Advertisement

குடியுரிமை திருத்த சட்டம் எதை தான் சொல்கிறது!

Share

ஆர்.ரவீந்திரன், கம்பம், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டில், தேவை இல்லாமல் குடியுரிமை பிரச்னையை கையில் எடுத்து, ரணகளமாக்குகின்றனர், எதிர்க்கட்சியினர். நாட்டை தர்ம சத்திரமாக மாற்றப் பார்க்கின்றனர். 'கடைத் தேங்காயை எடுத்து, வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது' போல செய்கின்றனர். எல்லையில், 'ஹவுஸ் புல்' போர்டு போட வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது; வருவோரை வரவேற்கும் நிலையில், நாம் இல்லை.

பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரிலிருந்து வருவோரால், காங்கிரசுக்கு சாதகமாகவே இருக்கும். இலங்கை வாழ் தமிழர்கள் முழுவதும், இந்தியா வந்தால், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட்டுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் எதிரான அரசியல் செய்ய முடியாமல், திணறிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள், இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டுள்ளன.

காங்கிரஸ், தி.மு.க., போன்ற எதிர்க்கட்சியினரைப் பொறுத்தவரை, மத ரீதியாக ஒற்றுமையாக இருந்து விடக் கூடாது. மக்கள் வறுமையில் இருக்க வேண்டும். வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, போராட்டம் நடத்தி, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்த வேண்டும். மக்களுக்கு முடிந்த அளவு கெட்டது நடக்க வேண்டும்; இது தான், எதிர்க்கட்சியினரின் அணுகுமுறை. நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு, நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சிந்திக்க வேண்டும்; வெளிநாட்டவரின் வாழ்க்கைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை.

சட்ட விரோதமாக குடியேறியோரை, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். குடியுரிமைச் சட்ட திருத்தத்தை கடுமையாக்க வேண்டும். அதை விடுத்து, தளர்த்தி எளிமையாக்கக் கூடாது என, குடியுரிமை திருத்த சட்டம் சொல்கிறது!

***

போற்றுதலுக்குரிய பதவிகளாக மாற்றணும்!அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகம் முழுவதும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவுற்றது. கிராம ஊராட்சி தலைவர்களாகவும், கிராம ஊராட்சி உறுப்பினர்களாகவும், ஒன்றிய கவுன்சிலர்களாகவும், மாவட்ட கவுன்சிலர்களாகவும் தேர்வு பெற்றோர், பதவியேற்று உள்ளனர்.

ஊரக உள்ளாட்சி பதவிகள், அலங்கார பதவிகள் அல்ல; மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பதவி என்பதை, முதலில் அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நடுநிலையோடு, பாகுபாடின்றி பணியாற்ற, வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பாடுபட வேண்டும். குறிப்பாக, ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டோர், தத்தம் ஊராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து, அதை தீர்த்து வைக்க வேண்டும்.

அதேபோல, குப்பை தேங்காமல் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். இந்த, மூன்று பொறுப்புகளை சரி வர செய்தால், எதிர்காலத்தில் தொடர்ந்து, இதே போன்ற நல்ல வாய்ப்பை பெற முடியும். இந்த பொறுப்பை, எதிர்வரும், ஐந்து ஆண்டுகள் செய்ய வேண்டும் என, கவலைப்பட வேண்டாம். தினமும், தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கண்டறிந்து, உடனுக்குடன் தீர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நியாயமான மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, லோக்சபா எம்.பி., - எம்.எல்.ஏ., - கலெக்டர், ஊராட்சி ஒன்றிய ஆணையர், மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும், தொகுதி மேம்பாட்டு நிதியை பெற்று, மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஒவ்வோர் ஊராட்சியிலும், உறுப்பினர்களை நம்பி, அந்த ஊராட்சிக்குட்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் ஓட்டளித்து, தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகாத வண்ணம், தொடர்ந்து மக்களுடனேயே இருந்து, அவர்களின் தேவைகள் தெரிந்து, விரைந்து நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களாகிய நாமும், ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, நில வரி, குடிநீர் வரி போன்ற இதர வரிகளை உடனுக்குடன், நிலுவையும், காலதாமதமுமின்றியும் செலுத்தும் போது, அந்த ஊராட்சியில், நிதிப் பற்றாக்குறை ஏற்படாது. ஊராட்சிகளில் மக்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டால், ஆரோக்கியமான, சுகாதாரமான, தன்னிறைவு பெற்ற கிராமங்களை பெற முடியும்!


***

முயற்சி, பயிற்சி இருந்தால் ஆங்கில அறிவை பெறலாம்!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உதிரிப்பூக்கள் போன்றவை வார்த்தைகள். கட்டிய மாலை போன்றது, மொழி. உதிரிப்பூக்களை மாலையாக்க பயன்படுத்தப்படும் நார்கள் தான், இலக்கணம். கட்டடத்திற்கு அஸ்திவாரம் போல, மொழிக்கு இலக்கணம் மிகவும் அவசியம்.

வெறும் வார்த்தைகளை வைத்து, என்ன செய்வது! இத்தருணத்தில், தற்போது நடத்தப்பட்டு வரும் பேச்சு மொழி, பயிற்சி வகுப்புக்களை பற்றி கற்று தர வேண்டும். எந்த மொழிக்கும், முதலில் இலக்கணம் தெரிய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இன்றி, வெறும் வாக்கியங்கள் சொல்லி தந்தால் போதுமா? அதை அப்படியே மனப்பாடம் செய்து, பேச வேண்டியது தான். பயிற்சி வகுப்பில் படிப்போரிடம், யாராவது எதிர் கேள்வி கேட்டால், சமாளிக்க தெரியுமா என்பது, சந்தேகமே!

குறிப்பாக, ஆங்கில மொழி பேசக் கற்றுத் தரும், பயிற்சி பள்ளிகளின் வகுப்புகள் காளான்களாக முளைத்துள்ளன. அடிப்படை இலக்கணம் இன்றி, குதிரைக்கு, 'குர்ரம்' என்றால், யானைக்கு, 'யர்ரம்' என்பது போல, கற்றுத் தரப்படுகிறது. இலக்கணம் பற்றி மூச்சே இல்லை. 'முழுமையான மொழி பயிற்சி என்பது, வாசித்தல், எழுதுதல், இவற்றை விட உரையாடலில் தான் முழுமை பெறுகிறது' என்கிறார், ஆங்கில கட்டுரையாசிரியர் பிரான்சிஸ் பேக்கன்.

'அரசு பள்ளி மாணவர்களும், சரளமாக ஆங்கிலத்தில் பேச, 1,000 வார்த்தைகள் கற்றுக் கொடுக்கப்படும். இதன் வாயிலாக, ஆங்கில மொழித் திறன் மேம்படும்' என, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வார்த்தைகள் அவசியம் தான் என, அமைச்சர் சொல்வது போல, ஆயிரம் வார்த்தைகள் தெரிந்தவுடன், ஒரு மொழியின் பேச்சுத் திறன் வளருமா? ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியர் என்ற முறையில், நான், அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்...

மாணவர்களுக்கு வார்த்தைகளோடு, வாரத்திற்கு ஒரு நாள் கலந்துரையாட ஏற்பாடு செய்து கொடுங்கள். ஆசிரியரின் மேற்பார்வையில் நடக்கும், இந்த வகுப்புகள், உங்கள் ஆசை நிறைவேற வழி செய்யும். தமிழ் வழியில் படிப்பதால், ஆங்கில அறிவு குறையாது. ஆசிரியரின் முயற்சியும், மாணவர்களின் பயிற்சியும் இருந்தால், ஆயிரம் என்ன, அதில் பாதியை வைத்தபடியே சிறப்பை பெறலாம்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.அப்பர் சுந்தரம் மயிலாடுதுறை என்பதால் அவர் பகுதிக்கு அருகே இருக்கும் செம்பனார் கோவில் ஒன்றியம் செயல்பட்டு வருகிறது. அங்கு நடக்கும் கூத்தை அங்கு வாழும் சமுகத்தில் இருக்கும் வாசகர்கள் அனைவரும் அறிந்திருக்க கூடும் என்று நம்புகின்றேன். தான் ஒன்றிய கவுன்சிலராக தேர்வு பெற்றதால் ,அவர் வங்கி மேலாளரை அணுகி சொந்தமாக கார் வாங்க கடனுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதில் தனக்கு மாதம் இரண்டு லட்சம் வருமானம் கிடைக்கும் என்று கூறியிருந்தது உண்மையில் அதிர்ச்சிதான் அளித்தது. உண்மையில் ஒன்றிய கவுன்சிலருக்கு ஒன்றிய ஆணையரை விட சம்பளம் அதிகமாக குறிப்பிடப்பட்டு உள்ளதா என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்.இவர்கள் அரசு நிதியை மக்களுக்கு வெளி கொணர்வார்களா என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.பட்டாபிராமன் அவர்கள் கூறியது போல குடியுரிமை சட்டம் பற்றிய புரிதல் எனக்கே குழப்பமான சூழ்நிலை இருக்கின்றது. அதனை மத்திய அரசு சரிதான் தீர்வையும் மற்றும் புரிதலையும் கொடுப்பது அரசின் கடமையாகும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement