Advertisement

'குட்கா' கடத்தலுக்கு பயன்படும் புதிய சாலை

அப்போது தான், மழை பெய்து ஓய்ந்திருந்தது. இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''புதுசா ரோடு போட்டது, ரொம்பவே வசதியா போயிடுத்தாம் ஓய்...'' என, முதல் தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''என்னன்னு வெவரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''குட்கா விற்பனைக்கு, அரசு தடை போட்டிருக்கு... ஆனால், பல மாவட்டங்கள்ல, குட்கா விற்பனை ஜோரா நடந்துண்டு இருக்கு ஓய்... ''வடமாநிலங்கள்ல இருந்து, லாரிகளில் குட்கா, பூந்தமல்லிக்கு வர்றது... அங்கிருந்து, சென்னையின் பல பகுதிகளுக்கு பிரிச்சி எடுத்துண்டு போறா... இப்போ, பூந்தமல்லியில, கெடுபிடி அதிகமாகிடுத்து ஓய்... ''அதனால, புதுசா போட்டுருக்கற, சென்னை வெளிவட்டச்சாலை வழியாக, மணலி புதுநகருக்கு லாரிகள்ல குட்கா வர்றது... அங்கிருந்து அதிகாலையில, யாருக்கும் சந்தேகம் வராம இருக்க, விலை உயர்ந்த கார்களில் எடுத்துண்டு போய், சப்ளை பண்ணறா ஓய்...

''உள்ளூர் அதிகாரிகளுக்கு, மாசம், 20 லட்சம் ரூபாய் கொடுக்கறாளாம் ஓய்... உயர் அதிகாரிகள் விசாரிச்சா, பலர் பேர் மாட்டுவாளாம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மருத்துவக் கல்லுாரி அரசியல் நடக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

''கொஞ்சம் விவரமா சொல்லு பா...'' எனக் கேட்டார். அன்வர்பாய்.

''நாகை மக்கள், தரமான சிகிச்சை பெறணுமுன்னா, 100 கி.மீ.,யில் உள்ள தஞ்சாவூருக்கு தான் போகணும்... அதனால, அரசு மருத்துவக் கல்லுாரி, நாகையில் அமைக்க, மத்திய அரசு, 365 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்குங்க... ''அதுக்காக, நாகை ஒரத்துாரில், அரசுக்கு சொந்தமான, 84 ஏக்கர் இடம் தேர்வு செஞ்சி, மத்திய அரசிடம் ஒப்புதலும் வாங்கிட்டாங்க...

''இந்நிலையில, மருத்துவக் கல்லுாரியை, மயிலாடுதுறையில் அமைக்கணுமுன்னு, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலர் கல்யாணம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுருக்காருங்க... ''மாவட்டத்தின் தெற்கு சட்டசபை தொகுதிகளான நாகை, கீவளூர், வேதாரண்யம் பகுதி மக்களுக்கு, தி.மு.க., துரோகம் செய்யுறதா, அ.தி.மு.க.,வினர் பிரசாரம் பண்ணுறாங்க... ''அதே நேரம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் மக்களுக்காக, மருத்துவமனையை கொண்டு வருவோமுன்னு, அந்த பகுதியில, தி.மு.க., பிரசாரம் பண்ணுதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

''மதுரையில, 'வாட்ஸ் ஆப்' குழு மூலமா, குழந்தையோட சிகிச்சைக்கு உதவி பண்ணிருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''நல்ல விஷயமா இருக்கு பா...'' என்றார், அன்வர்பாய்.

''மதுரை உட்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலர், 'நண்பேண்டா' என்ற, 'வாட்ஸ் ஆப்' குழு ஆரம்பிச்சுருக்காவ வே... ''அந்த குழுவுல இருக்கற ஒருத்தரோட, 10 மாத ஆண் குழந்தை மீது, கொதிக்கிற பால் கொட்ட, உடல் வெந்த நிலையில, மதுரையில இருக்கற ஆஸ்பத்திரியில சேர்த்துருக்காவ வே...

''சிகிச்சைக்கு பணமில்லாமல் அவரு தவிப்பதை அறிந்த, 'நண்பேண்டா' நண்பர்கள், 'வாட்ஸ் ஆப்' மூலமா, ஒரே நாள்ல, 1 லட்சம் ரூபாய் திரட்டி கொடுத்துருக்காவ... 'குழந்தைக்கு சீக்கீரம் குணமாகிடுமுன்னு' ஆறுதலும் சொல்லிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''நல்லவக இருக்குறதால தான், அப்பப்ப மழை பெய்யுது பா...'' என்றபடியே, அன்வர்பாய் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    குட்கா எந்த மந்திரி பினாமி ஏஜெண்டு? ஊரை கெடுப்பவர்கள் இவர்களே..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கருமேகத்தில் தோன்றும் வெள்ளி சரிகை போன்று இத்தகைய நல்ல தொண்டுகளுக்கும் வாட்ஸப் பயன் படுவது மகிழ்ச்சி அளிக்கிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement