுபவிக்கும் அரசு அதிகாரிகளும், கொழுத்த அரசியல்வாதிகளுமே மேற்கொள்ள முடியும் என்பது, எழுதாத சட்டமாக உள்ளது. இந்தியா போன்ற வளர்ந்த, அதிக மக்கள் தொகை உள்ள, ஒரு நாட்டுக்கு இத்தகைய நிலை உகந்தது அல்ல. நடுத்தர மக்களும் பயன்பெறும் வகையில், விமானக்கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது. இதைச் செய்யாமல், 'உதய்' திட்டம் வாயிலாக, உள்நாட்டில் மேலும் அதிகமான விமான நிலையங்களை திறப்பதன் மூலம் விமான போக்குவரத்து எளிமைப்படுத்த முடியாது.

பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர், இதுபற்றி தீவிரமாக யோசித்து, பரிசீலனை செய்வதன் வாயிலாக, நடுத்தர மக்களின் விமான பயணக் கனவை நனவாக்க நிச்சயம் முடியும். விமான பயணக் கட்டணங்களை, ஆகாய துாரத்துக்கு இவ்வளவு என, கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் கொண்ட மத்திய அரசு, ஓர் அமைப்பை நிறுவ முன் வர வேண்டும்!


***

ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களால் தமிழகம் செழிக்குமா?பொன்.கருணாநிதி, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: ஒவ்வொரு ஊராட்சிக்கும், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வழி வகைகளில் வருவாய் கிடைக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்ட நிதியும் ஊராட்சி வளர்ச்சிக்கென வழங்கப்படுகிறது. இனி, ஊராட்சியில் நடைபெறும், வரவு - செலவு விவரங்கள், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் வாசிக்கப்பட்டு, ஒப்புதல் பெற வேண்டும். கிராம சபை கூட்டம் என்பது, ஒரு மினி சட்டசபை போல் செயல்பட வேண்டும். ஒரு ஆண்டுக்கு, ஜன., 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்., 2 ஆகிய தேதிகளில், கட்டாயம் கிராம சபை கூட்டங்கள் நடைபெற வேண்டும்.

இந்த கூட்டங்களில், சமூக நலனில் அக்கறையுள்ள கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்று, அதை முறையாக வழிநடத்தினாலே, குற்றங்கள் பெருமளவு குறையும். இந்த வாய்ப்பை, நாட்டு நலனிலும், கிராம வளர்ச்சியிலும், அக்கறை உள்ளோர், முறையாக பயன்படுத்தினாலே, கிராமப்புற வளர்ச்சி சிறப்பாக இருக்கும். கிராமப்புறங்களில் நடைபெறும், 100 நாள் வேலை திட்டம் முறையாகவும், சரியாகவும் நடைபெறுகிறதா என்பதை, கண்காணிப்பது, ஒவ்வொரு சராசரி குடிமகனின் இன்றியமையாத கடமை; அதை, சரியாக செய்ய வேண்டும்.

மக்கள் விழிப்போடு இருந்து, கிராம சபைகளை முழுமையான பயன்படுத்தினாலே, ஊரக உள்ளாட்சி நிர்வாகம், ஊழலின்றி சிறப்பாக நடைபெறும். எனவே, உள்ளாட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்த, மக்களிடம் போதிய விழிப்புணர்வு மிகவும் அவசியம்! கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்ற நெல்லித்துறை கிராமம் போல், நம் ஊரும் மாற வேண்டும் என, தமிழக மக்கள் விரும்புகின்றனர். ஊரக உள்ளாட்சி பதவிகளை பெற்றவர்கள், தமது பணிகளை சிறப்பாக மேற்கொண்டால், தமிழகமே செழித்தொங்கும்!

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • karutthu - nainital,இந்தியா

    விமான பயணம் ஓரளவு நடைமுறை சத்தியம் தான் .முன்பு கோட் சூட் பூட்ஸ் அணிந்தவர்கள் விமானத்தில் பயணித்தார்கள் .ஆனால் இப்போ சாதாரண உடையுடன் காலில் செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பயணிக்கிறார்கள் ..என்ன மூன்று மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்தால் விமானப்பயணம் சாத்தியமே .அரசியல் கட்சி தலைவர்கள் ,எம் பிக்கள் தான் அடிக்கடி விமானத்தில் பயணிக்கிறார்கள் .ஆனால் உடனே பணம் கொடுப்பதில்லை .நிறைய பணம் பாக்கி வைப்பதால் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன .

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.ஜீவா அவர்கள் குறிப்பிட்டது போல தமிழ்நாட்டில் எதிர்கட்சி தனது பணியை சிறப்பாக சட்டமன்றத்தில் இருந்து பணியாற்றினால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்.

  • மோகன் -

    இந்த சுடலைக்கு புத்தி சுட்டு போட்டாலும் வராது. நீங்க என்னதான் கூறினாலும் அதை கேட்டு நடக்க மனம் வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement