Advertisement

நல்ல சமயமிது; நழுவ விடலாமோ?

அ றிவியல் பற்றி, நல்ல செய்திகளைப் பெரியோர், எப்போதும் போல, இப்போதும் சொல்லியுள்ளனர். பிரதமர் மோடி, 'உலக அளவில் இந்தியா, அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதில் மூன்றாம் இடத்தில் உள்ளது' என, பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதற்கு, முதுபெரும் அறிவியலறிஞர், சி.என்.ஆர்.ராவ், 'ஆம், பெரும் எண்ணிக்கை தான்... ஆனால் அவற்றில், 2-3 சதவீதம் மட்டுமே தகுதியானவை' என, ஆதங்கப்பட்டுள்ளார்.விளக்கம் தேவையில்லைஇன்னொரு வல்லுனர், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, 'கடந்த, 30 ஆண்டு களில் இந்தியாவிலிருந்து, 15 லட்சம் ஆய்வுக்கட்டுரைகளும், வியட்நாம் நாட்டிலிருந்து, 50 ஆயிரம் கட்டுரைகளும் வந்துள்ளன. 'எனினும், சிறு எண்ணிக்கை கட்டுரைகள் விளக்கொளியாகவும், பெரு எண்ணிக்கை கட்டுரைகள், பஞ்சுப் பொதியாகவும் உள்ளன' என்றார்.

இதை புரிந்து கொள்வதற்கு விளக்கங்கள் தேவையில்லை; விரிவாக்கம் இருக்கிறது. அறிவாக்கம் இல்லை - இது தான், அந்த வல்லுனர்கள் செய்திகளின் ஆத்மா.எனக்கு, இந்தியக் கவலை, இல்லையென்று சொல்ல முடியாது; பெரிதாகவே இருக்கிறது. தமிழகக் கவலை, அதை விட, இம்மியளவு கூடுதலாக இருக்கிறது. அந்தக் கூடுதலுக்குக் காரணம் உண்டு.நம் நாட்டில், அறிவியல் சாதனைப் பெருமைகள் என்பதை, இந்திய நேஷனல் சயின்ஸ் அகாடமி, டில்லி; இந்தியன் அகாடமி ஆப் சயின்ஸ், பெங்களூரு, தி நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ், அலகாபாத் என்ற, மூன்று அறிவியல் கழகங்களில், உறுப்பினர் ஆவதையும், 'பட்நாகர் விருது' என்ற உயரிய விருதைப் பெறுவதையுமே, ஆய்வாளர்கள் விரும்புகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும், இந்த அறிவியல் கழகங்கள் ஒவ்வொன்றிலும், 2,5-30 ஆய்வாளர்கள், உறுப்பினர் பெருமையையும், 45 வயதுக்கு உட்பட்ட, 7-10 ஆய்வாளர்கள், பட்நாகர் விருதையும் பெறுகின்றனர்.இவர்கள் எல்லாம், உலக அளவில், பின்னாளில் இன்னும் உயரிய அங்கீகாரங்களையும், 'நோபல்' பரிசுகளையும் பெற்றனரா, பெறுவரா என்பது வேறு திசைக் கேள்வி. அது இருக்கட்டும். நம் ஆர்வம், ஆதங்கம், தமிழக ஆய்வாளர்கள், இந்திய எல்லைக்குள்ளாவது தலை காட்டுகின்றனரா என்பது தான்!தமிழகத்தில், மத்திய மற்றும் நிகர்நிலைகளையும் சேர்த்து, ஏறக்குறைய, 50 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

வேறு தகுதிகள்
இவற்றிலிருந்து, கடந்த பல ஆண்டுகளில் ஓரிருவர் என்ற எண்ணிக்கையில் கூட, எந்த ஓர் அறிவியல் கழகத்திலும் உறுப்பினர்கள் ஆனதில்லை; எவரும், பட்நாகர் விருதை யோ, பத்மஸ்ரீ விருதை யோ பெற்றதில்லை.ஓரிருவர் பெற்றிருந்தாலும், அவர்கள் ஆய்வாளர்கள் இல்லை. இந்த பெருமை பெற்றவர்களில் ஒருவர் கூட, நம் பல்கலைக்கழகங்களில் இல்லை.அதற்காக, நம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆராய்ச்சிகள் செய்யாமலும், கட்டுரைகள் வடிக்காமலும், துாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்ல முடியாது. தங்கள் பதவிகள், கீழிருந்து சட்டென்று மேலே போவதற்குத் தேவையான, இரண்டொரு எண்ணிக்கைகள் மட்டும் கிடைக்க, கட்டுரைகள் படைக்கின்றனர்.அதற்கு மேல் அவர்களால் போக முடியவில்லை; போக வேண்டியதில்லை. தரமான ஆய்வுக் குறியீடுகள், பதவி உயர்வுக்குத் தேவையில்லை; சில எண்ணிக்கைகள் மட்டும் போதும். வேண்டிய பதவி உயர்வு கிடைத்ததும் ஆய்வுப் பணியைப் புறந்தள்ளி விட்டு, அலுவலகப் பணி கிடைக்கிறது; போய் விடுகின்றனர்.பேராசிரியர்களைப் பணியில் அமர்த்தி விட்டு, பிறகு அவர்கள் தரம் பற்றிக் குறை சொல்லுவதில் பொருளில்லை. 'உங்கள் தலையாய பணி ஆய்வு தான்' என்று சொல்லும் பல்கலைக்கழகத் தலைமைகள் இல்லை; அப்படிப்பட்டோர் தலைமைக்கு வருவதில்லை.

பல்கலைக்கழகங்களில் தலைமைப் பதவி யிலிருந்து, ஆசிரியப் பணிகள் வரை, தரம் முன் நிறுத்தப் படாமல், 'வேறு தகுதிகள்' முந்திக்கொள்கின்றன. ஒருவர், இரண்டு பல்கலைக்கழகங்களில், தன் தலைமைக் காலங்களில், இரண்டொரு ஆசிரியர்களைக் கூட நியமிக்க முடியவில்லை.இன்னொரு தலைமையால், குறுகிய காலத்தில், 200-க்கும் மேலான ஆசிரியர்களை நியமிக்க முடிந்தது; காரணம், சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கடந்த சில ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், 'மூவரில் இவர் தேவலாம்...' என்ற பார்வையில், நியமனம் பெற்றதாகக் கிடைத்துள்ள செய்தி, சிறிது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆனாலும், 'மூவரும், ஒருவருக்கொருவர் தரத்தில் முந்தி நின்றனர்'- என்று சொல்லி, கவர்னர் பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான செய்தி கிடைக்கவில்லை.தலையாய சிந்தனைவெறும் எண்ணிக்கைகள் முன் நிறுத்தப்பட்டு, தரம் பின்னுக்குத் தள்ளப்படும் வகையிலிருக்கும் சட்ட திட்டங்கள், திருத்தப் படவேண்டும். தமிழக அரசும், கவர்னரும் இதற்கு வழிவகுக்க வேண்டும்.உலக அளவிலும், இந்திய அளவிலும் தரவரிசைப் பட்டியல்களில், தமிழகப் பல்கலைக்கழகங்கள் இடம்பெறாமல் போவதற்கு, தலையாய காரணங்கள், அவை எவற்றிலும், உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும், பல்துறை ஆசிரியர்கள் இணைந்து, மாணவர்களுக்குப் பயன் தரும் பாடத் திட்டங்களைச் செயல்படுத்தாததும் தான்.

மேலும், தேவைக்கேற்ற உயராய்வுச் சிறப்புகள் இல்லாததையும் குறிப்பிடலாம்.எப்போது இந்தக் குறைகள் சரி செய்யப்படும் என்ற ஏக்கம், நம் இதயங்களில் குத்துாசி போல் குத்திக் கொண்டிருக்கிறது. இப்போதைய தலையாய சிந்தனை இது தான்:'தமிழகப் பல்கலைக்கழகங்களில், 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்' என்ற செய்தியும், அதையொட்டிய ஏக்கமும் தான்.மூத்த பல்கலைக்கழகங்கள் இப்போது, ஆசிரியப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரி கொண்டிருக்கின்றன.

'இதைத் தான் கொடுப்போம்' என்ற நிலையிலும், 'கிடைத்ததில் தரம் மிக்கது இது தான்' என்ற பார்வையிலும், நியமனங்கள் நடைபெறுமா, இல்லை, 'கிடைப்பவை தரத்தில் ஒன்றுக்கொன்று மீறும் வகையில் இருக்க வேண்டும்' என்ற நோக்கில் நடைபெறுமா?சமூக நீதிக்கு ஊறு விளைவிக்காமல், தரம் மட்டும் முன் நிறுத்தப்பட்டு, விருப்பு-, வெறுப்பின்றி அந்தத் தரத்துக்காக, உலகத் தேடுதல் நடைபெறுமா? தமிழகத்தை உயர்த்திப் பிடிக்க ஏங்கும் நெஞ்சங்களில் இந்த ஆவல் ஆணிவேராய்ப் பதிந்திருப்பதில் தவறில்லையே!இப்போதைக்குத் தேர்வாகும், 1,000 பேரும், 'என் தரத்தால் இடம் பிடித்தேன்' என்றும், 'உலகு தழுவி நாங்கள் தரத்தைத் தேடியுள்ளோம்' என்று அரசும், பல்கலைக்கழக ஆட்சிக்குழுக்களும், கவர்னரும் பெருமை கொள்ள வேண்டும்.ஆய்வுக் கதவுகள்'நல்ல சமயமிது, நழுவ விடுவோமோ...' என்ற துடிப்பு, அவர் தம் நெஞ்சங்களில் படர வேண்டும்.

இந்த, ஆயிரம் ஆய்வுக் கதவுகள் திறக்கப்பட்டால், அதிகபட்சம், 15 ஆண்டுகளில், தமிழகப் பல்கலைக்கழகங்களின் வளாகங்களில், இந்திய அறிவியல் கழகங்களின் உறுப்பினர்களும், பட்நாகர் விருதாளிகளும், பத்ம விருதாளிகளும் உலாவிக் கொண்டிருப்பர்.பின், தரமற்றவர்கள் ஆசிரியர்களாக நுழைய மாட்டார்கள். எந்தத் தரவரிசைப் பட்டியலிலும், தலைநிமிர்த்துப் பார்க்குமளவுக்கு நம் பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்திருக்கும். யாரென்று நான் யாரையும் குறிப்பிட்டு மறுபடியும் சொல்ல வேண்டியதில்லை. நல்ல சமயமிது, நழுவ விடலாமோ?

தொடர்புக்கு:இ - மெயில்: ponnu.pk@gmail.comமொபைல் போன் எண்: 95002 89552பி.கே.பொன்னுசாமிசென்னை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement