Advertisement

ஏமாற்றாதே! ஏமாறாதே!

Share

''குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்குருட்டு உலகமடா! இதுகொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்திருட்டு உலகமடா தம்பிதெரிந்து நடந்து கொள்ளடா இதயம்திருந்த மருந்து சொல்லடா''- 'மகாதேவி' (1957) படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய இப்பாடல் வரிகள் 62 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் மின்னும் வரிகளாய் இருக்கின்றன என்பது வியப்பு.

'ஏமாற்றுதல்' அக்காலம் துவங்கி இக்காலம்வரை தொடர்கிறது. ஏமாறுவதால் ஏமாற்றுகிறார்களா? அல்லது ஏமாற்றுவதால் ஏமாறுகிறார்களா? என்பது கோழியிலிருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா? எனும் புராதனக் கேள்வியைத்தான் நினைவூட்டுகிறது.ஏமாற்றுபவர்கள், ஏமாறுபவர்கள் அன்றும் இருந்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர்.

'கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா?'என்பது கிராமத்து சொலவடை. கள்ளன்தான் பெரிது என்பது போல் இன்று ஏமாற்றுபவர்கள்தான் பெரிது. நாட்டு நடப்பு இப்படித்தான் இருக்கிறது.ஏமாற்றும் வலை''இதோ பார்! நான் இருக்கிறேன் ஏமாற'' என அப்பாவிகள் எவரும் ஏமாற்றும் எத்தர்களுக்கு முன்புபோய் சொல்வதில்லை. ஆனால் ஏமாற்றுகிற எத்தர்கள் இவர்களை எப்படித்தான் இனங்கண்டு அணுகி ஏமாற்றுகிறார்களோ தெரியவில்லை. அது மாபெரும் நுட்பமோ, என்னவோ?படித்தவர், மற்றவர் வேறுபாடு இல்லாமல் இரு பிரிவினரும் ஏமாற்று வலையில் வீழ்கின்றனர். மீன்பிடி வலையில் பெரிய மீன்களும், சின்ன மீன்களும் விழுவதைப்போல. ஏமாறுகிறவர்கள் பணக்காரர்களாக இருந்தால் பாதகமில்லை. அவர்கள் இழக்கிற பொருள் அவர்களின் ஒருநாள் அல்லது ஒருமாத வருமானம்.ஏழைகள், நடுத்தர மக்களுக்கு அந்த இழப்பு பல ஆண்டுகள் சேமிப்பு. 'எத்தனை கோடி வேண்டுமானாலும் வங்கி, அரசிடம் கடன் பெற்றுத் தருகிறோம்! மகன் அல்லது மகளுக்கு வேலைவாங்கித் தருகிறோம்! ஒரு லட்சம் கொடுத்தால், 2 லட்சம் ரூபாய் தருகிறோம்' என வண்ண வண்ண வலைகளை விரிப்பர்.அமைச்சர், அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை காண்பிப்பர். யார், யாருக்கெல்லாம் வேலை வாங்கிக் கொடுத்தோம் என பொய் சொல்வர். நம் மனதில் ஆசையைத் துாண்ட அடிக்கடி நினைவூட்டுவர். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். இறுதியில் அவர்கள் விரித்த வலையில் நம்மை விழச்செய்து ஏமாற்றிவிடுவர்.ஏமாற்று - இன்று'ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 17 லட்சம் ரூபாய் மோசடி'-இது தினமலர் நாளிதழில் ஜூலை7 ல் வெளியான செய்தி.

ரயில்வேயில் வேலைவாங்கித் தருவதாகக்கூறி, வடமதுரையைச் சேர்ந்த இளைஞரிடம் 17 லட்சம் ரூபாயை கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த 2 பேர் வாங்கினர். நேர் காணல் நடத்தி, மேற்கு வங்கம் ஹவுராவில் 3 மாதம் பயிற்சி கொடுத்து மோசடி செய்து ஏமாற்றிய சோகக்கதை. அதே ஏமாற்றுப் பேர்வழிகள் நெல்லை இளைஞர் ஒருவரையும் ஏமாற்றி பணம் பறித்தனர் என்கிறது செய்தி.காவல்துறையில் வேலைவாங்கித் தருவதாக எ.புதுப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் 3.50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றிய செய்தியும் வெளியானது. மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக்கூறியதை நம்பி, திண்டுக்கல் சேடபட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த 4 பேரிடம் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார். இவர்களிடம் கன்னிவாடியைச் சேர்ந்த பெண் ஒருவர் 15 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார்.இவையன்றி வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக்கூறி,கோடிக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியது, ஒரு லட்சம் கொடுத்தால், 2 லட்சம் ரூபாய் தருவதாகக்கூறி ஏமாற்றியது, முகநுால் பழக்கத்தில் லட்சக்கணக்கில் பணம் இழந்த பெண்களின் சோகக் கதைகள் என இப்படி பல்வேறு வகை ஏமாற்றுக்கள் அவ்வப்போது செய்திகளாக வந்த வண்ணம் உள்ளன.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை பார்ப்போம்.ஏமாறக் காரணம்'நான் இத்தனை லட்சம் ரூபாய் கொடுத்து என் மகனுக்கு வேலை வாங்கினேன்,' என தெரிந்தவர்கள், நண்பர்கள் கூறக்கேட்டும் போட்டித் தேர்வு எழுதி, தன் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காத நிலையிலும், ஏதாவது வேலை பார்த்தால்தான் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து கடமையை நிறைவேற்ற முடியும் என்கிற கட்டாயம். குடும்ப அங்கத்தினர்களின் நச்சரிப்பு, நிர்பந்தத்தினால் குடும்பத் தலைவர்கள் இப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறுகின்றனர். நிலம், நகைளை விற்று அல்லது நகைகளை அடகு வைத்து, வங்கியில் கடன் பெற்று, சேமிப்பை எல்லாம் சேர்த்து மொத்தமாக 5 லட்சம், 10 லட்சம், 15 லட்சம் ரூபாய் என கொடுத்து ஏமாறுகின்றனர். கடைசியில் வேலை கிடைக்காமல், கையிலிருந்த பணம் போய், கடனாளியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதையெல்லாம்விட, 'ஏமாற்றப்பட்டோம்' என்கிற மன உளைச்சலை அவர்களால் தவிர்க்க முடியாது போய், உடல்நலம் கெட்டு, மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு திட்டம்போட்டு ஏமாற்றும் எத்தர்கள்தான் காரணம்.

ஏமாற்றாதே
திருடுதல் ஒரு குற்றம். ஆனால் அது மன்னிக்கப்படலாம். வழிப்பறி ஒரு குற்றம். அதுவும்கூட மன்னிக்கப்படலாம். ஆனால், ஏமாற்றுவது கொடிய குற்றம். ஏனெனில் அது வஞ்சக எண்ணத்துடன் செய்யக் கூடிய குற்றம். முன்னவை இரண்டும் தீயினால் சுட்ட புண். பின்னது நாவினால் சுட்ட வடு.'ஈசியாக மணி பார்க்க' எண்ணுகிற ஏமாற்றுப் பேர்வழிகளே! உங்களுக்கு ஒரு வார்த்தை! பிறறை ஏமாற்றிப் பணம் பண்ணுதல் ஒரு இழிதொழில். அது விபச்சாரத்தை விடக் கேவலமானது. எளிய மக்களை ஏமாற்றி ஏப்பம் விடலாம் என எண்ணாதீர். அதற்கு நிச்சயம் தண்டனை உண்டு.உங்கள் மீது ஊர் மற்றும் குடும்பம் காரி உமிழும். பிறரை ஏமாற்ற வேண்டும் என கனவிலும் நினைக்காதீர்கள். உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டும் என உறுதி பூணுங்கள். செய்த தவறுக்கு வருந்துங்கள். திருந்தி வாழுங்கள்.

ஏமாறாதீர்'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு'- திருக்குறள். யாரும் எந்நாளும் ஏமாறக்கூடது என்றுதான் திருவள்ளுவர் இக்குறளை இயற்றினார். வேலை வாங்கித் தருகிறேன், கடன் வாங்கித் தருகிறேன், கடன் தருகிறேன் என யார் உங்களை அணுகினாலும், கிஞ்சிற்றும் பொருட்படுத்தாதீர். அவர்கள் என்ன சொன்னாலும் ஏற்காதீர்கள். சபலப்படாதீர்கள்; சலனப்படாதீர்கள். வீட்டில் நிர்பந்தம், குடும்பச்சூழல், பையனுக்கு 'எப்படியாவது' வேலை வாங்க வேண்டும் என்ற கட்டாயம், தேர்வு எழுதித் தேறவில்லை என்கிற சமாதானங்களை ஏற்று குறுக்குவழியை தேர்ந்தெடுக்காதீர்கள். நேர்மையாக, நியாயமாக நமக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது தவறாமல் கிடைக்கும். மீண்டும், மீண்டும் கடுமையாக உழைத்து மகனை, மகளைதேர்வெழுதச் சொல்லுங்கள். லஞ்சம் கொடுத்து எதையும் வாங்காதீர்கள். அது நாட்டுக்கும், உங்களுக்கும் கேடு பயக்கும். எப்படிப்பட்ட செல்வாக்கான நபராக இருந்தாலும், அவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறாதீர்கள்.ஆசைக்கு அடிபணியாமல் அறிவு கொண்டு ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செயல்படுங்கள். ஏமாறுவதைத் தவிர்க்கலாம்

.சி.பொன்ராஜ், வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை88258 31833.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement