Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் போற போக்கைப் பார்த்தால், உங்களிடம் கேட்டு தான், காலண்டர், 'ஷீட்'டில் தேதியை கிழிக்க வேண்டும் என்று கூட, போல இருக்கிறது; உங்களின் மத்திய அரசு எதிர்ப்பு, தமிழக மக்கள் மத்தியில், தி.மு.க., எதிர்ப்பாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என, 'அட்வைஸ்' கூற வைக்கும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், ஹிந்தி மொழி பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய, பார்லிமென்ட் ஆட்சி மொழிக் குழு, பொங்கல் திருநாளில், தமிழகம் வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, அந்த குழு, தன் ஆய்வை ரத்து செய்ய வேண்டும்; மத்திய அரசு ஊழியர்களை, பொங்கல் கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

'உண்மையான தமிழ் கவிதாயினியாகவும், பெரிய எழுத்தாளராகவும் வேண்டிய நீங்கள், கவர்னர் ஆகி விட்டீர்கள்; பாராட்டுகள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: புத்தகங்கள் வாங்கி படிப்பதை, வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்தப் பழக்கத்தை எனக்கு ஏற்படுத்தியவர், என் தந்தை குமரி அனந்தன். அவருக்கு, காந்தியச் சிந்தனை புத்தகங்கள் என்றால், மிகவும் பிடிக்கும். என் தாய்க்கு, இயற்கை வைத்திய நுால்கள் படிப்பதில் ஆர்வம்.

'உங்கள் அவசர அறிக்கை, 'காங்கிரசை, தி.மு.க., என்ன செய்தாலும், இனிமேல் தட்டிக் கேட்க மாட்டேன்; உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கேட்டதற்கு மன்னிப்பு...' என, சொல்வது போல அல்லவா இருக்கிறது...' என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை: மதவாத சக்திகளை எதிர்த்தும், அந்த சக்திகளின் கைப்பாவைகளாக செயல்படுபவர்களைக் கண்டித்தும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டிற்கு, தமிழக காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். தமிழகத்தின் பெருமையை மீட்டெடுக்க, காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.

'தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி இருக்கட்டும்; பா.ஜ., கூட்டணியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்...' என, அறிவுரை கூற வைக்கும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, இயற்கைக்கு மாறான கூட்டணி. அதனால், அந்தக் கூட்டணி, தானாகவே வீழும். தன் ஊழல்களை மறைக்கவும், கலவரத்தை துாண்டவும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டு, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பேசி வருகிறார்.

'உங்களைப் போன்றவர்கள் துாண்டி விடாமல் இருக்கும் வரை, தமிழகம், போர்க்கோலம் எல்லாம் பூணாமல், வழக்கம் போலத் தான் இருக்கும், இருக்கிறது...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: ஹிந்தித் திணிப்பை எதிர்த்து, போர்க்கோலம் பூணும் தமிழகத்தில் தான், ஹிந்தி மொழி பயன்பாடு குறித்து, ஆய்வு செய்ய, மத்திய குழு வருகிறது. பொங்கல் நாளில் வருவதை வைத்தே, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் நோக்கத்தை, தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement