Advertisement

மருத்துவர்களுக்கு முதல்வர் இ.பி.எஸ்., கருணை காட்டுவாரா?

டாக்டர் எஸ்.செந்தில்குமார், தேசிய ஊரக சுதாதார திட்ட ஒருங்கிணைப்பாளர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 2009 முதல், என்.ஆர்.எச்.எம்., எனப்படும், தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் ஆலோசகர், ஆயுஷ் மருத்துவர்கள், அலுவலர்களாக பணிபுரிந்து வருகிறோம். உரிய கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, நேர்காணல், சமூக நீதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர்களாக பணியமர்த்த பட்டோம்.

துவக்கத்தில், நாளொன்றுக்கு, 1,000 ரூபாய் அடிப்படையில், மாதத்திற்கு, 13 நாட்கள் என, தினக் கூலிகளாக வேலை பார்த்தோம். மருத்துவ விடுப்பு இன்றி, அரசு விடுமுறை நாட்களிலும், பணி செய்தால் மட்டுமே, ஊதியம் கிடைக்கும். அயல் பணிகளுக்கும், எந்த வித ஊதியமின்றி பணிபுரிந்து வந்தோம். கடந்த, 2016 முதல், மாதம், 26 ஆயிரம் தொகுப்பூதியம், 5 சதவீத ஊதிய உயர்வு என்ற அடிப்படையில், தற்போது, 31, ஆயிரத்து, 200 மாத ஊதியம் பெற்று வருகிறோம். தமிழகத்தில், எந்த அரசு திட்டத்திலும், அரசு பணியிலும், மருத்துவர்களை தினக்கூலி, தொகுப்பூதியத்தில் பணியமர்த்தாமல் கால முறை ஊதியத்தில் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என, அரசு ஆணை இருந்தும், நாங்கள், தொகுப்பூதியத்திலேயே தொடர்கிறோம்.

தேசிய ஊரக சுகாதார திட்டத்தில், தொகுப்பு ஊதியத்தில், வேலைவாய்ப்பு பணி மூப்பு அடிப்படையில், பணியமர்த்தப்பட்ட ஆங்கிலமுறை மருத்துவர்கள், பின், காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அரசு சித்த மருத்துவ அலுவலர்ளுக்கு இணையான பணி செய்து வருகிறோம். அவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மருத்துவப் பணிகளும், பயிற்களும், நாங்களும் பெறுகிறோம். அரசு உதவி சித்த மருத்துவ அலுவலர் பெறும், அடிப்படை சம்பளம் கூட, 11 ஆண்டுகளாக பணி புரிந்த பிறகும், எங்களுக்கு கிடைக்கவில்லை.

இதை ஆராய்ந்து, நன்கு விசாரித்து, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்கி, தேசிய சுகாதார திட்டத்தில் பணிபுரியும் ஆயுஷ் மருத்துவர்களின் மானம் காத்து, நல்வாழ்வு வாழ, தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் கருணை காட்ட வேண்டும்!

***

இல்ல விழாக்களில் அரசியல் பேசுவது அநாகரிகமானது!ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மங்களகரமான வைபவம் என்பதை கூட மறந்து, திருமண மேடையை, அரசியல் மேடையாக்கி, வாய்க்கு வந்தபடியெல்லாம், அரசியல்வாதிகள் பேச துவங்கி விடுகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சமீபத்தில் ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 'மண்புழு போல், ஊர்ந்து சுயமரியாதையை இழந்து, முதல்வர் பதவியை பெற, நான் விரும்பவில்லை' என பேசி இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன், ஓர் இஸ்லாமியர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், 'இஸ்லாமியர்களின் திருமண நிகழ்ச்சி சிறப்பாக இருக்கிறது. 'ஆனால், ஹிந்துக்களின் திருமண நிகழ்ச்சி கேவலமாக இருக்கிறது. தீயை எரிப்பதன் வாயிலாக, புகை மண்டலத்தை ஏற்படுத்துகின்றனர்' என அவதுாறாக பேசியது, திருமணத்திற்கு வந்திருந்த இஸ்லாமியர்களுக்கு கூட வெறுப்பை ஏற்படுத்தியது. ஹிந்து மதத்தைச் சார்ந்தோர், சாஸ்திரப்படி புரோகிதர் மந்திரம் சொல்ல, அக்னி சாட்சியோடு, திருமணம் செய்வது வழக்கம்; இதில் ஈடுபாடு இல்லாதோர், இப்படி அவதுாறாக பேசக்கூடாது.

ஸ்டாலின் பேசியது, தி.மு.க., பொதுக்கூட்டம் அல்லது பொதுக்குழு கூட்டமாக இருந்தால், யாரும் இதை குறை சொல்ல போவதில்லை. திருமண விழாவில் பங்கேற்று இருக்கும் மண வீட்டாரது நண்பர்கள், உறவினர்கள் யாரும் கட்சிக் கூட்டத்திற்கு வந்தவர்கள் அல்ல. அவர்கள் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களாகவோ, கட்சி சார்பற்றவர்களாக கூட இருக்கலாம். ஸ்டாலின் பேச்சை கண்டிப்பாக ரசிக்க மாட்டார்கள்; இது, அவர்களுக்கு சங்கடமான நிலையை தான் ஏற்படுத்தும். திருமண வீட்டில் மணமக்களை வாழ்த்தி, அவர்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய, ஆலோசனை கூற வேண்டும். அதை விடுத்து, திருமண வீட்டில், அரசியல் பேசுவதும், ஹிந்து மதத்தை விமர்சிப்பதும், அநாகரிகமான செயல்.

கட்சி தொண்டர்களே...மண விழாக்களுக்கு, தலைவர்களை தலைமை தாங்க அழைக்காதீர்கள். அதை அரசியல் மேடையாக்கி, அங்கே கூடியிருக்கும் நுாற்றுக்கணக்கான உறவினர்களும், நண்பர்களும் தேவையில்லாமல் முகம் சுளிக்கும் சூழலை ஏற்படுத்தி விடுவர். அது, அவர்களுக்கு, உங்கள் மீதே வெறுப்புணர்வை கூட ஏற்படுத்தலாம்!

***

சேவை கட்டணத்தை ரத்து செய்யணும்!கே.சூர்யா, பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 2016ல், மத்திய அரசால், பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில், பொதுமக்கள் மின்னணு பரிமாற்றத்தற்கு மாற வேண்டுமென, பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், 'ஆன் - லைன்' வாயிலாக, ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது; இது, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

ரயில் நிலையம் சென்று, வரிசையில் காத்திருந்து, கால விரயம் ஏற்படுவதை, இந்த நடவடிக்கை குறைத்தது. ரயில் பயணியர், மகிழ்ச்சியோடு, மத்திய அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த சேவைக் கட்டணம் ரத்தானதால், ஆண்டுதோறும் ரயில்வே துறைக்கு, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது எனக் காரணம் காட்டி, இந்தாண்டு செப்., 1 முதல், 'ஆன் - லைன்' டிக்கெட் முன்பதிவுக்கு, மீண்டும் ரயில்வே நிர்வாகம், சேவைக் கட்டணம் வசூலிக்க துவங்கி விட்டது.

இதனால், 'ஆன் - லைன்' டிக்கெட் பதிவு குறைந்து, மீண்டும் ரயில் நிலைய டிக்கெட் பெற கவுன்டர்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், ரயில்வே நிர்வாகம் கூடுதல் கவுன்டர்களை உருவாக்கவும், கூடுதல் ஊழியர்களை பணி அமர்த்த வேண்டிய சூழ்நிலையும் உருவாகி விட்டது. கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்தால், ரயில்வே துறைக்கு கூடுதல் செலவினம் உருவாகாதா... இதை மத்திய அரசு யோசிக்க வேண்டும். ரயில்வே துறை என்பது, மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சேவை துறை, இதில், லாப, நஷ்டக் கணக்கு பார்ப்பதை விட, பயணியர் மற்றும் பொதுமக்களின் வசதிகளை தான் கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, 'ஆன் லைன்' முன்பதிவுக்கான சேவைக் கட்டணத்தை, மத்திய அரசு மீண்டும் ரத்து செய்தால், பொதுமக்களுக்கு, அது மிகுந்த பலனை தரும். ரயில்வே கவுன்டர்களில் கூட்டம் குறையும்; கூடுதல் கவுன்டர்களோ, பணியாளர்களோ நியமிக்க வேண்டிய அவசியம் உருவாகாது. குறிப்பாக, ரயில் பயணியரின் பொன்னான நேரம் வீணாகாமல் பாதுகாக்கப்படும். இதை, ரயில்வே துறையும், மத்திய அரசும் பரிசீலிக்க வேண்டும்!

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • V S Sriraam - BENGALURU,இந்தியா

    Surya Pollachi need to think that for reaching railway station counter , people have to spend money for that with transaction amount they can do it from home. Always don't expect everything for free.

  • erimalar - Madras,இந்தியா

    குட்காவுல கரை கிழங்கையே காட்டிபுட்டோம்டா

  • erimalar - Madras,இந்தியா

    யாரு யாருகிட்ட கருணை காட்டுறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement