Advertisement

மக்களின் மனங்களை புரிந்தவர்களுக்கே மணி மகுடம்!

ஐரோப்பியாவில் உள்ள பிரிட்டன் நாட்டில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான, 'கன்சர்வேடிவ்' கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்றுள்ளது, எண்ணற்ற கேள்விகளை உலக அளவில் எழுப்பியுள்ளது.இந்த வெற்றியை எப்படி புரிந்துகொள்வது...

பிரிட்டனில், கன்சர்வேடிவ் கட்சியும், தொழிலாளர் கட்சியும், இரண்டு பெரிய கட்சிகள்.
இடது சாரி சிந்தனை மரபை உடையது, தொழிலாளர் கட்சி. ஆலை தொழிலாளர்கள், உழைப்பாளர்கள் என அனைவரும், இக்கட்சிக்கு ஓட்டளிப்பர். இவர்கள் ஏராளமாக நிறைந்திருக்கும் பகுதிகளில், தொழிலாளர் கட்சி வேட்பாளர்களே, எம்.பி.,க்களாக தேர்வு பெறுவர்.

ஆதரவு தருவர்அதே நேரத்தில், கன்சர்வேடிவ் கட்சி, பணக்காரர்களின் கட்சி என சொல்லப்படுகிறது. தொழிலக முதலாளிகள் உட்பட, செல்வந்தர்கள் இக்கட்சிக்கு ஆதரவு தருவர்.இவர்கள் அதிகமுள்ள பகுதிகளில், கன்சர்வேடிவ் கட்சி, எம்.பி.,க்கள் வெற்றி பெறுவர். இந்தப் பின்னணியோடு, 2019 பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலை பார்ப்போம். பிரிட்டனில், மிக முக்கியமான பிரச்னை, 'பிரெக்ஸிட்' என்பது.

அதாவது, இத்தனை ஆண்டுகளாக, பிரிட்டன் நாடு, ஐரோப்பிய யூனியன் என்ற பல ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வருகிறது. அதனால், பிரிட்டன் மக்களிடையே, ஒரு வித அதிருப்தியும், வெறுப்பும் வளர்ந்துள்ளது. அதாவது, ஐரோப்பிய யூனியனில் இடம் பெற்றுள்ள, இதர நாடுகளில் இருந்து வருவோரே, பிரிட்டனில் வேலைவாய்ப்புகளை அபகரிக்கின்றனர்; வளம் பெறுகின்றனர்.


தங்கள் நாட்டினரின் உண்மையான மதிப்பு, உலக அரங்கில் தெரியாமல் உள்ளது; 'பவுண்ட் ஸ்டெர்லிங்' பண மதிப்பு சரிந்து வருகிறது; தேசிய உணர்வு மதிக்கப்படுவதில்லை என்ற வருத்தம், பழைய பிரிட்டன்வாசிகளிடையே இருக்கிறது.அதனால் தான், ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இருக்க வேண்டுமா, விலக வேண்டுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, பொது ஓட்டெடுப்பும் நடத்தப்பட்டது. அதில், விலக வேண்டும் என்று முடிவையே, மக்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச், 31க்குள், 'பிரெக்சிட்' எனப்படும் அந்த விலகல் நடந்திருக்க வேண்டும். ஆனால், பல்வேறு சட்ட ரீதியான, ஆவண ரீதியான உறுதிகளை கொடுப்பதிலும், பெறுவதிலும் இழுபறி ஏற்பட்டது. அதனால், டேவிட் கேமரூன், தெரசா மே என்ற, இரண்டு பிரதமர்கள் பதவி விலக நேர்ந்தது. இவர்களை அடுத்து, கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு பெற்றார்.இவர், கொஞ்சம் அதிரடி பேர்வழி. ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் நிச்சயம் விலக வேண்டும் என, வலியுறுத்தினார்.

ஆனாலும், மக்களின் பேராதரவு இல்லாமல், எப்படி ஒரு பிரதமர், இவ்வளவு முக்கியமான முடிவை எடுக்க முடியும்; அதற்கு, அவருக்கு தார்மீக பலம் இருக்கிறதா என்று, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில் தான், பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலை அறிவித்தார், பிரதமர் போரிஸ் ஜான்சன்.


மக்கள் முன், தன் கருத்துகளை வைத்து, ஆதரவு திரட்டி, வலிமை பெற முனைந்தார். அவரின் கன்சர்வேடிவ் கட்சிக்கு எதிராக தொழிலாளர் கட்சி மோதியது.அதன் தலைவர் ஜெர்மி கோபைன்.

ஓட்டு அளிக்கவில்லைபார்லிமென்ட் தேர்தலில் முக்கியமான கேள்வி, பிரெக்சிட் வேண்டுமா, வேண்டாமா என்பதே. தொழிலாளர் கட்சி தடுமாற துவங்கியது; ஜெர்மி கோபைன் வேண்டுமென்றோ, வேண்டாமென்றோ முடிவுகள் தெளிவாக சொல்லவில்லை. 'இன்னொரு முறை, பொது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். முன் நடந்த ஓட்டெடுப்பில், மக்கள் தெளிவாக ஓட்டு அளிக்க வில்லை. 'இப்போது பின் விளைவுகளையும், இதர பிரச்னைகளையும் புரிந்து கொண்டிருப்பர். அதனால், வேறு மாதிரி ஓட்டளிக்கலாம்' என்றெல்லாம் பேசினார், ஜெர்மி கோபைன்.

போரிஸ் ஜான்சனோ, 'பிரெக்சிட் வேண்டும்' என, தெளிவாக சொன்னார்; அதாவது, ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அதனால், பார்லிமென்ட் தேர்தல் முடிவு, கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவாக வந்தது. மொத்தம் உள்ள, 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில், தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி, 48 இடங்களிலும், தாராளமய ஜனநாயகவாதிகள் அமைப்பு, 11 இடங்களிலும், டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி, எட்டு இடங்களிலும், பிற கட்சிகள், 15 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடந்த, 1987ல், கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த, மார்கரெட் தாட்சர் பெற்ற அபாரமான வெற்றிக்கு பிறகு, போரிஸ் ஜான்சன் பெற்றுள்ள வெற்றி தான் மிகப் பெரியது. சுவாரஸ்யமே இங்கிருந்து தான் தொடங்குகிறது; தொழிலாளர் கட்சிக்கு செல்வாக்குள்ள, 24 தொகுதிகளில், கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அரசியல் விவாதங்கள்பல தொகுதிகளில், தொழிலாளர் கட்சியின் ஓட்டுகள், கன்சர்வேடிவ் கட்சியினருக்கு விழுந்துள்ளன. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், தொழிலாளர் கட்சி, தங்களது ஓட்டுகளில், 20 சதவீதத்தை, கன்சர்வேடிவ் கட்சியினரிடம் இழந்துள்ளது. இந்த விபரங்கள், ஒன்றல்ல; பல செய்திகளை சொல்கின்றன. அதாவது, இடதுசாரிகள் படிப்படியாக, மக்களிடம் இருந்து விலகி போய் விட்டனர் என்பதே, முதல் செய்தி.

'டுவிட்டர்' சமூகவலைதளத்தில், அரசியல் விவாதங்கள் செய்வதிலும், கட்சிக்குள்ளேயே, 'யார் உத்தமமான இடதுசாரி' என விவாதிப்பதிலுமே, இவர்கள் நேரத்தை செலவழிக்கின்றனர். பழைய இடதுசாரி லிபரல்களை கூறுபோட்டு, தங்களை மேலானோராக காட்டிக் கொள்கின்றனர்.

மேலும், பல்கலைக்கழக வளாகங்களில், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து, தாங்கள் கருத்துப் பரவல் செய்து கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். இடதுசாரி லிபரல் என்றாலே, அவர் இப்படித் தான் என்று எட்ட முடியாத உயரத்தை, தங்களுக்குத் தாங்களே வகுத்துக் கொண்டு, கற்பனாவாதத்தில் திளைக்கின்றனர்.


மக்களுடைய அடிப்படை பிரச்னைகளான வேலை இழப்பு, தொழில்களால் ஏற்படும் பாதிப்புகள், விவசாய கூலிகள் குறைவது போன்றவற்றை விட்டு, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், கார்பன் காலடித்தடம் என்றெல்லாம், புதிய சொற்களையும் கருத்துகளையும் பேசி, புதிய மேல்தட்டு வர்க்கமாக தங்களைச் சித்தரிக்கின்றனர். இடதுசாரி லிபரல் என்றாலே, அவர் கடவுள் மறுப்பாளராக, மரபுகளை ஒதுக்குபவராக இருக்க வேண்டும். தேசம், தேசியத்தை மறுப்பவராக இருக்க வேண்டும்.

கலை, கலாசாரத்தை புறக்கணிப்பவராக இருக்க வேண்டும். இவை, தற்போதைய புதிய வரையறைகள். இதன் விளைவு தான், பிரிட்டனின் தொழிலாளர்கள் கட்சி, அடித்தட்டு மக்களிடம் இருந்து விலகிப் போனது.ஜெர்மி கோபைனால், தெளிவான வழியை காட்ட முடியவில்லை. அவரது பேச்சுகளும், நிலைப்பாடுகளும், அவரது புகழ் மென்மேலும் சரிவடையவே உதவின.

சர்வதேச ஊடகங்கள்போரிஸ் ஜான்சன், தன் சொந்த பலத்தால், இவ்வளவு பெரிய வெற்றியை பெறவில்லை. அவரை ஒரு, 'அரசியல் கோமாளி' என்றே, சர்வதேச ஊடகங்கள் வர்ணிக்கின்றன. ஆனால், தொழிலாளர் கட்சியின் தெளிவின்மை, மேட்டிமைத்தனம், யதார்த்தத்தில் இருந்து விலகிய நிலை போன்றவையே, கன்சர்வேடிவ் கட்சிக்கு உதவின.


எவற்றை எல்லாம் தொழிலாளர் கட்சி கைவிட்டதோ, அவற்றை, கன்சர்வேடிவ் கட்சி கையில் எடுத்துள்ளது. தேசியம் அதன் முக்கிய முழக்கம். கலை, கலாசாரம், மரபுகளை மீட்பது எல்லாம், இவற்றின் குறிக்கோள். 'பிரிட்ஸ்' என்ற பெருமித உணர்வுக்கு உளப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்குகிறது இக்கட்சி.இந்த அணுகுமுறையால் தான், மக்கள் பெருமளவு, கன்சர்வேடிவ் கட்சி பக்கம் நகர்ந்துள்ளனர். இது, உலகமெங்கும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில், 2014 லோக்சபா தேர்தலை விட, 2019 தேர்தலில், பா.ஜ., கூடுதல் இடங்களை பெற்றதற்கும், இந்த அணுகுமுறையே காரணம். விவசாயிகள், தலித், சிறுபான்மையினர் எல்லாம், பா.ஜ.,வுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று சொல்லப்பட்டது. அது, 2019 தேர்தலில் பொய்யானது; பா.ஜ.,வுக்கு அவர்கள் ஓட்டு போட்டனர்.

ரஷ்யாவின் புடின், ஜப்பானின் சின்சோ அபே, சீனாவின் ஸீ ஜின்பிங், துருக்கியின் எர்டோகான், இஸ்ரேலின் நெதன்யாஹு, பிரேசிலில் போல்சனாரோ, ஆஸ்திரேலியாவில் ஸ்காட் மோரிசன் போன்றோர், இத்தகைய புதிய வலதுசாரி தலைவர்களாக பரிணமித்திருக்கின்றனர்.

தெளிவின்மை, குழப்பம், அனைவரையும் திருப்திப்படுத்தும் அணுகுமுறை, மேட்டிமைத்தனம் ஆகியவற்றை மக்கள் முற்றிலும் நிராகரிக்கின்றனர். தங்களை நன்கு புரிந்தவர்களுக்கு அவர்கள் ஓட்டளிக்கின்றனர். தங்களிடம் இருந்து விலகிப் போனோரை விரல் நுனியால் ஒதுக்கியும் வைக்கின்றனர். போரிஸ் ஜான்சன் வெற்றி, மக்களின் தேர்வுகளை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

-ஆர்.வெங்கடேஷ்


பத்திரிகையாளர்

pattamvenkatesh@gmail.com
98410 53881

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement