Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: பா.ஜ., மாநில தலைவர் பதவி கிடைக்காத கோபத்தை, எங்கள் மீது, பொன்.ராதாகிருஷ்ணன் திருப்புகிறார். சட்டம் - ஒழுங்கு உட்பட, பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மத்திய அமைச்சராக இருந்த அவர், தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார்?

'டவுட்' தனபாலு: தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது என, கடந்த சில ஆண்டுகளாகவே அவர் கூறி வருகிறார். அதற்கு, 'விசாரித்து வருகிறோம்; பயங்கரவாதிகளை ஒடுக்குவோம்' என, சொல்வதற்குப் பதில், அவரை சாடுவதா? சரி, நீங்களும் தான், ஒன்பது ஆண்டுகளாக அமைச்சராக உள்ளீர்கள்; என்ன சாதித்து விட்டீர்கள் என்ற, 'டவுட்' மக்களுக்கு ஏற்படுகிறதே; பதில் சொல்லுங்க!

***

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் போது, ஜாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள எண் போன்ற ஆதாரங்களை அளிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை கேட்டிருந்தது. ஆனால், அவை அவசியம் இல்லை.

'டவுட்' தனபாலு: எட்டாம் வகுப்பு வரை, தேர்வுகளில், மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற பொது விதி உள்ளது. ஆனால், நம் மாநிலத்தில் மட்டும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு வைத்துள்ளீர்கள். இதனால், மாணவர்களின் கற்கும் ஆர்வம் குறைந்து, வருகை குறைந்து விடாதோ; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

***

தமிழக காங்., தலைவர் அழகிரி: காங்., தலைவர் சோனியாவை சந்தித்து, உள்ளாட்சி தேர்தலில் காங்., பெற்ற வெற்றி குறித்து பேசினேன்; தமிழகத்தில், காங்., - தி.மு.க., கூட்டணி குறித்தும் பேசப்பட்டது. இரண்டு கட்சிகளும், இணைந்த கைகள்; பிரிவதற்கு வாய்ப்பே இல்லை.

'டவுட்' தனபாலு: தமிழகத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்படுபவர், உள்கட்சி கோஷ்டி மோதலால், அந்த பொறுப்பிலிருந்து விலக்கப்படுவார் அல்லது, கூட்டணி கட்சிகளை அனுசரித்துப் போகவில்லை என்ற புகாரின்படி நீக்கப்படுவார். எப்படியோ, உங்கள் தலைக்கு மேலே, கத்தி தொங்கிக் கொண்டிருப்பது, 'டவுட்' இல்லாமல் தெரிய வருகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement