Advertisement

பொசுக்கியது போதும்

பொசுக்கியது போதும்,பொசுங்கியதும் போதும்
நெருப்பே ஆஸ்திரேலியாவை விட்டு விலகு
nsimg2454870nsimg
கடந்த மூன்று மாதங்களாக ஆஸ்திரேலியாவில் கொளுந்துவிட்டு எரியும் தீ பெய்த மழையால் தணிந்தது என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் முன்னிலும் வேகமாக பெருந்தீயாக உருவெடுத்திருக்கும் செய்தி நெஞ்சை பிழிகிறது அங்கு மிஞ்சியிருக்கும் அபூர்வ விலங்குகளின் நலம் கருதியாவது நெருப்பே விட்டு விலகு என்று கெஞ்சத்தோன்றுகிறது.
nsmimg744493nsmimg
அதிகம் ஊடகங்களில் அடிபடாமல் அமைதியாக வளமுடன் இருக்கும் உலகின் ஆறாவது பெரிய நாடான ஆஸ்திரேலியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு இருக்கிறது.
nsmimg744494nsmimg
நாட்டின் மொத்த ராணுவமும் எரியும் தீயை அணைப்பதில்தான் கவனம் செலுத்திவருகிறது.ெஹலிகாப்டர்கள் தீயை அணைக்க வானிலிருந்து நீரை ஊற்றிக்கொண்டே இருக்கின்றன மக்கள் தங்கள் வழக்கமான அனைத்து அலுவல்களையும் விட்டுவிட்டு கிடைத்த பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து தீ தங்கள் பக்கம் பராவாமல் தடுத்து வருகின்றனர், வீடுகளைவிட்டு கடற்கரை ஒரங்களில் தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.போலீசார் ராணுவத்தினருக்கு தீயனைப்பு வீரர்களுக்கு துணையாக இருக்கின்றனர் இருந்தும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை திடீரென பெய்த மழை காரணமாக கொஞ்சம் தீ கட்டுக்குள் வந்தது ஆனால் மழை நின்றதும் தீ மீண்டும் ஆரம்பித்துவிட்டது.
nsmimg744495nsmimg
கணக்கிலடங்கா மரங்களும் வீடுகளும் சொத்துக்களும் கருகியதைக்கூட அந்தநாட்டு அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எப்படியும் மீண்டு விடுவோம் இழந்ததை மீட்டுவிடுவோம் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு என்றே உண்டான கங்காரு,கோலா கரடி போன்ற விலங்குகள் கோடிக்கணக்கில் இறந்ததைத்தான் ஜீரணிக்முடியாமல் தவித்துவருகின்றனர்.

nsmimg744496nsmimg

பாட்லோவ் (Batlow) ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. நகரத்தையும் பாட்லோவையும் இணைக்கும் ஒரே ஆதாரமாக இருக்கும் நெடுஞ்சாலை வழியாகப் பயணித்த ஆஸ்திரேலியா ஊடகத்தைச் சேர்ந்த கிறிஸ் என்பவர் கேமராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் வானம் முழுவதும் அடர்ந்த புகைமூட்டத்துடன் உள்ளது, கீழே தரையில் நூற்றுக்கணக்கான கறுப்பு நிற கருகிய உடல்கள் கிடக்கின்றன. அவை அனைத்தும் கங்காரு, கோலா கரடிகள் மற்றும் செம்மறி ஆடுகளின் உடல்கள். காட்டுத் தீயின் கோரத்திலிருந்து தப்பிக்க முடியாமல் இவை சாலை வரை வந்து உயிரிழந்துள்ளன.

''தீயால் அழிந்துவரும் பாட்லோவ் நகரம் தற்போது இருக்கும் நிலையை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை. அங்கு நான் பார்த்த காட்சி இதயத்தை நொறுக்கும் விதமாக இருந்தது. அங்கு எடுத்த புகைப்படங்களைப் பகிர்வதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், அங்கு நடப்பதைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் இந்தச் சம்பவத்தை உலகம் நிச்சயம் அறிய வேண்டும்” என புகைப்படங்களை பதிவிட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஆஸ்திரேலியா காட்டுத்தீ தொடர்பாகவும் கோலாக்கள் தொடர்பாகவும் வெளியான வீடியோ, புகைப்படங்கள் போன்றவை மொத்த உலகத்தையும் உறையவைத்துள்ளன.

ஒரு கங்காரு விரட்டிவரும் தீயின் வேகத்திற்கு ஈடு கொடுத்து தாவிக்குதித்து குதித்து தப்பி ஒடிவந்து கடைசியில் ஒரு வேலியில் சிக்கிக்கொள்கிறது அதற்கு மேல் அந்த கங்காருவால் ஒடவும் முடியவில்லை தீக்கு பயந்து ஒளிந்து கொள்ளவும் முடியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக தீயின் நாக்குகளுக்கு இரையாகி எரிந்து கருகி ஆஸ்திரேலியாவில் பரவிவரும் காட்டுத்தீக்கு கொடும் சாட்சியாக நிற்கிறது யாராவது தொட்டாலோ அல்லது காற்று பலமாக வீசினாலோ எரிந்த அந்த கங்காரு சாம்பாலாக உதிர்ந்துவிடும்.

இதே போல எரியும் தீயில் இருந்து தப்ப தனது குழந்தைகளுடன் தாவிக்குதித்து ஒடிவரும் தாய் கங்காரு தப்பிப்பதாக நினைத்து மீண்டும் தீ வளையத்திற்குள்ளேயே சிக்கி துடிதுடித்து இறக்கிறது.சூடு பொறுக்க முடியாமல் கோலாகரடி ஒன்று தீயில் குதித்து குதித்து கடைசியில் அந்த தீக்கே இரையாகிறது.

கோலாகரடி பொதுவாக அங்குள்ள யூகலிப்ட்ஸ் இலைகளில் உறைந்திருக்கும் நீரையே தனது தாகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் ஆனால் யூகலிப்ட்ஸ் மரங்கள் எரிந்து போன நிலையில் தவித்துப் போய் மனிதர்கள் பாட்டிலில் கொடுக்கும் தண்ணீரை தவிப்புடன் பருகும் காட்சி இதயம் உள்ளவர்களை பதைபதைக்கவைக்கும்.

தப்பிப் பிழைத்த விலங்குகளின் நிலமையும் கவலைக்கிடம்தான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.இதற்கான வாழ்விடம் வேறு இல்லை இவைகள் தற்காலிகமாக உயிர்பிழைத்துள்ளன என்றாலும் தொடர்ந்து பிழைப்பது கடினம் என்றே பல்லுயிர் வல்லுனர் குறிப்பிடுகின்றனர்.

கங்காரு கோலாகரடி மட்டுமின்றி கணக்கற்ற பறவை இனங்களும் பூச்சி இனங்களும் கூட சாம்பலாகியுள்ளது உலகில் எங்கும் இல்லாத அபூர்வ பூச்சி இனங்களின் 75 சதவீதம் ஆஸ்திரேலியா காடுகளில் இருப்பதால் எப்போதும் இங்கு ஆராய்ச்சியாளர்கள் குவிந்திருப்பர் ஆனால் அந்த அபூர்வ பூச்சியினங்கள் இனி அழிந்த பூச்சியினங்களாகிவிடும் என்று கவலை கொள்கின்றனர்.

ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 50 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அடிப்படையாக கொண்டே இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது காட்டுத்தீ நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்திலிருந்து அருகிலுள்ள விக்டோரியா மாகாணத்திற்கும் பரவிவிட்டது.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்துவரும் காட்டுத் தீயால் அப்பகுதி வானம் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறமாக மாறி காட்சியளிக்கிறது.மூன்று மாதங்களைக் கடந்து தற்போதும் விடாமல் எரிந்துகொண்டே உள்ளது. வானிலை வறட்சியடைந்து, காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காட்டுத்தீ கட்டுக்கடங்கவில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எங்கெங்கு காணினும் தீ பிழம்புகள், உயிரை பிடித்துக்கொண்டு தப்பிக்கும் உயிரினங்கள், தாகத்துக்காக ஏக்கத்துடன் மனிதனை எதிர்நோக்கும் கோலா கரடிகள், குட்டிகளை தன் பையில் பத்திரப்படுத்தி தாவி குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கங்காருகள் என்று அதிகரித்துவரும் விலங்குளின் ஒலம் ஒயவேண்டும்

ஆஸ்திரேலியாவிற்காக பிரார்த்திப்போம் (Pray for Australia) என்று உலகம் முழுவதும் வலம் வரும் வார்த்தைக்கு வலு சேர்ப்போம்.

-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement