Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'அ.தி.மு.க.,வுக்கு சமமாக, தி.மு.க., கூட்டணி, சரிபாதி வெற்றி பெற்றுள்ளதே; எனவே, நீங்கள் கூறும் புகாரில் உண்மை இல்லை...' என, நெத்தியடியாக கூற வைக்கும் வகையில், மாநில இந்திய கம்யூ., செயலர் முத்தரசன் அறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில், சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி, மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், என்ன செய்வது என்பதையும், மாநில தேர்தல் ஆணையம் சிந்திக்க மறந்து விட்டது.


'சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், 'போலீஸ் அராஜகம் ஒழிக' என, கோஷமிட்டு, மாநிலம் முழுக்க, பேரணி சென்று விடுவர் என்பதற்காகத் தான், இ.பி.எஸ்., அரசு பதுங்குவது போல தெரிகிறது...' என, சொல்ல வைக்கும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: குமரி மாவட்டத்தில், போலீஸ் எஸ்.ஐ., சுட்டுக் கொல்லப்பட்டது, தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் - ஒழுங்கை தமிழக அரசு இன்னும் கடுமையாக்கி, காவல் துறையின் சிறப்பான நடவடிக்கையை முடுக்கி விட வேண்டும்.

'இலங்கை தமிழர்களை பற்றி பேசும் பல தமிழக கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், 'செழிப்பாக' உள்ளனர்...' என, போட்டுக்கொடுக்க வைக்கும் வகையில், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் பேச்சு: இலங்கையில் வாழும் தமிழர்கள், பொருளாதாரத்தில் மேம்படவில்லை.

தமிழர்கள் வாழும் பகுதிக்கு, இலங்கை அரசு, நிதியை சரிவர வழங்குவதில்லை. புதிய அதிபர் கோத்தபயாவுக்கு, தமிழர்கள் ஓட்டளிக்காததால், தமிழர்களை பற்றி அவர் கண்டுகொள்ளவில்லை.

'அரசு மதுக்கடை ஊழியர்கள், யாரையும், கையை பிடித்து இழுத்து, குடிக்கச் செய்வதில்லையே; நாமாக பார்த்து தான் திருந்த வேண்டும்...' என, பதிலளிக்க வைக்கும் வகையில், தமிழக பா.ஜ., ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத் அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின், 'டாஸ்மாக்' மதுபான கடைகளில், மது விற்பனைக்கு, அந்த நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது, லட்சக்கணக்கான ஏழை தாய்மார்களின் கண்ணில் இருந்து கண்ணீரை வரவழைக்கிறது.

'இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும், இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்படுகின்றனர் என, சொல்லுங்களேன்...' என, எடுத்துக் கொடுக்க தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் வைகை வளவன் பேட்டி: ஜெ., மறைந்த போது, அ.தி.மு.க., அழிந்து விடும் என கருதியவர்கள், ஏமாற்றம் அடையும் வகையில், முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம், சிறப்பான நிர்வாகத்தை வழங்குகின்றனர். இதனால் தான், உள்ளாட்சி தேர்தலில், அமோக வெற்றி பெற்றுள்ளோம்.

'நீங்கள் நடித்த படங்களில் பல, சரியாக ஓடவில்லை. எனினும், 60 ஆண்டுகளாக திரையுலகில் சாதனை படைத்ததற்காக, விருது பெறவில்லையா; அது போலத் தான் இதுவும்...' என, மடக்கத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நடிகர் கமல் பேச்சு:தமிழகத்திற்கு அருகே உள்ள பல மாநிலங்கள், நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றன. ஆனால், தமிழகம் வெறும் விருதுகளை மட்டும் பெற்று, முன்னேறி விட்டதாக கூறுவதில் அர்த்தமில்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement