Advertisement

'டவுட்' தனபாலு

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு: சமீப காலமாக, 'ஹிந்து' என்ற சொல்லே, சிலருக்கு, ஒவ்வாமையாக இருக்கிறது. அத்தகைய கருத்தை கொண்டிருக்க, அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்காக, அவர்களின் நிலைப்பாட்டை நியாயம் என ஏற்க முடியாது.

'டவுட்' தனபாலு: ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தும் அந்த தலைவர்களின் வீட்டுப் பெண்கள், அவர்கள் பேச்சை கேட்பதில்லை. கோவில்களுக்கு சென்று வழிபடுவர்; ரகசிய பூஜைகள் மேற்கொள்வர். ஏன், வீட்டுக்குள் புகுந்து வெளியேற மறுத்த காக்காவை, சமீபத்தில் மறைந்த தலைவர் தான் என கருதி, விரட்டாமல் இருந்தவர்கள் தான், நம் திராவிடத் தலைவர்களின் வீட்டில் உள்ளோர். இப்போது, 'டவுட்' இல்லாமல் உங்களுக்கு புரிந்திருக்குமே, அவர்களின் ஹிந்து எதிர்ப்பு எவ்வளவு துாரம் என்று!

***

தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவுபடி, டில்லி, ஜே.என்.பல்கலைக்கழகத்திற்கு சென்று, தாக்குதலுக்கு ஆளான மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். தாக்கப்பட்ட மாணவர்களை, இந்த நிமிடம் வரை, அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தித்து, ஆறுதல் கூறவில்லை என்பது வேதனையாக இருக்கிறது.

'டவுட்' தனபாலு: இடதுசாரி சிந்தனையாளர்களின் கூடாரமாக மாறி, ஐந்து மாதங்களாக முடங்கிப் போயுள்ள அந்த பல்கலைக்கழகத்தில், இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே நடந்த தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளீர்கள்; பாராட்டுகள். அதே நேரம், குமரி மாவட்டம், களியக்காவிளையில், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, எஸ்.ஐ., குடும்பத்தினரை சந்தித்து, நீங்களோ அல்லது உங்கள் தந்தையோ அல்லது உங்கள் அத்தை கனிமொழியோ ஆறுதல் கூறாதது ஏன்; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!

***

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., கூட்டறிக்கை: கட்சியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது, செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் ஆலோசித்து நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து, கட்சியினர் தங்கள் சொந்த கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம்.
'டவுட்' தனபாலு: உள்கட்சி ஜனநாயகம் மிகுந்தது, அ.தி.மு.க., என்பது, பிற கட்சிகளில் பேசப்படும் விஷயம். அதையே தங்களின் சொந்த அரசியல் லாபத்திற்காக, கட்சியில் சிலர் பயன்படுத்த துவங்கியுள்ளனர் என்பதால் தான், இந்த கிடுக்கிப்பிடியோ? இந்த அறிவிப்புக்கு பின்னணியில், ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,சுக்கு அடுத்து, மூன்றாவதாக ஒரு தலைவரை உருவாக்க நீங்கள் விரும்பவில்லை என்பது மட்டும், 'டவுட்' இல்லாமல் தெரிகிறது!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement